

ராஜீவ் மேனனின் ‘மின்சாரக் கனவு’ படத்தில் பிரபுதேவாவின் ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கஜோல். அஜய் தேவ்கனுடனான திருமணத்துக்குப் பின் பாலிவுட்டிலிருந்து ஒதுங்கியிருந்த கஜோல், விளம்பரங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். 20 ஆண்டு இடைவேளைக்குப் பிறகு ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் வழியே மீண்டும் தமிழுக்கு வருகிறார். சமீபத்தில் மும்பையில் நடந்த இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கஜோல், ‘‘தமிழில் வசனங்களைக் கற்றுக்கொண்டு பேசி நடிப்பதில் கஷ்டம் இருப்பதாலேயே, தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தேன். ‘விஐபி – 2’ படத்தின் கதையை தனுஷிடம் கேட்டபோது அவரிடம் இதைத்தான் சொன்னேன். அதுக்கு அவர், ‘இந்தப் படத்தில் உங்களுக்கு அதிகம் வசனம் இருக்காது!’ என்று கூறி என்னைச் சம்மதிக்க வைத்தார். கடைசியில் பக்கம் பக்கமாக வசனத்தைக் கொடுத்து படிக்க வைத்து, என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு அதில் வருத்தம் இல்லை. கதையும் கதாபாத்திரமும் என்னைக் கவர்ந்ததால், எல்லாமே எளிமையாக இருந்தது. தனுஷின் ரசிகை நான். அதேபோல், ரஜினி சாரின் மகள் சௌந்தர்யா இயக்கிய படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருவதும் மகிழ்ச்சி!’’ என்றார்.
**