

பொதுவான இந்திய அடையாளத்தை 50, 60-கள் வரையிலான காலகட்டம்வரை தன்னகத்தே கொண்டிருந்தது இந்திய சினிமா. பின்னர், இந்த நிலை மறைந்து, அந்தந்த பிரதேச, மாநிலங்களில் வழக்கில் உள்ள வாழ்க்கை, மொழியின் அடிப்படையில் திரைப்படங்கள் தயாரிக்கப்படவும் ரசிக்கப்படவுமான போக்கு தொடங்கியது. இதனால் மொழியின் எல்லையைக் கடந்து முன்பு போல இந்திப் படங்கள் தமிழ்நாட்டில் வரவேற்பைப் பெறுதல் என்பது அப்படங்களின் இனிமையான பாடல்கள், வசீகரமான நாயக நாயகிகள் மூலம் மட்டுமே சாத்தியமாயிற்று.
பாடல்களின் பொருள் புரியவில்லை எனினும், ராஜேஷ் கன்னா-ஷர்மிளா தாகூர் ஜோடியின் அழகுக்காகவும் மீண்டும் மீண்டும் கேட்கவும், கேட்கும்போதே தன்னிச்சையாக வாயசைத்து உடன் பாடவும் தூண்டும் விதம் அமைந்த எஸ்.டி. பர்மனின் மிகச் சிறந்த இசை அமைப்பு, கிஷோர் குமார்—லதா மங்கேஷ்கர் பாடகர் இணையின் துடிப்பான குரல் வளம் ஆகியவற்றின் வெளிப்பாடாகத் திகழ்ந்த ‘கோரா காகஜ் தா யே மன் மேரா, லிக் லியா இஸ் பர் நாம் தேரா’ என்ற ‘ஆராதனா’ (ஆராதனை) இந்திப் படப் பாடல் தமிழ்நாட்டையே கொஞ்ச காலம் புரட்டிப் போட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
இந்த ஒரு பாடல் மட்டுமின்றி ‘ஆராதனா’ படத்தின் அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் இன்றளவும் மிகவும் ரசிக்கப்படுகின்றன. 1946-ம் ஆண்டில் வெளிவந்த ‘TO EACH HIS OWN’ என்ற அமெரிக்கப் படத்தின் கதையை, நூற்றுக்கணக்கான இந்திப் படங்களுக்கு எழுதி வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியராகத் திகழ்ந்த சச்சின் பவ்மிக் என்ற வங்காளக் கலைஞரின் ஆக்கத்தில் சக்தி சாமந்தா இயக்கத்தில் 1969-ல் வெளிவந்தது ‘ஆராதனா’.
இந்தியாவின் உண்மையான முதல் சூப்பர் ஸ்டார் எனக் கருதப்படும் ராஜேஷ் கன்னா, அதுவரை இந்திப் பட உலகில் கவர்ச்சி நாயகனாக வலம்வந்து, தொடந்து 17 வெள்ளி விழாப் படங்களைத் தந்து ஜூபிலி குமார் என்று அழைக்கப்பட்ட ராஜேந்திர குமாரை இந்தப் படத்தில் துணை நடிகராக்கினார். தவிர டாம் அட்லர் போன்ற வசீகரத் தோற்றம் உடைய பல புதியவர்கள் ஆர்வத்துடன் இந்தித் திரையில் நுழைவதற்கும் இப்படம் வழிவகுத்தது.
அடிக்கடி கேட்டு ஆனந்தம் அடைந்த ‘ஆராதனா’ படத்தின் அமரத்துவப் பாடலைப் பொருள் அறிந்து ரசிக்கும்போது அது மேலும் இனிக்கும்.
‘கோரா காக்ஜ் தா யே மன் மேரா,
லிக் லியா இஸ் பர் நாம் தேரா’
வெற்றுக் காகிதமாக இருந்தது என் மனது
ஒற்றிவிட்டேன் எழுதி அதில் உன் பெயரை - ஆண்
வெற்றிடம் மிக்க வெளியாய் இருந்த என் வாழ்வைப்
பற்றிக்கொண்டு அங்கு அமர்ந்தது உன் காதல் - பெண்
கலைந்துவிடக் கூடாதே இக்கனவு என அஞ்சுகிறேன்
தொலையவிடாமல் தினம் தூக்கத்தில் காண்கிறேன்
மையிட்ட கண்கள், மயக்கம் தரும் இந்த சமிக்ஞை
கருமை படிந்த கண்ணாடியாக இருந்த என் மனதை
அருமையான உன் உருவம் ஆக்கியது எழிலாக –ஆண்
நிதானம் தொலைத்தேன் நித்திரை தொலைத்தேன்
இரவு முழுவதும் கண் விழித்து இறைஞ்சிட உன்னை
அன்பே சொல், ஆருயிர்க் காதலியா இல்லையா நான்
வன்மம் பிடித்த எதிரியாய் இருந்த என் மனது
உன்னைக் கண்டதும் நண்பனாய் மாறியது - பெண்
நந்தவனத்தில் மலர்கள் மலர்வதற்கு முன்பு -ஆண்
இந்த இரு விழிகளும் சந்திக்கும் முன்பு – பெண்
எங்கே இருந்தன இந்தப் பேச்சு, சந்திப்பு, இனிய இரவு-
சிதறிய நட்சத்திரமாக இருந்தது என் மனது - பெண்
சிரிக்கும் நிலவாக மாறியது உனதானபின் - ஆண்
வெற்றுக் காகிதமாக இருந்தது என் மனது
ஒற்றிவிட்டேன் எழுதி அதில் உன் பெயரை- பெண்
இப்படத்தின் வேறு சில இனிய பாடல்களும் எளியவை; ஆழமான கருத்தைச் சொல்பவை.