இளைஞர்கள் விவசாயம் செய்ய வேண்டும் அப்துல் கலாம் கோரிக்கை

இளைஞர்கள் விவசாயம் செய்ய வேண்டும் அப்துல் கலாம் கோரிக்கை
Updated on
1 min read

இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வரவேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஆந்திர மாநிலத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசினார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கல்யாண துர்கம் மண்டலம், கருடாபுரம் கிராமத்தில் ‘ஜன்மபூமி-எங்கள் ஊர்’ எனும் அரசு திட்டத்தில் விவசாய மிஷன் எனும் புதிய திட்டத்தை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

வேளாண்துறையில் புரட்சி ஏற்பட இன்றைய இளை ஞர்கள் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். இதற்கு அரசு உறுதுணையாக நிற்க வேண்டும். நமது நாட்டில் 62 சதவீதம் பேர் வேளாண்துறையை நம்பியுள்ளனர். ஆனால், இதில் வெறும் 16 சதவீதம்தான் வருவாய் கிடைக்கிறது. இதில் உள்ள பிரச்சினைகளைஅலசி ஆராய்ந்து விவசாயத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

தரமான விதைகள், தடையில்லா மின்சாரம், உயர்தர உரம் போன்றவற்றை வழங்கினாலே விவசாயம் செழிக்கும். மானியமே வேண்டாம் என பிஹார் விவசாயிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர். குறைந்த நீரில் அதிக மகசூல் செய்யும் விதைகளை ஆராய்ச்சி செய்து அதனை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in