

பிரபலங்களின் பெயரில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போலி அக்கவுண்ட் தொடங்கி பலரை ஏமாற்றி வந்த கும்பல் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வேலையை தொடங்கி இருக்கிறது. இதை தெரிந்துகொண்ட காவல் துறையினர் அந்த கும்பலை அடையாளம் கண்டுள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட டெல்லி மருத்துவ மாணவியின் படம் கடைசிவரை வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவியின் படம் பேஸ்புக்கில் வெளியாகியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து லட்சக்கணக்கானவர்கள் பேஸ்புக்கில் அந்த படத்தை பார்த்து பரிதாபப்பட்டனர். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த படம் போலி என்று தெரியவர அனைவரும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். அந்த படத்தை வெளியிட்டவர் சென்னையில் வசிக்கும் நபர் என்று தெரியவர காவல் துறையினர் சல்லடை போட்டு தேடியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர்.
அதைத் தொடர்ந்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை சென்னை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து பல்வேறு போலி நபர்களை கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சினிமா நடிகைகளின் பெயர்களில் போலியாக பேஸ்புக் பக்கத்தை தொடங்கி தவறான தகவல்களை பரப்புபவர்கள்.
"நான் ஈ" திரைப்படத்தில் வில்லனாக வந்த நடிகர் சுதீப் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி பேஸ்புக் பக்கத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான கருத்துகள் இடம்பெற, அனைவரும் ஆடிப்போய்விட்டனர். இதை அறிந்த சுதீப் அவசரமாக பிரஸ்மீட் வைத்து, ‘அந்த வலைத்தள பக்கத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது எனது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலியான பக்கம். அதை ஆரம்பித்தவர் மீது புகார் கொடுத்திருக்கிறேன்' என்றார்.
இதேபோல நடிகைகளில் அமலாபால் பெயரில்தான் அதிகமான போலி பேஸ்புக் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவரது பெயரில் மட்டும் 31 பேஸ்புக் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து அமலாபாலிடம் கேட்டபோது, ‘எனக்கும் இந்த தகவல் கிடைத்தது. என் பெயரில் தொடங்கப்பட்டுள்ள பக்கங்களில் இதுவரை என்னைப் பற்றி தவறான கருத்துகள் வெளியிடப்படவில்லை. எனவே நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை' என்றார்
அடுத்ததாக நடிகை அனுஷ்கா பெயரில் அதிக போலி பக்கங்கள் உள்ளன. அனுஷ்கா ஷெட்டி, அனுஷ்கா ஷர்மா, அனுஷ்கா சஞ்சனா என அனுஷ்கா பெயரில் அதிகமான போலி பக்கங்கள் உள்ளன. அனுஷ்கா ஷெட்டி பெயரில் மட்டும் நடிகை அனுஷ்காவே தனது கருத்துகளை பதிந்து வருகிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன் பெயரில் பேஸ்புக்கில் 21 பக்கங்கள் உள்ளன. ஆனால் உண்மையில் அவர் ட்விட்டரில் மட்டுமே இருக்கிறார். பேஸ்புக்கில் அவர் பக்கமே தொடங்கவில்லை. நடிகை நயன்தாராவுக்கு ‘குயின்நயன்தாரா' என்ற பெயரில் போலி பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பதிந்துள்ள கருத்துகள் உண்மை போலவே இருந்ததால் பிரபல சினிமா நட்சத்திரங்களே அவருக்கு அதில் ஆறுதல் கூறினர். இதை அறிந்த நயன்தாரா, ‘அது நான் தொடங்கிய பேஸ்புக் பக்கம் இல்லை. அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
ஹன்சிகாமோத்வானியின் பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைந்த போலி நபர்கள், அவரது யூஸர் நேம் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றை மாற்றி தங்கள் இஷ்டத்துக்கு விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதனால் அதிர்ந்து போன ஹன்சிகா தற்போது புது பேஸ்புக் பக்கத்தை தொடங்கியிருக்கிறார்.
இதேபோல நடிகர் விஜய் பெயரில் அவரது ரசிகர்கள் தொடங்கியிருக்கும் பேஸ்புக் பக்கத்தில் பலர் அநாகரிகமான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
சைபர் கிரைம் காவல் உதவி ஆணையர் ஜான்ரோஸ் கூறுகையில், "சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கு தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நடிகைகள் மட்டுமல்லாது சில அரசியல் பிரபலங்களின் பெயரிலும் போலி வலைத்தள பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில் ஈடுபட்டு வந்த பலரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கிறோம். ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து இந்த தவறை செய்கின்றனர். அவர்களை கண்டுபிடிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.
பேஸ்புக்கில் 8 கோடி பேர்
போலி பேஸ்புக் பக்கங்களை தடைசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் 102 கோடி பேர் பேஸ்புக் அக்கவுண்ட் வைத்துள்ளனர். இதில் இந்தியாவில் 8 கோடி பேரும், தமிழகத்தில் 30 லட்சம் பேரும் அடங்கும். இதில் 11 கோடி போலி பக்கங்கள் உள்ளன. ஒரு நாளில் 70 ஆயிரம் பேர் பேஸ்புக்கில் இணைகின்றனர். அதில் 20 ஆயிரம் பக்கங்கள் போலியாக உருவாக்கப்படுகின்றன.
போலியான பக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பக்கத்தை தடைசெய்ய, பேஸ்புக் பக்கத்திலேயே பிளாக், ரிப்போர்ட் என இரண்டு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் போலி நபர்கள் நுழைவதை தடுக்க ‘ஸ்கேமர்ஸ்' என்ற சாப்ட்வேர் முறையையும் உருவாக்கியிருக்கிறோம் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.