Published : 12 Jul 2015 10:07 AM
Last Updated : 12 Jul 2015 10:07 AM

திரை விமர்சனம்: பாகுபலி

காவியத் தன்மை கொண்ட கதைகளை, பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது எஸ்.எஸ்.ராஜ மவுலியின் இயக்கத்தில் வந்திருக்கும் பாகுபலி.

பல இந்தியக் காவியங்களில் கையா ளப்படும் அரியணைக்கான போட்டியும், உறவுகளை வீழ்த்தும் ரத்தக் கறை படிந்த துரோகப் பக்கங்களும்தான் பாகுபலியின் கதை. பிரம்மாண்டமான மலை, காட்டருவி, காட்டருவியைத் தாண்டினால் மகிழ்மதி ராஜ்ஜியம், அங்கே 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசி தேவசேனா என, பழைய அடிமைப் பெண் படத்தின் கதையை ஞாபகப்படுத்தும் கதை.

மகாராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மரணமடையும் காட்சி யுடன் தொடங்குகிறது படம். மலைப்பகுதி மக்களில் ஒருவரான ரோகிணியால் வளர்க்கப்படும் குழந்தை சிவா அருகிலுள்ள அபாயகரமான மலை உச்சியின்பால் ஈர்க்கப்படுகிறான். புஜபலம் பொருந்திய வீர இளைஞனாக வளரும் சிவா (பிரபாஸ்) தொடர்ந்து அந்த மலை உச்சியை நோக்கிச் செல்ல முயல்கிறான். பலமுறை தோற்கும் அவன் முயற்சி, மலையின் அந்தப் பக்கம் ஒரு அழகிய பெண்ணைக் (தமன்னா) கண்டதும் புதிய உத்வேகம் பிறக்கிறது. அந்தப் பெண் மீது மையல் கொண்டவன் அவளது லட்சியத்தைத் தன் லட்சியமாக ஏற்றுப் புறப்படுகிறான்.

தென்னிந்திய நிலப்பரப்பில் மகிழ்மதி ஒரு சாம்ராஜ்யம். அங்கே அரங்கேறும் சதியின் விளைவால் ஒரு அரச குடும்பம் வீழ்த்தப்படுவதும், ராஜ வாரிசு எங்கோ வளர்ந்து, உண்மை அறிந்து பழி தீர்த்து பகை முடிப்பதும்தான் கதை. மன்னன் பாகுபலியாகவும், மகன் சிவாவாகவும் பிரபாஸ்... அரசி தேவசேனாவாக அனுஷ்கா... பாகுபலியுடன் வாரிசுரிமைப் போர் நடத்தும் சகோதரன் பல்லாளனாக ராணா டகுபதி.

மகிழ்மதி தேசத்தின் சோதனையான சூழ்நிலையில் பல்லாளனுக்கும் பாகு பலிக்கும் இடையில் நடந்த போட்டி என்னவாயிற்று என்பதைச் சொல்லி படம் முடிகிறது. பாகுபலி என்ன ஆனான்? அவன் மனைவிக்கும் வாரிசுக்கும் என்ன ஆயிற்று என்ற முன் கதையைத் தெரிந்துகொள்ள பாகுபலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருக்க வேண்டுமாம்.

அமர் சித்திரக் கதைகளை ஞாபகப் படுத்தும் ஃபேண்டசி படம்தான். அடிப் படைக் கதையும் திரைக்கதையும் புதுமையானவை அல்ல. எனினும் படத்தின் காட்சி அமைப்பும் பாத்திர வார்ப்புகளும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகின்றன.

படத்தில் வரும் பிரம்மாண்டப் போர்க்காட்சிக்கான காரணம் எதிர் பார்த்ததுதான். ஆனால் அதைப் பல திருப்பங்களுடன் சுவாரசியமாக்கி யிருக்கிறார் ராஜமௌலி.

போர்க் களம், நகர அமைப்பு, போர் முதலானவற்றைத் திரையில் காட்சிப்படுத்திய விதம் பிரமிக்க வைக்கிறது. ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட காலகேயனின் படையை, 25 ஆயிரம் வீரர்களைக் கொண்ட மகிழ்மதியின் படை எதிர்கொண்டு வெல்ல அமைக்கும் வியூகமும், அந்த வியூகம் செயல்படும் விதத்தைக் காட்சிப்படுத்திய விதமும் விரிவும் நுணுக்கமும் கொண்டவை.

திரண்ட புஜங்களும் முறுக்கேறிய உடலும் கொண்ட பிரபாஸ், ராணா டகுபதி இருவருமே சண்டைக் காட்சிகளில் தனித்துவமாக வெளிப் படுகின்றனர். பிரபாஸ் புஜபலம் காட்டும் இடங்களில் சோபிக்கும் அளவுக்கு அழுத்தமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய இடங்களில் சோபிக்க வில்லை. நாயகனுக்கு இணையான பாத்திரத்தில் ராணாவின் கண்களில் தெறிக்கும் வன்மம் மனதில் நிற்கிறது. தமன்னா, வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கும் தேவதையாக அறிமுகமாகி, போராளியாகவும் காதலியாகவும் இரு வித உணர்வு பாவங்களைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்.

நடிப்பு என்று சொன்னால் நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகி யோர்தான் ஜொலிக்கிறார்கள்.

நிர்மாணிக்கப்பட்ட செட் எது, கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாக்கப்பட வெர்ச்சுவல் செட் எது என்கிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியாத சாபு சிரிலின் கலை இயக்கம், ஸ்ரீனிவாஸ் மோகனின் மேற்பார்வையிலான விஷுவல் எஃபெக்ட் ஆகிய இரண் டும் படத்தின் பிரம்மாண்டத்துக்கு அடித் தளம். குறிப்பாகப் போர்க்களக் காட்சிகள் அபாரம். மகிழ்மதி ராஜ் ஜியத்தின் தலைநகரைப் பிரமாத மான கற்பனையுடன் நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார்கள். கதாபாத்திரங் களின் ஆடை, அணிகளின் வடிவமைப் பாளர்கள் ரமா, பிரசாந்தியும் பாராட்டுக்குரியவர்கள்.

இத்தனை இருந்தும் முதல் பாதி சற்று இழுவைதான். பாத்திரங்களின் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது கதை நடக்கும் நிலப்பரப்பு தமிழகம் அல்லது தென்னிந்தியா என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே பனி படர்ந்த மலை எங்கே இருக்கிறது? பனிச் சரிவில் பிரபாஸும் தமன்னாவும் தப்பித்து வரும் காட்சியில் விறுவிறுப்பு இருக்கும் அளவு நம்பகத்தன்மை இல்லை. தேவசேனாவை மீட்டு வரும் காட்சியும் அப்படியே. பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளும் கலை வேலைப்பாடுகளும் அபாரமான தொழில்நுட்பமும் சேர்ந்து இந்தக் குறைகளை ஈடுகட்டுகின்றன.

காலகேயர்களின் மொழி, தோற்றம், கொடூரம் ஆகியவை அவர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் அவர்களுக்குக் கருப்பு வண் ணம் பூசப்பட்டிருப்பது கருப்பு நிறம் மீதான ஒவ்வாமையையே பிரதிபலிக் கிறது.

மதன் கார்க்கியின் வசனமும் பாடல் வரிகளும் செழுமையைச் சேர்க்கின்றன. மரகதமணியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசை படத்தின் மற்றொரு பலம்.

எதிர்பார்ப்புகள் அதிகமாகக் கிளம்பு வது ஒரு படைப்புக்குப் பாதகமாகவும் அமைந்துவிடக்கூடும். ஆனால் பாகுபலி ஏற்படுத்தும் பிரமிப்பு, அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x