

இயக்குநர் பாண்டிராஜ் பாணியில் அவருடைய உதவியாரான வள்ளிகாந்தும் கிராமம் சார்ந்த படத்தின் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ‘செம’ இயக்குநரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
‘செம’ படத்தின் கதைக்களம் பற்றி...
பொதுவாகவே ஒவ்வோர் ஆணுக்கும் திருமணத்துக்குப் பெண் பார்க்கும் படலம் தொடங்கி முடிவது சாதாரண விஷயம் கிடையாது. வேலை, உயரம், ஜாதகம், உடல்வாகு எனப் பல விஷயங்களால் பிரச்சினைகள் வரும். அப்படித்தான் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு மூன்று மாதத்துக்குள் திருமணம் செய்யவில்லை என்றால் அடுத்துவரும் ஆறு ஆண்டுகளுக்குத் திருமணம் நடக்காது என ஜோதிடர் சொல்லிவிடுவார். ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு காரணத்தால் ஜி.வி. பிரகாஷை வேண்டாம் எனச் சொல்லிக்கொண்டே வருவார்கள். ஒரே ஒரு பெண் வீட்டில் ஓ.கே. எனச் சொல்லி, உறுதி செய்யும் நேரத்தில் பிரச்சினை வரும். அந்தப் பிரச்சினை என்ன, இருவருக்கும் திருமணம் நடைபெற்றதா, அப்பிரச்சினையை நாயகன் எப்படி எதிர்கொண்டார் என்பதுதான் ‘செம’.
நிஜத்தில் நடந்த கதை என இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டீர்கள். யாருடைய வாழ்க்கையில் நடைபெற்றது?
‘எங்கிட்ட மோதாதே’ இயக்குநர் ராமுவின் கல்யாண வாழ்வில் நடந்த கதை. சினிமாக்காரர் என்பதால் பெண் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. அப்பிரச்சினையைப் பலரும் அனுபவித்துவருகிறார்கள். அவருடைய திருமணத்தில் பெண் உறுதி செய்யும் நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டவுடன், மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதுவரைக்கும் உண்மைக் கதை. அதற்குப் பிறகு சினிமா என்பதற்காகக் கொஞ்சம் திரைக்கதையை மாற்றி எழுதியுள்ளோம். யதார்த்த சினிமாவாகத்தான் ‘செம’இருக்கும்.
40 நாட்களில் படப்பிடிப்பு முடிப்பதற்கு, எந்த அளவுக்குத் திட்டமிட்டீர்கள்?
எனக்குப் பக்கபலமாக ஒளிப்பதிவாளர் விவேக் இருந்தார். சில ஒளிப்பதிவாளர்கள் ஒளியமைப்பு செய்ய நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், விவேக் அப்படியல்ல. ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று காட்சிகளை எடுப்போம். அந்த அளவுக்கு வேகமாகப் பணியாற்றக் கூடியவர். அடுத்த நாள் என்னென்ன காட்சிகளை, எப்படிப் படமாக்கலாம் என்பதை முந்தைய நாளே உட்கார்ந்து பேசி முடிவு செய்து கொள்வோம்.
‘செம’ நாயகனாக ஜி.வி.பிரகாஷைத் தேர்வு செய்யக் காரணம்?
வெள்ளந்தியான பையனாக இருந்தாலும், அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நடித்திருக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் ஜி.வி. அப்படித்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் அவருடைய பெயரைக் குழந்தைவேலு என வைத்துள்ளேன். அவரோடு பழகி நட்பாவது கடினம். பழகிவிட்டோம் என்றால் அவ்வளவு நட்புடன் இருப்பார். திருச்சியில் 13 நாட்கள் இரவு - பகல் பாராமல் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அப்போது சிறிதும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்தார். வேறு எந்த நடிகரும் அப்படி நடித்திருப்பாரா என்பது சந்தேகம்தான். அர்த்தனா, மன்சூர் அலிகான், கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட அனைவருமே அவரவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள். மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தாலும், அவர் செய்யும் விஷயங்கள் படம் பார்ப்பவர்களுக்குக் காமெடியாக இருக்கும். வடிவேலு - கோவை சரளா இணை எப்படிப் பேசப்படுகிறதோ, அதே போன்று மன்சூர் அலிகான் - கோவை சரளா இணையும் இப்படத்தில் பேசப்படும்.
உங்களுடைய முதல் படத்தைத் தயாரித்து, வசனமும் எழுதியுள்ளார் பாண்டிராஜ். அவரிடம் பணிபுரியும்போது என்ன கற்றுக்கொண்டீர்கள்?
தொடர்ச்சியாக உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பார். படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் விஷயங்களை வைத்து அழகாகக் காட்சிகளை உருவாக்குபவர் பாண்டிராஜ் சார். நம்மை நம்பிப் பண முதலீடு செய்பவர்களை என்றைக்குமே ஏமாற்றிவிடக் கூடாது என்று அடிக்கடி சொல்வார். ஒரு படத்துக்கு இயக்குநர் என்பதைத் தாண்டி, தயாரிப்பாளருக்கு எந்தெந்த விதத்தில் மிச்சப்படுத்திக் கொடுக்கலாம் என்று யோசிப்பார். பொய் பேசினால் பிடிக்காது, உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார். கோபப்படுவார், ஆனால் உடனடியாக அழைத்துச் சமாதானப்படுத்திவிடுவார். அவர் பார்ப்பதற்குப் பலாப்பழம் மாதிரி. வெளியே முள்ளாக இருந்தாலும், உள்ளே மிகவும் இனிப்பானவர். தான் உதவி இயக்குநராக இருந்தபோது, எதுவெல்லாம் நடக்கவில்லையோ அதே போன்று தன் உதவி இயக்குநர்களும் அமைந்துவிடக் கூடாது என நினைப்பார்.