

சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் கொண்டாடிவிடுவார்கள் ரசிகர்கள். ‘சார்லீஸ் ஏஞ்சல்’ போன்ற சாகசப் பெண் கதாபாத்திரங்கள் ஹாலிவுட் சந்தையில் பிள்ளையார் சுழிபோட்டு கணக்கைத் தொடங்கி வைத்தாலும் முழுநீள ‘சூப்பர் வுமன்’ சினிமாவுக்கு பிடிகொடுக்காமல் ஆட்டம் காட்டி வந்தது ஹாலிவுட். தற்போது காமிக்ஸ் உலகில் சக்கரவர்த்தியான டி.சி. காமிக்ஸ் அந்தப் பெருமையைத் தட்டிச் சென்றுவிட்டது.
டி.சி.காமிக்ஸ் உருவாக்கிய ‘இளவரசி டயானா’ எனும் சூப்பர் வுமன் கதாபாத்திரத்தை ‘வொண்டர் வுமன்’ திரைப்படமாக பலநூறு மில்லியன் டாலர் செலவழித்து உருவாக்கியிருக்கிறார்கள். ஜூன் மாதம் உலகம் முழுவதும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இதில் வொண்டர் வுமன் கதாபாத்திரத்தில் அதிரடி சாகசங்கள் செய்து கலக்கியிருக்கிறார் கேல் கேடட் என்ற இஸ்ரேலிய மாடல், நடிகை. இதைவிடச் சிறப்பு படத்தை இயக்கியிருக்கும் பேட்டி ஜென்கின்ஸ்’ ஹாலிவுட்டில் புகழ்பெற்ற பெண் இயக்குநர். கடந்த ஆண்டு வெளியான பேட்மென் வெர்சஸ் சூப்பர்மேன் படத்தில் வொண்டர் வுமன் கதாபாத்திரத்தில் கேல் கேடட் சில காட்சிகளில் தோன்றி ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருந்தார். அடுத்த மாதம் தமிழிலும் வெளியாகவிருக்கும் வொண்டர் வுமனின் கதை?
அமேசான் என்ற நாட்டின் இளவரசிதான் அபூர்வ சக்திகள் கொண்ட வொண்டர் வுமன் எனப்படும் டயானா. இவளது நாட்டின் கடற்கரையில் பலத்த காயங்களுடன் குற்றுயிராகக் கரையொதுங்கும் செரிஸ் பெயினைக் காப்பாற்றி அடைக்கலம் தருகிறாள். பெயினுக்கு வலி குறைந்ததும், அவன் வந்திருப்பது உலகப் போர் நடந்துகொண்டிருக்கும் லண்டனில் இருந்து என்பதைத் தெரிந்துகொள்கிறாள். அதன்பிறகு உலகப் போரை நிறுத்த அவனுடன் புறப்படும் அவளது அதிரடி சாகசங்களை நீங்கள் அகலத் திரையில்தான் பார்க்க முடியும்.
- கனி ரேச்சல்