சினிமா எடுத்துப் பார் 73: ராகவேந்திரராக வாழ்ந்த ரஜினி!

சினிமா எடுத்துப் பார் 73: ராகவேந்திரராக வாழ்ந்த ரஜினி!
Updated on
3 min read

ராகவேந்திரர்’ படத்தை முழுமையாக எடுத்து முடித்து, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் கே.பால சந்தர் சாரிடம் போட்டுக் காட்டியபோது, அவர் என்னைப் பார்த்து ‘‘வெட்டு’’ என்று சொன்ன காட்சி எதுவாக இருந்திருக்கும் என்று யோசித்திருப்பீர் கள். சத்யராஜும் மும்பை அழகியும் ஆடும் நடனக் காட்சியைத்தான் அவர் ‘‘வெட்டு’’ என்றார். ‘‘இந்தக் காட்சி படத்தோடு எந்த வகையிலும் ஒட்டவில்லை. இந்தக் காட்சியை வேறு யாரும் பார்க்க வேண்டாம். நீங்களே எடிட்டர். புரொடக்‌ஷன் அறைக்குச் சென்று வெட்டி விடுங்கள்’’ என்றார். வெட்டினேன். சத்யராஜ் கஷ்டப்பட்டு ஆடிய முதல் நடனம் மக்களால் பார்க்கப்படாமலேயே நீக்கப்பட்டது.

கே.பாலசந்தர் சார் ஸ்ரீராகவேந்திரர் படத் தைப் பார்த்துவிட்டு, ‘‘படம் நல்ல திருப்தியாக வந்திருக்கு. ரஜினி நடிக்கவில்லை. ராகவேந்திர ராக வாழ்ந்திருக்கிறார். அவர் மனதில் வாழும் ராகவேந்திரருக்கு ரஜினி உயிர் கொடுத்திருக் கிறார். இந்தப் படம் தயாரித்ததை நான் பெருமை யாக கருதுகிறேன்!’’என்று எங்கள் எல்லோரையும் மனம் திறந்து பாராட்டினார்.

‘ஸ்ரீராகவேந்திரர்’ படப் பெட்டியை மந்த்ராலயத் துக்கு எடுத்துச் சென்று ஆசி பெற்ற பிறகே வெளியிட்டோம். படத்தை பார்த்த மக்களின் மனதில் ரஜினிக்கு மரியாதை கூடியது. ரஜினி ஸ்ரீராகவேந்திரராகவே போற்றப்பட்டார். ஸ்ரீராக வேந்திரர் பக்தர்கள் எல்லாம் அந்தப் படத்தின் டிவிடியை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு கவலை வரும்போதெல்லாம் போட்டு பார்த் தனர். பலர் ‘ஸ்ரீராகவேந்திரர் எங்களோடு எங்கள் வீட்டிலேயே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்’ என்றார்கள்.

திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா மடத்தில் ரஜினிக்கும், பாலசந்தர் சாருக்கும், எனக்கும் அவ்வளவு மரியாதை ஏற்பட்டது. நான் அங்கு செல்லும்போதெல்லாம் ‘நன்றி’யுடன் சிறப்பு தரிசனம்தான்.

ஆன்மிகத்தில் இருந்து அடுத்து அயல் நாட்டுக்குப் போவோமா?!

பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரிக்க, கமல் நடிக்க ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய படம் ‘கல்யாணராமன்’. பல்லை நீட்டி வைத்துக் கொண்டு கதாநாயகனாக கமல் நடித்தால் மக்கள் பார்ப்பார்களா என்று பயந்தேன். அதற்கு பஞ்சு அருணாசலம் அவர்கள், ‘‘ஒரு கதாபாத்திரம் இப்படி இருந்தாலும், இன்னொரு கதாபாத்திரத்தில் கமல் அழகாக வருவதால் அந்தக் கதைக்காகவே ஏற்றுக்கொள்வார்கள்’’ என்று கூறினார். அவர் கூறியபடி மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். படம் சூப்பர் ஹிட்!

இதனால் ஆங்கிலப் படங்களில் இரண்டாவது பகுதி எடுப்பதைப் போல் ‘கல்யாணராமன்’’ படத்தை எடுக்கலாம். ஜப்பானில் போய் எடுப் போம். படத்துக்கு ‘ஜப்பானில் கல்யாணராமன்’ என்று பெயர் வைப்போம் என்று முடிவெடுக்கப் பட்டது. கமல், ராதா, டிங்கு, தேங்காய் சீனிவாசன், கோவை சரளா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். அனைவரோடும் ஜப்பான் போனோம்.

ஜப்பானை பார்த்தபோது, ‘அந்நாட்டினர் வளர்ச்சி நிலையில் எங்கோ இருக்கிறார்கள். நாம் அந்த இடத்தைப் பிடிக்க இன்னும் 20 வருடங் களாவது ஆகும் என்கிற எண்ணம் எங்களுக்கு வந்தது. எல்லா துறைகளிலும் அவ்வளவு பிரம் மாண்ட வெற்றி! கடலை மூடி கட்டப்பட்ட மிகப் பெரிய விமான நிலையம். விரிவான விமான ஓடு தளங்கள். மக்கள் வந்துபோக பெரிய பெரிய ஹால்கள். எல்லா வசதிகளும் நவீனமயமாக்கப் பட்டவை. ‘‘ஏன், இவ்வளவு பெரிய விமான நிலையம்?’’ என அதிகாரிகளிடம் கேட்டோம். ‘‘இன்றைய நிலையில் இதை பார்த்து பெரியது என்கிறீர்கள். இன்னும் 20 வருடங்களுக்குப் பிறகு எங்கள் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற அளவில் தான் இந்தக் கட்டிடத்தை பெரிதாகக் கட்டியிருக் கிறோம்’’ என்றார்கள். அவர்கள் வரும் காலத்தை எண்ணி திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நாம் இன்றையத் தேவைகளையே பூர்த்திசெய்வது இல்லை. அப்படியே கட்டினாலும் விமான நிலையங்களில் தொடர்ந்து பலமுறை கண்ணாடி கள் உடைந்து விழுகின்றன.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஜப்பான் எக்ஸ்போ கண்காட்சிகளில் படப்பிடிப்பு நடத்தி அழகான காட்சிகளை எடுத்திருந்ததைப் போல், நாங்களும் ஜப்பான் எக்ஸ்போ கண்காட்சியில் கமல் பாடுவது போன்ற காட்சிகளைப் படம் பிடித்தோம். ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகம் தன் திறமையை எல்லாம் திரட்டி கண்காட்சியை நேரில் பார்ப்பதுபோல் படம்பிடித்திருந்தார்.

நம் நாட்டில் இப்போதுதான் பெருமளவில் ‘நியான் சைன்’ விளக்குகள் ஒளிர் கின்றன. அன்றைக்கே ஜப்பான் நகர் முழு வதுமே பல வண்ணங்களில் ‘நியான் சைன்’ விளக்குகள் ஜொலித்தன. அதையெல்லாம் படம் பிடித்தோம். காட்சிகள் வண்ணமயமாக அமைந்தன.

‘சக்குரா’ என்கிற ஒரு வகை பூக்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக பூக்கக் கூடியவை. அந்த நேரத்தை அறிந்துகொண்டு அங்கு சென்று, பூத்து குலுங்கிய ‘சக்குரா’ பூக்களுக்கு மத்தியில் காட்சி அமைத்தோம்.

கமல், ராதா, டிங்குவை வைத்து நான் படம் பிடிக்க, எடிட்டர் விட்டல் சார் எனக்கு உதவியாக தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி, கோவை சரளா, சித்ரா லட்சுமணன் ஆகியோரை வைத்து ஷூட் செய்தார். சித்ரா லட்சுமணனுக்கு இதுதான் முதல் படம். கோவை சரளாவுக்கு சென்னையில் விமானம் பறக்கத் தொடங்கியதில் இருந்து சென்னை வந்து சேரும்வரை தலை சுற்றல், வாந்தி. அதற்கிடையிலும் படப்பிடிப்பில் அருமையாக ஒத்துழைத்தார்.

இந்தப் படப்பிடிப்பின்போது பஞ்சு அருணா சலம் அவர்களின் மகன் சுப்புவும் ஜப்பானுக்கு வந்தான். ‘‘ஏன், சுப்புவை வரச் சொன்னீர்கள்?’’ என்று பஞ்சு அருணாசலம் அவர்களிடம் கேட்டேன். ‘‘அவனுக்கு இப்போது விடுமுறை. ஜப்பானைப் பார்க்க வந்திருக்கிறான்’’ என்றார். நான் பஞ்சு அவர்கள் தனிமையில் இருக்கும்போது, ‘‘சுப்பு படப்பிடிப்பில் எல்லாம் கலந்துகொண்டால் படிப் பதில் எண்ணம் செல்லாது. சினிமா ஆசை வந்து விடும்’’ என்றேன். அதற்கு பஞ்சு அருணாசலம் அவர்கள், ‘‘அப்படியெல்லாம் வர மாட்டான்’’ என்று கூறினார். ஆனால், நான் சொன்னதுதான் நடந்தது. இன்று சுப்பு பஞ்சு தயாரிப்பு நிர்வாகி மட்டுமல்ல; நல்ல குணச்சித்திர நடிகர். சினிமா என்பது ஒரு கவர்ச்சி காந்தம். அனைவரையும் தன்னிடம் இழுத்துக் கொண்டுவிடும்.

‘கல்யாணராமன்’ கதையில் கமல், ஆவி இரு வரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள்தான் ‘ஹைலைட்’. ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தில் அப்படியான காட்சிகளை எடுக்க முடியவில்லை. ஏன் என்று அடுத்து சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்… | படம் உதவி: ஞானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in