என் கோபத்தை சேமித்து வைக்கிறேன்: அனுராக் கஷ்யப் பேட்டி

என் கோபத்தை சேமித்து வைக்கிறேன்: அனுராக் கஷ்யப் பேட்டி
Updated on
2 min read

சுய-வாக்குமூலம் கொடுக்கும் படங்களை எடுக்கும் பாலிவுட் இயக்குநர்களில் அனுராக் கஷ்யப் முக்கியமானவர். ரசிகர்களால் ஆராதிக்கப்படும் படங்களைத் தொடர்ந்து வழங்கிவந்த இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘பாம்பே வெல்வெட்’ படம் தோல்வியடைந்தது. அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

ஆனால், உலகம் இன்னும் அந்த அழகானப் படத்தை மறக்காமலேயே பேசிக்கொண்டிருப்பது ஆச்சரியமாக இருப்பதாகச் சொல்கிறார் அவர். தமிழ் சினிமாவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவரும் கஷ்யப், சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தபோது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலிருந்து...

நீங்கள் எடுக்க நினைத்த மாதிரியே ‘பாம்பே வெல்வட்’ திரைப்படத்தை எடுக்க முடிந்ததா?

ஆமாம். நான் எடுத்திருந்தது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், பட்ஜெட்டால் சில பகுதிகளை வெட்ட வேண்டியிருந்தது. அதனால்தான், தெல்மாவை (ஷூன்மேக்கர்) இந்தப் படத்தில் கொண்டுவந்தோம். ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ வெளிநாட்டிலிருந்து படத்தொகுப்பாளர் கொண்டுவரும் திட்டத்துடன் இருந்தது.

எனக்குப் பிடித்த படத்தொகுப்பாளருடன் வேலை பார்க்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த வகையில் தெல்மா ஒரு ஜாம்பவான். ஆனால், உலகம் அந்தப் படத்தைப் பழித்துரைத்தது. அதனால், நானும் பழித்துரைத்துவிட்டேன்.

ஏன்?

அப்படியில்லாவிட்டால் மக்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டேயிருந் திருப்பார்கள். நான் ‘பாம்பே வெல்வட்’ படத்தைக் கடந்து வந்துவிட்டேன். ஆனால், உலகத்தால் இன்னும் அந்தப் படத்தைக் கடக்க முடியவில்லை. இப்போது என் அடுத்தப் படமான ‘ராமன் ராகவ் 2.0’க்கு நகர்ந்துவிட்டேன்.

நீங்கள் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருப்பதாக நம்புகிறீர்களா?

இல்லை. அதை நான் நம்பவில்லை. என்னுடைய படங்கள் இப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவே நம்புகிறேன். எந்த வகையான படமோ, அதற்குள் நான் புதிய விஷயங்களைத் தேட முயற்சிக்கிறேன்.

நீங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி பட்டறை நடத்தியிருக்கிறீர்கள். இப்போதும் அதற்காகத்தான் பெங்களூரு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இப்போதும் கற்றுக்கொடுக்கப் பிடிக்கிறதா?

எனக்குப் பாடம் நடத்துவதைவிட உரையாடப் பிடிக்கும். இதற்கு முன்னால் இப்படி நிறைய செய்திருக்கிறேன். இப்போது குறைத்துக்கொண்டேன். காரணம், என் பணியைப் பற்றிய உரையாடலாக அது இருப்பதில்லை. மாறாக, என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளையே அதிகம் எதிர்கொள்கிறேன்.

நீங்கள் இமேஜையும் விளம்பரத்தையும் அதிகமாகச் சார்ந்திருக்கிறீர்களா? இது உங்கள் படத்துக்கு ஆகும் செலவைவிட அதிகமாக இருக்கிறதா?

ஒருகாலத்தில் படம் எடுக்கும்போது, அது வெளியானவுடன்தான் அதைப் பற்றி பேசுவோம். ஆனால், இப்போதோ ஒரு படம் படப்பிடிப்பு தளத்துக்குப் போவதற்கு முன்பே அதைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் அதீத ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு கதை முழுமையாக எடுத்து முடிக்கப்பட்ட பிறகுதான் படமாகிறது. ஊடகங்களின் சலசலப்பு இல்லாதபோது, நாம் நிறைய நல்ல படங்கள் எடுத்தோம். அப்போது ஒரு வியப்பான அம்சம் இருந்தது. நாம் ஆச்சரியமான கண்களுடன் படம் பார்க்கச் சென்றோம். திரைப்படங்களுக்கான விளம்பரங்களும், அதீதமாகப் பிரபலப்படுத்துவதும் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்தது.

இது ஏதோவொரு சந்தையில் நின்றுகொண்டு ‘என்னைப் பார்! என்னைப் பார்!’ என்று கத்துவதுபோல இருக்கிறது. இந்தக் காலத்தின் ‘தேவையான தீமை’ என்று இதைச் சொல்லலாம். எப்படியிருந்தாலும் இதை நான் வெறுக்கவே செய்கிறேன்.

நீங்கள் மரணத்தைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பீர்களா?

இல்லை. நான் சிந்திப்பதில்லை. நான் ஒரு மறுப்புவாதி. இருண்ட சிந்தனைகளைக் கொண்டவர்களே சிறந்த மென்மையான, மகிழ்ச்சியான படங்களை எடுக்கிறார்கள் என்பதை நம்புகிறேன்.

நீங்கள் ஒரு வன்முறையாளரா?

இல்லை. நான் வன்முறையாளன் இல்லையே.

நீங்கள் அடிக்கடி நிதானத்தை இழந்துவிடுவீர்களா?

என்னை நன்கு அறிந்தவர்கள், நான் மிகவும் அமைதியானவன் என்று சொல்வார்கள். பொதுவாக, எனக்குச் சரிசமமானவர்களிடம்தான் அப்படி நடந்துகொள்வேன். முன்பெல்லாம், அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுக்குக் கீழே வேலைப்பார்ப்பவர்களை மோசமாக நடத்தும்போது கோபப்படுவேன். அது குறைந்திருக்கிறது. அதிகார வர்க்கத்தின் மீதான என் கோபத்தை இப்போது சேமித்துவைக்கிறேன்.

உங்கள் மகளுக்கும் உங்களுக்குமான உறவு?

நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவளுக்கு இப்போது பதினைந்து வயதாகிறது. என்னைவிடப் புத்திசாலியாக இருக்கிறாள்.

தனிமை உங்களுக்கு எந்தளவுக்கு முக்கியம்?

அது எனக்கு இப்போது எப்போதையும்விட முக்கியமானதாக இருக்கிறது. என்னுடைய விருப்பமான நேரமும், இடமும் காற்றில் பறப்பதுதான். நீண்டதூரம் விமானங்களில் பயணிக்கும்போதுதான் என் சிறந்த படைப்புகளை எழுதுகிறேன்.

தமிழில்: என். கௌரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in