

கமல் அந்த காட்சியைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தார். கமல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வருகிற அந்தக் காட்சி, த்ரில்லாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். அப்படி கமல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வந்தால் காயம் பட்டுவிடுமே என்று, அவருக்கு ஒரு டூப்பையும் ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். அந்தக் காட்சியைக் கடைசியாகத்தான் எடுக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்த கமல் ‘‘நீங்க டூப் போட்டு எடுக்கப் போறது எனக்குத் தெரிஞ்சுட்டு. அப்படி டூப் போட்டால் லாங் ஷாட்டில்தான் எடுப்பீங்க. அது த்ரில்லாக இருக்காது. நானே உடைச் சுட்டு வந்தால்தான் த்ரில்லாக இருக்கும். நானே கண்ணாடியை உடைச்சுட்டு வர்றேன். ஒண்ணும் ஆகாது. பயப் படாதீங்க’’ என்றார். ஆனால் நான் அரை மனதோடுதான் அதை ஒப்புக் கொண்டேன்.
கடைசி காட்சியாக ‘‘கமல்... ஜாக்கிரதை... ஜாக்கிரதை’’ என்று அவரை எச்சரித்துதான் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வரச் சொன்னேன். கமல் இளமையின் துடிப்போடு கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஷாட் ஓ.கே. ஆனால், அவர் முகத்தில் ரத்தம். ‘‘கமல்… கமல்…’’ என்று கத்திக் கொண்டே அவரருகே ஓடினேன். ‘‘ஒண்ணுமில்ல சார்... ஒண்ணுமில்ல சார்…’’ என்று என்னை மீறி ஓடிவிட்டார் அவர். போய்ப் பார்த்தால் கமல் காரில் புறப்பட்டுவிட்டார்.
நாங்கள் இன்னொரு காரில் அவர் பின்னாலேயே போனோம். அவர் விஜயா ஹாஸ்பிடலுக்குப் போனார். மருத்துவர் கமலுக்கு முதல் உதவி செய்துவிட்டு, ‘‘காயம் ஆழமா இருக்கு. நான் தையல் போட்டா முகத்துல தழும்பு தெரியும். ஆகவே, பிளாஸ்டிக் சர்ஜன் மாதங்கி ராமகிருஷ்ணன்கிட்டே போய் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்குங்க’’ன்னு சொல்லிவிட்டார். கமல் எங்களைப் பார்த்து, ‘‘ஒண்ணும் பயப்படாதீங்க... நான் பார்த்துக்கிறேன்’’ன்னு சொல்லிச் சென்று, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அதனால்தான் முகத்தில் தழும்பு தெரியவில்லை. ஆனால், கமல் உடம்பில் தழும்பு இல்லாத இடமே இல்லை. துணிந்து செய்து அடிபடுவார். இது அவர் விரும்பி ஏற்றுக்கொள்கிற வீரத் தழும்புகள்!
கிளைமாக்ஸ் காட்சியில் வீடு பற்றி எரியும்போது அதில் மாட்டிக்கொண்ட வர்களை கமல் சண்டைப் போட்டுக் கொண்டே காப்பாற்றுவது மாதிரி காட்சி. ஃபயர் இன்ஜின், சுற்றிலும் தீயணைப்பு வீரர்கள் என்று பாதுகாப்போடு படப்பிடிப்பைத் தொடங்கினேன். நான்கு பக்கங்களிலும் நான்கு கேமராக்களை கேமராமேன் பாபு வைத்திருந்தார். நெருப்புப் படர்ந்து சூழ்ந்திருக்கும் இடத்தை நோக்கி சென்ற கமலை,கொஞ்ச நேரத்துக்குப் பிறகு காணவில்லை. ‘‘கமல்… கமல்…’’ என்று கத்தினோம். நெருப்பு எங்கும் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. அப்போது கமல், ‘‘நீங்க வெச்சிருக்குற நாலு கேமரா ஆங்கிள்லேயும் நான் நெருப்புல தவிக்கிற மாதிரி பாய்ச்சல் காட்டிக்கிட்டிருக்கேன். பயப்படாதீங்க!’’ என்று அவரது குரல் கேட்டது. கமல் ஒரு நடிகர் மட்டும் அல்ல; இயக்குநர். கேமரா கோணங்கள் பற்றியும் அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் நடித்த நெருப்புக் காட்சியைப் படமாக பார்த்தபோது மிகவும் த்ரில்லாகவே இருந்தது. ஆக மொத்தத்தில் கமலை ‘சகல கலா வல்லவன்’ என்று சொன்னதை, சரிதான் என்று மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். படம் வெற்றிக்கொடி நாட்டியது. இந்த சம்பவத்தை மகிழ்ச்சியோடு எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் துக்கமான செய்தி ஒன்று வந்து என்னை துயரத்தில் ஆழ்த்தியது.
என் குருநாதர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள் நான்கு மாத காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து மாரடைப்பால் கடந்த வாரம் மரணம் அடைந்துவிட்டார்.
ஏவி.எம்.ஸ்டுடியோவில் ஏவி.எம்.குமரன் சாருடைய விருப்பப்படி பிரகாஷ்ராவ், ஏ.பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர்களிடம் நான் உதவி இயக்குநராக வேலை செய்துகொண்டி ருந்தபோது ஏவி.எம்.சரவணன் சார் என்னை அழைத்து, ‘‘வீரத்திருமகன்’ படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கப் போகிறார். நீங்கள் இனிமேல் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றுங்கள்’’ என்றவர், என் கையைப் பிடித்து திருலோகசந்தர் அவர்களிடம் கொடுத்து, ‘‘இவர் எல்லா வகையிலும் உங்களுக்குத் துணையாக இருப்பார்’’ என்று ஒப் படைத்தார்.
1962-ல் வெளியான ‘வீரத்திருமகன்’ படத்தில் இருந்து அண்ணன் சிவாஜி கணேசனும், செல்வி ஜெயலலிதா அவர்களும் நடித்த ‘எங்க மாமா’ படம் வரை திருலோகசந்தர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அவர்தான் எனக்கு குரு! என் படங்களை நீங்கள் பார்த்தால், அது ஏ.சி.டி பாணி படமாக இருப்பதற்கு அதுதான் காரணம்.
1962-ல் இருந்து இதோ இந்த 2016 வரை குருவும் சிஷ்யனாகத்தான் தொடர்ந்து நேசத்துடன் பழகி வந்தோம். குரு - சிஷ்யனுக்கு எடுத்துக்காட்டாக ஏ.சி.டி-யையும் என்னையும் சொல்ல லாம். அதைப் போல் சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக ஏ.சி.டி-யையும், ஏவி.எம்.சரவணன் சாரையும் சொல்லலாம். சரவணன் சாரும், ஏ.சி.டி-யும் ஒருநாள்கூட சந்திக்காமல் இருக்க மாட்டார்கள். அப்படி சந்திக்க முடியவில்லை என் றால் தொலைபேசியில் பேசிக்கொள்வார் கள். இருவருக்கும் தனியாகவே தொலைபேசி இருந்தது.
ஏ.வி.எம்-மில், ‘வீரத்திருமகன்’ (இதில் சச்சுவை ஏ.சி.டி அறிமுகம் செய்தார்), தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ‘நானும் ஒரு பெண்’, தமிழ், தெலுங்கு மொழிகளில் ‘ராமு’, ‘காக்கும் கரங்கள்’(இதில் சிவகுமாரை ஏ.சி.டி அறிமுகம் செய்தார்), அடுத்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ‘அன்பே வா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஏவி.எம்-மில் இருந்து ஏ.சி.டி வெளியே சென்று அண்ணன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து 20 படங்களுக்கு மேல் இயக்கினார். ‘தெய்வமகன்’, ‘பாபு’, ‘இருமலர்கள்’, ‘பாரத விலாஸ்’ போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. மொத்தம் 65 படங்களை இயக்கியுள்ளார். அதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஆண்டுக்கு ஒருமுறை ஏவி.எம்.சரவணன் சார் நண்பர்களை எல்லாம் இணைத்து ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு கலந்துரையாடல் நடத்துவார். நிகழ்ச்சி முழுதும் மலரும் நினைவுகளாக அமைந்திருக்கும். இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதற்கு காரணம் ஏ.சி.டி அவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்திருந்ததுதான். சரவணன் சார் தினந்தோறும் அவரைப் பார்க்கச் சென்று, அவர் வீட்டில் செய்த ஏ.சி.டி-க்குப் பிடித்த சூப், வெஜிடேரியன் கேக் போன்றவைகளைக் கொடுத்து கவனித்துக்கொண்டார். அவரை நானும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சென்று பார்த்து வந்தேன். ஒருநாள், ‘‘முத்துராமா... எல்லார் வீட்டு நல்லது கெட்டதுக்கெல்லாம் மறக்காம போயிடுவே... என்னையும் வந்து தூக்கிப் போட்டுடு’’ என்றார் என் குருநாதர். அதைக் கேட்டு நான் துடித்துப் போய்விட்டேன். ‘‘சார் உங்களுக்கு ஒண்ணும் ஆகாது சார்... ஒண்ணும் ஆகாது சார்…’’ன்னு ஆறுதல் சொன்னேன். சரவணன் சார் மருத்துவர்களைப் பார்த்து ‘‘ஏ.சி.டி அவர்களுக்கு வலியும், வேதனையும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்…’’ என்று கேட்டுக்கொண்டார்.
எங்கள் எண்ணங்களையெல்லாம் மீறி ஜூன் 15-ம் தேதி பிற்பகல் ஏ.சி.டி அவர்கள் இயற்கை எய்து விட்டார். அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் செய்தித்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களை அனுப்பி, மாலை வைத்து மரியாதை செய்ய சொல்லியிருந்தார். அத்துடன் ஏ.சி.டி அவர்களைப் பற்றி சிறப்பாக எழுதி, தன் ஆழ்ந்த இரங்களை செய்தியாக வெளியிட்டு பெருமை சேர்த்தார்கள். இது ஏ.சி.டி-க்கு கிடைத்த அரசு மரியாதை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர் களுக்கு ஏவி.எம்.சரவணன் சார் சார்பி லும், என் சார்பிலும், எனது குடும்பத் தார் சார்பிலும் நன்றியைத் தெரிவித் துக்கொள்கிறோம். 16-ம் தேதி மாலை பெசண்ட் நகரில் ஏ.சி.டி-யின் இறுதி சடங்குகள் நடந்தன. ‘‘முத்துராமா... என்னை தூக்கிப் போட்டுடு’’ என்று சொன்ன ஏ.சி.டி-யின் வார்த்தையைத் துக்கத்தோடு நிறைவேற்றி, அவரது புகழுடம்பை நெருப்பில் தகனம் செய்துவிட்டு சரவணன் சாரோடு எல்லோரும் திரும்பினோம்.
ஏ.சி.டி அவர்கள் இப்போது இந்த பூவுலகில் உடலால் இல்லையென் றாலும், அவர் சாதித்த சாதனைகள் எல் லோர் உள்ளத்திலும் உணர்வுபூர்வமாக என்றைக்கும் நிலைத்திருக்கும்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.’
- இன்னும் படம் பார்ப்போம்…
படங்கள் உதவி: ஞானம்