

“எந்தவொரு படத்திலாவது இயக்குநரை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு, கலாட்டா பண்ணிக் கேள்விப்பட்டிருக்கீங்களா? இந்தப் படத்தில் என்னை அப்படிப் பண்ணியிருக்காங்க. அந்த அளவுக்குக் கவலைகளை மறந்து அனைவரும் ரசிக்கும்விதத்தில், நாங்கள் என்ஜாய் பண்ணி ஒரு படம் பண்ணியிருக்கோம்” என்று டப்பிங் பணிகளுக்கு இடையே பேச்சைத் தொடங்கினார் ‘கவலை வேண்டாம்’ பட இயக்குநர் டிகே.
டீஸரைப் பார்த்தால் அடல்ட் காமெடி படம் போல் தெரிகிறதே…
கண்டிப்பாக இது அடல்ட் காமெடி படம் கிடையாது. இன்றைய தலைமுறையினர் எப்படிப் பேசிக்கொள்வார்களோ அதைப் படமாகப் பண்ணியிருக்கிறேன். இளைஞர்களின் தினசரி வாழ்க்கை அடல்ட் காமெடி கிடையாது. அந்த டீஸரில் உள்ள முதல் வசனம் எல்லோருடைய வீடுகளிலும் நடந்திருக்கும் விஷயம்தானே!
காதலை மையப்படுத்தி இதுவரை 10,000 படங்கள் வந்துவிட்டன. நீங்கள் பார்க்காததையெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால், திரைக்கதை அமைப்பில் இப்போதைய இளைஞர்களைக் கவரும் வகையில் பண்ணியிருக்கிறேன். அதுதான் புதுசு.
ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா மூவரையும் இயக்கிய அனுபவத்தைப் பற்றி..
ஜீவா ஒரு இயக்குநரின் நடிகர். அவருக்குத் தகுந்த நல்ல கதை இன்னும் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சஞ்சய் ராமசாமி மாதிரியான கதாபாத்திரத்திலும், வடசென்னையில் வாழும் ஒருவராகவும் அவரால் பண்ண முடியும். தமிழில் இருதுருவங்கள் கொண்ட கதாபாத்திரங்களை பண்ணும் நடிகர்கள் ரொம்ப கம்மி. அனைத்துக் கதாபாத்திரங்களையும் அருமையாகச் செய்யக்கூடிய நடிகர் ஜீவா.
காஜல் அகர்வாலை இதுவரை யாருமே நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரத்தில் ஏன் பயன்படுத்தவில்லை என்பது தெரியவில்லை. இந்தப் படத்தில் நடிப்பின் மூலமாக அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறார் என்று சொல்வேன். பாபி சிம்ஹாவை இதுவரை பெரும்பாலும் அழுக்காகவே காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் அவரை மாற்றி முழுக்க நல்ல உடையணிந்து நடிக்க வைத்திருக்கிறோம்.
காமெடி பேய்ப் படம் இயக்கி ஹிட்டாக்கிவிட்டு, ஏன் காதல் களத்துக்குள் வந்திருக்கிறீர்கள்?
காதல் கதைகள் எழுதுவது ரொம்ப கடினம். ஏனென்றால் அந்த உணர்வுகள் சரியாக அமையவில்லை என்றால் காதல் கதைகள் எடுபடாது. `யாமிருக்க பயமே' எனக்கு முதல் படமாக அமைந்தது. அப்படம் முடிந்தவுடன் அனைவருமே மீண்டும் பேய்ப் படம் பண்ணு, த்ரில்லர் படம் பண்ணு என்றார்கள். ஆனால் நான்தான் அதிலிருந்து முழுவதும் மாறுபட்டு முழுக்க ஒரு காதல் கதை பண்ணலாம் என்று இந்தக் கதையை எழுதினேன்.
`யாமிருக்க பயமே' வெளியாகிச் சில மாதங்கள் கழித்து, கொரியன் படத்தின் காப்பி என்று கூறினார்களே…
கொரியன் படத்திலிருந்து ஒரு காட்சி கூட `யாமிருக்க பயமே' படத்தில் இருக்காது. திரைக்கதையில் ஏதாவது ஒரு காட்சி இருந்தால்கூட, அப்படத்தின் காப்பி என்பதை நான் ஒப்புக்கொள்வேன். அந்தப் படத்தின் கதையமைப்பே அப்படி இருக்கிறது என்று சொன்னால், அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் ஏதாவது ஒரு படம் சொன்னால், என்னால் அதே போன்ற கதையமைப்பில் 10 டி.வி.டி.க்களை என்னால் தர முடியும்.
நான் அந்த கொரிய படத்தைப் பார்க்கவே இல்லை என்று சொல்ல மாட்டேன். என்னுடைய திரைக்கதை அமைப்பு வேறு, அவர்களுடைய திரைக்கதை அமைப்பு வேறு. முதலில் அந்த கொரியப் படம் பேய்ப் படமே கிடையாது. `யாமிருக்க பயமே' காமெடி பேய்ப் படம்.
என்னுடைய பொறுப்பு எனது படத்தை எப்படியாவது வெற்றியடைய வைக்க வேண்டும். திரையரங்குக்குள் வரும் ரசிகர்களுக்கு எந்தவொரு இடத்திலும் அலுப்பு ஏற்படக் கூடாது. இன்றைக்கு வேறுவேறு துறைகளில் வேலை பார்த்துக்கொண்டே இந்தக் காட்சியை இப்படிப் பண்ணியிருக்கலாமே என்று சொல்கிறார்கள். தற்போது சினிமா பார்ப்பவர்கள் அனைவருமே தன்னை ஒரு இயக்குநர் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
`யாமிருக்க பயமே' வெற்றிக்குப் பிறகு தொடர் பேய்ப் படங்கள் வரிசைகட்டி வருகின்றன. ஆரம்பித்து வைத்தவர் என்ற முறையில் உங்கள் கருத்து என்ன?
அது தமிழ் சினிமாவின் இயல்புதான். ஆனால், ரசிகர்கள் பயங்கரத் தெளிவு. எனக்கு போராடிக்காமல் என்ன வேண்டுமானாலும் சொல்லு என்பதுதான் அவர்களுடைய கருத்து. இன்றைக்கு இதுதான் ட்ரெண்ட் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் ட்ரெண்ட் என்று எதுவுமே கிடையாது. எதை வேண்டுமானாலும் சுவாரசியமாகப் பண்ணி ட்ரெண்ட் பண்ணிவிடலாம். எந்தவொரு திரைக்கதை அமைப்பிலும் ஒரு காட்சியைக்கூட போராடிக்காமல் பண்ணினால் அந்தப் படம் கண்டிப்பாக ஹிட். அதுதான் தமிழ் சினிமாவில் எப்போதுமே உள்ள ட்ரெண்ட்.
`யாமிருக்க பயமே' 2-ம் பாகம் பண்ணும் எண்ணம் இருக்கிறதா?
எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது இல்லை. பேய்ப் பட ட்ரெண்ட் எல்லாம் முடிந்தவுடன் பண்ணுவேன். அது `யாமிருக்க பயமே' 2-ம் பாகமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், மற்றொரு காமெடி பேய்ப் படத்துக்கான கதை தயாராக இருக்கிறது. இப்போது பண்ணினால் நானும் கும்பலோடு பண்ணிய ஒரு படமாகத்தான் தெரியும்.