மொழி கடந்த ரசனை 13: கண்ணீர் வீணாகப் போயிருக்காது

மொழி கடந்த ரசனை 13: கண்ணீர் வீணாகப் போயிருக்காது
Updated on
2 min read

நவரச உணர்வுகளில், மற்ற உணர்வுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சோக உணர்வுக்கு உண்டு. மகிழ்ச்சி, கோபம், வெறுப்பு ஆகிய உணர்வுகள் பொது வெளியில் வெளிப்படும்போது அவற்றுடன் நம் மனது சட்டென்று தொடர்புகொண்டு நம்மை ஆட்கொள்ளாது. ஆனால் சோகம் மட்டும் எவருக்கு எப்போது, எங்கு ஏற்பட்டாலும், அது நம் உள்ளத்தில் மழையாய்ப் பெய்து கண்களைச் சிறிதாவது ஈரமாக்குகிறது. இதன் பொருட்டே காதலை இழந்து பிரிவின் துன்பத்தில் உழலும் திரைப் பாத்திரங்கள் பாடுவதாக ஒலிக்கும் பாடல் வரிகள், நாம் அடையும் சோகத்தின் வடிகாலாக நின்று ஆசுவாசப்படுத்துகின்றன.

தடையை மீறிய காதல்

‘ஜஹான் ஆரா’ என்ற இந்திப் படத்தின் மூன்று சோகப் பாடல்களும் இதே ரகம்தான். உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலைத் தன் அன்பு மனைவி மும்தாஜுக்காகச் கட்டிய முகலாய மன்னன் ஷாஜஹானின் செல்ல மகள்தான் ஜஹான் ஆரா. பெண்கள் ஆண்களைச் சந்திக்க இருந்த தடையையும் மீறி, அரச வாரிசு அழகி இளவரசி ஜஹான் ஆராவும் மிர்ஜா சையத் செங்கிஜி என்ற சாமானியனும் சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. திருமணம் செய்துகொள்ளத் தீர்மானிக்கிறார்கள்.

இறக்கும் தறுவாயில் இருந்த அரசி மும்தாஜ், தன் அன்பு மகள் ஜஹான் ஆராவை அருகில் அழைத்து அவள் தந்தையும், தன் கணவனுமான ஷாஜஹானை இறுதிவரை பார்த்துக்கொள்ள வேண்டும், அவரை விட்டு எங்கும் செல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொள்கிறாள். தந்தையை விட்டு எங்கும் செல்லக் கூடாது என்ற சத்தியக் கட்டுப்பாட்டால், கூடாத காதலாக ஆகிவிட்டதை எண்ணி ஏங்கி, அவள் காதலன் பாடுவதாக அமைந்துள்ளன இப்பாடல்கள்.

மீண்டும் மீண்டும்

“ஃபிர் வோஹி ஷாம், வோஹி கம், தில் கோ ஸம்ஜானே தேரி யாத் சலீ ஆயி ஹை” என்று தொடங்கும் அந்தப் பாடல், தலத் முகமதுவின் சோக தொனிக்கு ஏற்ற மதன் மோகனின் துயரப் பின்னணி இசையுடன் கூடிய பாடல். பலரும் மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் பாடல் இது.

பொருள்:

மீண்டும் அந்த மாலைப் பொழுது

அதே துக்கம் அதே தனிமை

உள்ளத்தை உலுக்கும் உன் நினைவு வந்துள்ளது.

மீண்டும் உன்னைப் பற்றிய கற்பனைகள்

நிழலாக விரியும்

கடந்து சென்ற அந்தத் தருணங்கள்

பஞ்சுப் பொதியாய்த் திரும்பி வரும்

ஏனெனில், இறுதியில் இருக்கிறதே

உன் உறுதிமொழி

உன் தரிசனம் கிடைக்குமோ இல்லையோ

பாதியில் நின்றுவிட்ட பதிவுகள்

நிறைவு பெறுமோ இல்லையோ

என் இலக்கு உன் இலக்கிலிருந்து

பிரிந்துவிட்டது.

இயலாமையைக் காட்டும் வரிகள்

நமது அன்புக்குரியவர்களின் கண்ணீரைத் துடைக்க இயலாத சமயங்களில் நாம் உணரும் இயலாமை உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்தும் இப்படத்தின் ஒரு பாடல், ‘தேரி ஆங்கோங்கி ஆசு பீ ஜாவும் ஐஸ்ஸி மேரி தக்தீர் கஹான்’ என்ற உருக்கமான வரிகளுடன் தொடங்குகிறது. இதன் பொருள்:

உன் கண்களிலிருந்து வழியும்

கண்ணீரைக் குடிக்கும் பாக்கியம்

எனக்கு எங்கே கிடைக்கப்போகிறது

உன் துக்கத்திற்கு ஆறுதல் சொல்லும்

பாக்கியம் எங்கே கிடைக்கப் போகிறது

ஐயோ ஒருவேளை நாம்

ஒன்றாகக் கூடி அழ முடிந்தால்

இந்தத் துக்கம் கொஞ்சம் லேசாகியிருக்கும்

நம் கண்ணீர் இத்தனை வீணாகப் போயிருக்காது

இதுபோன்ற கறைகள் எளிதாக

நீங்குவதாக இருந்தால்

இத்தனை துன்பங்கள் இருந்திருக்காது

தனிமையின் துக்கம் இதுவரை

எவ்வளவு எனக்குத் தெரியுமோ

இன்னும் அவ்வளவு உள்ளது

இந்த நெடுந்துயரப் பாதையில்

இந்த நிலையைச் சரியாக்கும் பாக்கியம்

எனக்கு எங்கே கிடைக்கப்போகிறது

வினோதமான துக்கம்

தலத் முகமது வெளிப்படுத்தும் மென்மையான சோக உணர்வை மிக அழுத்தமாக எடுத்துக் காட்டும் திறன் முகமது ரஃபியின் கூடுதல் சிறப்பு. அவரின் குரல் வளமும் உச்சரிப்பும் இதன் அடிப்படை.

‘கீஸ்ஸி கே யாத் மே துனியா கோ ஹை புலாயா ஹுவே’ என்று தொடங்கும் அந்த பாடலின் பொருள்:

எவருடைய நினைவுகளிலோ

இந்த உலகம் அழைக்கப்பட்டுள்ளது

நம் எண்ணங்களின் சகாப்தம்

முடிவுக்கு வந்துவிட்டது

அன்பினால் ஏற்படும் துக்கம் வினோதமானது

வெளிப்புறம் அமைதி, எனினும் உள்ளத்தில் காயம்

ஆயிரம் திரைச்சீலைகள், ஆயிரம் கோபுரங்கள்,

ஆயிரம் மதில்கள் ஆகியவை மூலம்

அவள் என் பார்வையில் நிறைந்துள்ளாள்

இந்த உலகத்தை என் முன்

விட்டில் பூச்சியாகச் செய்வதற்கு

எவருடைய அழகின் ஒரு கீற்று போதுமானதோ

அவளுடைய நினைவுகளின் பொருட்டு

இந்த உலகம் அழைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in