

ஆக்ஷன் காட்சிகள் திரையைத்தாண்டி விழித்திரையை (மிரட்சியுடன்) எப்படியெல்லாம் வியப்படைய வைக்கின்றன என்பதற்கு சமீபத்திய உதாரணம் ‘கேப்டன் அமெரிக்கா - எதற்கும் அஞ்சாதவன்’
நண்பனுக்கு வரும் ஒரு ஆபத்தை களையும்போது, உலகை பேரழிவு ஆபத்து ஒன்று எதிர்நோக்கியிருப்பதை உணர்கிறார் நாயகன். பின், அதை அகற்ற நினைக்கும் நாயகனின் போராட்டம்தான் படம். உலகை அழிவிலிருந்து காப்பது எனும் ஒன்லைன் கதை என்றாலும், அதை ஆக்ஷன் படமாக, படு சுவாரஸ்யமாக காமிக்ஸ் பாணியில் கதை சொல்லி அசத்தி இருக்கிறார்கள்.
படத்தில் பல காட்சிகள் பிரமிப்பு ஏற்படுத்துகின்றன. கப்பலில் தீவிர வாதிகளை வேட்டையாடுவது, சாலையில் காரில் நடக்கும் யுத்தம், அதி நவீன போர்விமானங்கள் பறக்கும் காட்சிகள் என கடைசிக்கட்ட காட்சிகள்வரை ஒவ்வொன்றும் விறுவிறுப்பை கூட்டுகின்றன.
படத்தில் கேப்டன் அமெரிக்காவாக நடித்திருக்கும் கிறிஸ் இவான்ஸ் துல்லியமாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள்தான் படத்தின் முதுகெலும்பு என்று சொல்லுமளவிற்கு திரைக்கதையை விட ஆக் ஷனுக்கு மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவும் கதைக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. கேப்டனுக்கு உதவியாக வரும் (ஹீரோயின்) ஸ்கார்லெட் உடன் கிரிஸ் இவான்ஸின் ரொமான்ஸ் காட்சிகளும் உண்டு. காட்சிகளை விட, வசனங்களில் ரொமான்ஸ் நெடி தூக்கலாக உள்ளது.