

சென்னையில் நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தேன். அது 1999-ம் ஆண்டு. குமுதம் வார இதழில் எனது சிறுகதையொன்று வெளியாகியிருந்தது. அன்று உதவி இயக்குநராக இருந்த வெற்றிமாறன் அதைப் படித்திருக்கிறார். கதை அவருக்குப் பிடித்துவிட்டது. தனது இயக்குநர் பாலுமகேந்திராவிடம் அந்தக் கதையை கதை நேரத்துக்காகப் பரிந்துரைத்திருக்கிறார். என் பேஜர் சாதனத்துக்கு பாலுமகேந்திராவிடமிருந்து அழைப்பு. உடனே அவருக்குப் பேசினேன்.
“ சன் டிவியின் ‘கதை நேரம்’ நிகழ்ச்சிக்காக உங்கள் கதையைப் படமாக்கலாம் என்றிருக்கிறேன்; உங்கள் அனுமதி வேண்டும்” என்றார். “நான் எழுதிய கதையை நீங்கள் படமாக்குவது எனக்குப் பெருமை, முடிந்தால் நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்றேன். அடுத்த நாள் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னார். வேறு வேலைகள் காரணமாக நான் அன்று போக முடியவில்லை.
ஒரு கல் சிலையாகிவிட்டது
அடுத்த நாள் பாலுமகேந்திரா அலுவலகத்துக்குப் போனேன். அங்கிருந்த அவரது மற்றொரு உதவியாளர் துரை. செந்தில்குமாரிடம், என்னைப் பற்றிச் சொன்னேன். அவர் என்னை உள்ளே அழைத்துச் சென்றார். பாலுமகேந்திரா என்னை உட்காரச் சொன்னார்.
“உங்கள் கதையை நான் எப்படிப் படமாக்கியிருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா?” என்று கேட்டார். ஒரே நாளில் படமாகிவிட்ட என் சிறுகதையின் திரை வடிவத்தை நான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டேன். ஆனாலும் பாலுமகேந்திரா, வெற்றிமாறனை அழைத்து என்னைப் படம் பார்க்கச் செய்தார். அதில் டைட்டில் கார்டில் பாலுமகேந்திரா பெயர் இடம்பெறுவதற்கு முன் ‘கதை: சிவதாணு’ என தமிழ், ஆங்கிலத்தில் பெரிதாகப் போட்டிருந்தார். காட்சி முடிந்து திரும்பி வந்ததும் “எப்படி இருந்தது?” என்று கேட்டார். “ நான் ஒரு கல்லைக் கொடுத்தேன், நீங்கள் சிலையாக்கிவிட்டீர்கள்” என்றேன்.
நடிகனாக்கினார்
அதன் பிறகு பாலுமகேந்திராவை எனது ஆட்டோவில் பலமுறை அழைத்துச் சென்றிருக்கிறேன். கதை நேரத்தின் ஆறு கதைகளில் என்னை நடிக்கவைத்தார். ஒரு முறை இயக்குநர் சங்கத்தில் உதவி இயக்குநர்களுக்குப் பாடம் எடுக்கப் போகும்போது, என்னையும் கூட்டிப்போனார். உதவி இயக்குநர்களுக்கு அவர் இயக்கிய என்னுடைய கதையான ‘ஏய் ஆட்டோ’வைத் திரையிட்டுக் காட்டினார். பின்னர், அவர்களிடம், இந்தக் கதையை எழுதியது இவர்தான் என்று என்னை அறிமுகப்படுத்தினார்.
2012-ம் ஆண்டு ‘பாலுமகேந்திரா ஹிட்ஸ்’ என்ற ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நானும் எனது நண்பர் ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் சிவசங்கரும் நடத்தினோம். தனது துணைவியாரோடு வந்திருந்தார் பாலுமகேந்திரா. அந்த நிகழ்ச்சிக்கு இளைஞர்களே பார்வையாளர்கள் பகுதியில் அதிக திரண்டிருந்தனர். ஒவ்வொரு பாடலையும் அவர்கள் கொண்டாட்டமாக ரசித்துக் களித்தனர். அது பாலுமகேந்திராவைச் சந்தோஷப் படுத்தியது. அவர் மீதான மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக என்னுடைய ‘கள்ளியங்காட்டு நீலி’ சிறுகதைத் தொகுப்பை பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம் செய்தேன்.
உனக்கே உயிரானேன்
‘தலைமுறைகள்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியைப் பார்த்துவிட்டு வரும்போதுதான் அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்பொழுது அவர், “சிவதாணு, இன்னும் நான் பலகாலம் உயிர்வாழ்வேன். உயிர் இருக்கும்வரை படங்கள் இயக்குவேன். படம் இயக்குவதை விட்டுவிட்டால் என் மூச்சுக்காற்று நின்றுவிடும்” என்றார். ‘ மூன்றாம் பிறை’ படத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசன் ‘கண்ணே கலைமானே’ பாடலில் ஒருவரி வரும். ‘உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே’. இந்த வரிகளை பாலுமகேந்திரா, சினிமாவைப் பார்த்துப் பாடுவது போலவே எனக்குத் தோன்றும்.
கட்டுரையாளர் - ஆட்டோ ஓட்டுநர், எழுத்தாளர், நடிகர்.