

நாயகர்களின் உலகமாக இருந்த இந்திப் படவுலகை மாற்றியமைத்த புத்தாயிரத்தின் கதாநாயகிகளில் ஒருவரான வித்யா பாலன் இன்று பாக்ஸ் ஆபீஸ் ராணி. ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரமாகத் தன்னைத்தானே வார்த்துக்கொள்வதில் அர்ப்பணிப்பு மிக்க இந்த நட்சத்திரம், கதை கோரினால் கவர்ச்சியின் எல்லைகளையும் உடைக்கத் துடிப்பவர்.
இவரது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘பேகம் ஜான்’ திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஓடிக்கொண்டிருந்தவரை மும்பையின் ஃபிலிமாலயா ஸ்டுடியோவில் பிடித்தோம். கேள்வியைத் தொடங்கும் முன்பே பேகம் ஜானை அறிமுகப்படுத்திப் பேசத் தொடங்கிவிட்டார்.
‘பேகம் ஜான்’ திரைப்படத்தில் பாலியல் தொழிலாளிகளிடம் சகோதரத்துவம் வெளிப்படுகிறது. அவர்களுடைய விடுதியில் தேசம், மதம், சாதி, வர்க்கம் போன்ற பேதங்களெல்லாம் உடைந்துவிடுகின்றன...
பல்வேறு மதங்கள், சாதிகள், வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் (வெளியில்) இருக்கிறார்கள். அதனால்தான் பேகம் ஜானின் கோட்டை பாதுகாப்பான இடமாக இருக்கிறது. அவள் அந்தப் பெண்களை மிகவும் ஆவேசத்துடன் பாதுகாக்கிறாள். அவர்கள் பாலியல் தொழிலாளிகள் என்பதை அவள் அவமானமாக நினைக்கவில்லை. ஏனென்றால் அது அவர்களுடைய தேர்வு அல்ல. சூழ்நிலையால் அவர்கள் அந்த இடத்தில் இருக்கிறார்கள்.
ஆனால், இப்போது அவளுடைய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அதனால், தன்னுடைய விதிகளின்படி செயல்படுவதை அவள் நம்புகிறாள். “இவை எங்களுடைய உடல்கள், எங்களுடைய விதிகள். அதனால், இங்கே நாங்கள் சொல்வதுதான் செல்லுபடியாகும்” என்கிறாள் அவள். அங்கேயிருக்கும் பெண்களுக்கு அவள் முழு சுதந்திரம் கொடுக்கிறாள். வெளியே இருக்கும் உலகத்தைப் போன்றில்லாமல் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
நீங்கள் ஏற்கெனவே நடித்திருந்த ‘தி டர்ட்டி பிக்சர்’, இப்போது நடித்திருக்கும் ‘பேகம் ஜான்’ இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் என்ன வித்தியாசம்?
சில்க்கிடம் (‘தி டர்ட்டி பிக்சர்’) தேர்வுசெய்யும் உரிமையிருந்தது. ஆனால், இந்தப் பெண்களுக்குத் (பேகம் ஜான்) தேர்வுசெய்யும் உரிமையில்லை. சில்க் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்தார். இன்னும் சொல்லப்போனால், அதற்காக அவர் ஏங்கினார். அதனால்தான் அவர் உயிரையும் மாய்த்துக்கொண்டார். அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்காதபோதும் தன்னை யாரும் நேசிக்கவில்லை என்று உணரும்போதும் அவர் ஏமாற்றமடைகிறார்.
அவருடைய உடல் அவருக்கு அவமானகரமான நிலையைக் கொண்டுவந்தது. அவருக்கு அன்பைக் கிடைக்க விடாமல் தடுத்தது. அந்த உடலைத் தொலைக்க வேண்டுமென்றுதான் அவர் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், பேகம் ஜான் ஒரு வீராங்கனை. அவள் தனக்கு வேண்டி யதைப் பெறுவதற்காகத் தீவிரமாகப் போராடக்கூடியவள். அவள் தனக்கு யாரையும் கட்டளையிட அனுமதிக்க மாட்டாள். அவள் தன்னுடைய வாழ்க்கையில் கதாநாயகியாக இருக் கிறாள், பாதிக்கப்பட்டவளாக அல்ல.
‘பேகம் ஜான்’ திரைப்படத்தின் வங்காள மூலத் திரைப்படமான ‘ராஜ காஹினி’யைப் பார்த்துவிட்டீர்களா?
பார்த்தேன். ஏனென்றால், இயக்குநர் ஸ்ரீஜித் என்னைச் சந்திக்க வரும்போது திரைக்கதையுடன் வரவில்லை. எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தால் திரைக்கதை எழுதுகிறேன் என்று சொன்னார். அந்தப் படம் என்னை அப்படியே வசீகரித்துவிட்டது. அந்தப் படத்தின் தாக்கம் என்னிடம் வந்துவிடக் கூடாது என்று கவனமாக அந்த நினைவுகளைத் தடுத்துவைத்தேன். இன்னும் சொல்லப்போனால், இப்போது அந்தப் படத்தின் நினைவுகள் பெரிதாக இல்லை. ‘பேகம் ஜான்’ முடிந்த பிறகு, மீண்டும் ‘ராஜகாஹினி’யைப் பார்ப்பேன்.
பிரதீப் சர்கார், சுஜோய் கோஷ், ரிபு தாஸ்குப்தா, ஸ்ரீஜித் முகர்ஜி என வங்காள இயக்குநர்களின் திரைப் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே? வங்காள இயக்குநர்கள் மதிக்கிறார்கள், பல நேரங்களில் பெண்களைப் போற்றவும் செய்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் காளி, துர்கா போன்ற தெய்வங்களின் பிரதிபலிப்புகள் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. அந்தப் பிரதிபலிப்புகள் அவர்களுடைய படைப்புகளில் வெளிப்படுகின்றன. அதனால் பெண்களின் வலிமை, வீரம், கோபம் போன்றவற்றை அவர்கள் வித்தியாசமாகச் சித்தரிக்கிறார்கள். அதனால் பெண்களை மையப்படுத்தும் கதைகள் இயல்பாகவே அவர்களை ஈர்க்கின்றன.
முன்பெல்லாம் பெண்களை மையப்படுத்தும் படங்கள் என்றால் பெண்கள் ஏதோவொரு நல்ல காரியத்துக்காகத் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்வதுபோல இருக்கும். ஆனால், உங்களுடைய தலைமுறையைச் சேர்ந்த நடிகைகள் அதை உடைத்திருக்கிறீர்கள்.
பலி ஆடு கதாபாத்திரங்கள் யாரையும் இப்போது கவர்வது இல்லை. இன்று, நாம் எல்லோரும் எதற்காகவும், யாருக்காகவும் உங்களை இழக்காதீர்கள் என்று பேசுகிறோம். லட்சியங்கள், ஆசைகள், கனவுகள் நிறைந்த பெண்கள் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கே உரிய பலங்களும் பலவீனங்களும் இருக்கின்றன. அவர்களை நல்லவள், கெட்டவள், அசிங்கமானவள், கறுப்பி, வெள்ளச்சி என எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம். இந்த விஷயங்களைத் திரையில் காண்பது என்பதை மனநிறைவைவிடப் பெரிய விஷயமாக நினைக்கிறேன்.
இதைச் சொல்லும்போது, நாம் துறையில் இன்றளவும் அதிகமாக இருக்கும் பாரபட் சங்களைப் பேச வேண்டியிருக்கிறதே?
ஆமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ‘பாய்வுட்’ படத்துக்காக ஆஸ்கர் பெற்றபோது பெட்ரிஷியா சம ஊதியத்தைப் பற்றி பேசியது எனக்கு நினைவிருக்கிறது. எனக்குத் தெரிந்து இது உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனால், இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இங்கு ஏற்றத்தாழ்வு இருக்கிறது, இது நியாயமற்றது என்ற விழிப்புணர்வை நாம் பெற்றிருக்கிறோம் என்பதுதான். ஓர் உரையாடல் தொடங்கியிருக்கிறது. தங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய பங்கை இப்போது பெண்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். எங்களுக்குச் சேர வேண்டியதைவிடக் குறைவாக வாங்க மாட்டோம் என்று நாங்கள் சொல்லும்போது ஒரு பதற்றம் உருவாகிறது.
சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி தி இந்து ஆங்கிலம்