Published : 01 Feb 2017 10:34 AM
Last Updated : 01 Feb 2017 10:34 AM

சினிமா எடுத்துப் பார் 94: அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை!

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளலார் காந்தி விழாவில் ஏவி.எம் சரவணன் அவர்கள் ‘‘முத்துராமன் நாம ஏன் வள்ளலார் வாழ்க்கையை தொலைக்காட்சித் தொடராக எடுக் கக்கூடாது. இதுகுறித்து பொதிகை தொலைக்காட்சி இயக்குநரிடம் பேசுங் களேன்?’’ என்றார். நானும், நல்ல யோசனையாக இருக்கிறதே என பொதிகை தொலைக்காட்சி இயக்கு நரைச் சந்தித்தேன். அவரும், ‘‘கண்டிப்பா பண்ணுவோம். முதலில் 5 எபி சோட்ஸ் எடுத்துக் காட்டுங்கள். அதை பார்த்துவிட்டு ஓ.கே பண்றோம்!’’ என்றார்.

தமிழ்ப் பேரறிஞர் அ.சா.ஞானசம்பந் தன், இலக்கியத்தில் முதன்மையானவர். அவரைச் சந்தித்து வள்ளலார் வாழ்க்கை யைத் தொடராக எடுக்கும் விஷயத்தை சொன்னதும் திரைக்கதை, வசனம் எழுதிக்கொடுக்க மகிழ்ச்சியோடு சம் மதித்தார். நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தும் வேலையில் இறங்கினோம்.

அப்போது சரவணன் சார், ‘‘சென்னை யில் செட் போட்டு எடுக்க வேண்டாம். வள்ளலார் வாழ்ந்த வடலூருக்கே சென்று இயற்கையான சூழ்நிலையில் எடுங்கள். குறிப்பாக தைப்பூச ஜோதியை நல்ல முறையில் படமாக்குங்கள்!’’ என்றார்.

முழு யூனிட்டோடு சென்றோம். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா, சன்மார்க்க அறிஞர் ஊரன் அடி களார் ஆகியோரும் எங்களுக்கு ஆதரவு தந்தனர். வள்ளலார் பிறந்த மருதூர், மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி விளாகம் ஆகிய இடங் களில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வடலூர் வந்தோம். தைப்பூச ஜோதி தரிசனம் பார்க்க வந்த லட்சக்கணக்கான பக்தர்களை படம் பிடித்தோம். ஜோதி தரிசனம் எடுப்பதற்காக சத்தியஞான சபைக்குச் சென்றோம். அதன் வாசலில் ஒரு அறிவிப்பு பலகை. அதில், ‘புலை, கொலை தவிர்த்தவர்கள் உள்ளே வரலாம்’ என்று போட்டிருந்தது. அதாவது கொலைகள் செய்யாதவர்களும், அசை வம் தவிர்த்தவர்களும் உள்ளே வரலாம் என்று இருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

காரணம், மூணு வேளையும் அசைவம் விரும்பி ருசித்து சாப்பிடுபவன் நான். அசைவம் இல்லாமல் எனக்கு சாப்பாடு உள்ளே செல்லாது. நான் யோசித்துக் கொண்டே இருக்கும்போது சத்தியஞான சபை நிர்வாகி என்னிடம் வந்து, ‘‘தந்தை பெரியார் இங்கு வந்திருந்தார்கள். இந்த அறிவிப்பை படித்ததும், ‘என்னால் அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது. வள்ளலாருடைய கொள்கைக்கு மாறாக நான் உள்ளே போக விரும்பவில்லை’ என்று கூறி திரும்பி போய்விட்டார்கள். உங்கள் முடிவு என்ன சார்?’’ என்றார். என்னுடன் இருந்த என் குழுவினர், ‘‘இன் றைக்குதான் நாங்கள் அசைவம் சாப் பிடவில்லையே’’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டனர். அந்தக் கருத்து எனக்கு உடன்பாடாக இல்லை. ஒரு மன உறுதியோடு, ‘‘இந்த நிமிஷத்துல இருந்து அசைவம் சாப்பிட மாட்டேன். இது வள்ளலார் மீது ஆணை’’ என்று கூறிவிட்டு உள்ளே போனேன்.

ஏழு திரைகளை விலக்கி தைப்பூச அருட்பெருஞ்ஜோதியை, அந்த கண் கொள்ளாக் காட்சியைப் படமாக்கி னோம். ‘அருட்பெருஞ்ஜோதி... அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்று கூறி வணங்கினோம்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, 2017 பிப்ரவரி 9-ம் தேதி வடலூரில் 146-வது தைப்பூச ஜோதி தரிசனம் என்று எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இது வள்ளலார் மேல் எனக்கு ஏற்பட் டிருக்கிற அலைவரிசையாக தெரிகிறது!

நாங்கள் எடுத்த காட்சிகளை எல்லாம் எடிட் செய்து 5 எபிசோடு களாக தூர்தர்ஷன் பொதிகை தொலைக் காட்சிக்கு அனுப்பிவைத்தோம். இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் பதில் வரவில்லை. சரவணன் சார், ‘‘தூர்தர்ஷ னுக்கு நேரில் போய் விசாரியுங்கள்’’ என்றார். நானும் போய் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் இனிப்பு, காரம், காபி எல்லாம் கொடுத்து சிறப் பாக உபசரித்தனர். ‘‘சார், உங்க விருந் தோம்பலுக்கு ரொம்ப நன்றி! நாங்கள் அனுப்பிய வள்ளலார் தொடர் ஓ.கே ஆயிடுச்சா?’’ என்று அந்த அதிகாரியிடம் கேட்டேன். அவர் சிரித்து, மழுப்பி சொல்ல முடியாமல் சொன்ன சேதி இதுதான்.. ‘‘வள்ளலார் தொடரைப் பார்ப்பவர்கள் அலங்கார சாதனங்கள், ஆடம்பர ஆடை கள் இவற்றை எல்லாம் வாங்கக்கூடிய வர்களாக இருக்க மாட்டார்கள். அதனால் வள்ளலார் தொடரில் விளம்பரம் செய்ய நாங்கள் விரும்பவில்லை என்று ஸ்பான் சர்கள் கூறிவிட்டார்கள்’’ என்றார். நான் திடுக்கிட்டுப் போனேன். ‘‘ஏன் சார், அவர்கள் விளம்பரம் கொடுக்காவிட்டால் என்ன.. வள்ளலார் வரலாற்றை அரசு செலவிலேயே ஒளிபரப்பலாமே’’ என் றேன். ‘‘அதற்கு முன்அனுமதி வாங்க வேண்டும். பட்ஜெட்டில் இடமில்லை. ஒளிபரப்ப இயலாது!’’ என்று கூறி வருத் தம் தெரிவித்தனர். அதை சரவணன் சாரிடம் சொன்னபோது, ‘‘இதை முன்பே சொல்லிருந்தால் எடுத்திருக்க மாட் டோமே’’ என்று சொல்லி வருத்தப்பட்டார்.

வள்ளலாருக்காக ஏவி.எம்முக்கு பணச் செலவு. எங்களுக்கு உழைப்புச் செலவு. ஆனால், தொடர்தான் வரவில் லையே தவிர, இந்தப் பணியால் வள்ள லார் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொண்டேன். அதைவிட முக்கியம்.. அசைவத்தை முழுவதுமாக விட்டுவிட் டேன்! முட்டைகூட சாப்பிடுவ தில்லை. இதுதான் எங்களுக்கு கிடைத்த பலன்!

தேவையான கருத்து களை படமாகவோ, தொலைக்காட்சித் தொடராகவோ ஏன் எடுப்பதில்லை?’ என்று பலரும் எங்களைக் கேட்கின்றனர். இந்த ‘வள்ளலார் நிகழ்ச்சி’தான் அவர் களுக்கு பதில்!



‘மக்களுக்குத் தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் களில் முக்கியமானவர் சிவசங்கரி. எழுத்துலகில் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர் காணல், மொழிபெயர்ப்பு என பல தளங் களில் இயங்கி முன்னிலையில் இருப் பவர். ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற செயல் திட்டத்தை முன் னெடுத்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு ஒரு ஒருமைப்பாட்டுக் களஞ்சியமாக அதைத் தொகுத்து வருகிறார். எழுத்துலகில் இப்படி பல பணிகளைச் செய்யும் ‘சாதனைப் பெண்’ அவர்.

சரவணன் சார், நான் என்கிற நட்புக் குடும்பத்தில் அவரும் ஒருவர். அவரது தோழிகள் லலிதாவும், பிருந்தாவும் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள். ஏவி.எம் தயாரித்த பல தொடர்களுக்கு சிவசங்கரிதான் கதை, திரைக்கதை, வசனம். அந்த வரிசையில் அவரது ‘நேற் றைய மனிதர்கள்’ கதையை தொலைக் காட்சித் தொடராக இயக்கினேன். அதில் தியாகியாக, ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் நடித்தார். தியாகிகளுக்கு நாம் காட்டும் மரியாதை13 வாரங்கள்தான் ஒளிபரப்பானது!

சிவசங்கரியின் ‘இவர்களும் அவர் களும்’ கதையை குறுந்தொடராக இயக்கி னேன். ஒரு பெண்ணின் பிறந்தவீடு, புகுந்தவீடு நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வ மான காட்சிகளாக அமைத்திருந்தார். அந்தப் பெண் சம்பாதிக்கிற பணத்தை தாய் வீட்டுக்கு கொடுக்கக்கூடாது என்று வாதிடுகிற கணவன், அதன் முடிவு என்ன என்பதுதான் கதை.

இன்று புகழ்பெற்ற இசையமைப் பாளராக இருக்கிற அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்திரா, இத்தொடரில் கணவராக நடித்தார். திரைத்துறையில் குணச்சித்திர நடிகையாகவும், வித்தியாச மான படைப்பாளியாகவும் திகழ்கிற ரோகிணி மனைவியாக நடித்தார். பெண் மையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வசனங்கள் வெடியாக அமைந்திருந்தன.

அதேபோல சிவசங்கரியின் மற்றொரு கதை ‘எனக்காகவா’. கணவனும், மனைவியும் வேலைக்குப் போவார்கள். மகனை கவனிக்கமாட்டார்கள். அந்தச் சிறுவன், தாய் தகப்பன் ஏக்கத்தில் அவர் களை வெறுப்பவனாக ஆகிவிடுவான். பக்கத்து வீட்டுக்கு விருந்தாளியாக வருபவர், அந்தப் பையனுடைய கவலையைப் போக்கும் வகையில் ‘உனக்காகத்தான் உன் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போகிறார்கள்’ என்று அவனுக்குப் புரியவைப்பார். அந்தப் பையன், ‘எனக்காகவா’ என்று புரிந்துகொண்டு அப்பா, அம்மா மீது அன்பு செலுத்துவான். அப்பாவாக வாகை. சந்திரசேகர், அம்மாவாக தேவி நடித்தார்கள். வேலைக்குப் போகும் பெற் றோரின் வேதனைகளை உணர்வுப் பூர்வமாக பதிவு செய்திருந்தார்கள். அந்தப் பையனைத் திருத்தும் பக்கத்து வீட்டு நண்பராக சிறந்த நாடக, சினிமா நடிகர் பீலி சிவம் நடித்தார். நாடகத்தில் முத்திரை பதித்து சினிமாவுக்கு வந்தவர் பீலி சிவம். அவர், இயக்குநர்கள் விரும் பும் நடிகர். இத்தொடரை பிள்ளைகள் அவசியம் பார்க்க வேண்டும்.

இப்படி தொடர்களை இயக்கிக் கொண்டிருந்த நாங்கள்... ஒரு கால கட்டத்தில் அதை நிறுத்திக்கொண்டோம். ஏன்?

- இன்னும் படம் பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x