

HBO ஹிட்ஸ் சானலில் ‘ஆர்டிஸ்ட்’ என்ற அமர காவியப் படம். கிளாசிக் படம். கறுப்பு வெள்ளை மெளனப் படம். பேசும் படம் அறிமுகமானவுடன், மெளனப் பட காலத்தில் உச்சத்திலிருந்து பின் மார்க்கெட் சரிந்த ஒரு நடிகருக்கும், ஓர் இளம் நடிகைக்கும் இடையே பயணிக்கும் கதை. ஐந்து ஆஸ்கார் விருதுகள் பெற்ற படம். சிறந்த நடிகராக ஜீன் டுஜார்டின் தேர்வு செய்யப்பட, அந்த விருதைப் பெற்ற முதல் பிரெஞ்சு நடிகர் என்ற பெருமையும் கிடைத்தது.
அதிர்ச்சிகரமான கையிருப்பு!
CNN நியூஸ் 18 சானலில் ஓர் பஞ்சாபி இளைஞர் (போதை மருந்துகளுக்கு அடிமையாகி மீண்டவர்) கூறியவை திகில் ரகம். “போதை சாம்ராஜ்யத்தில் கொலைகள் எல்லாம் வெகு சகஜம்” என்றார். போதைப் பொருட்கள் பெரும்பாலும் பாகிஸ்தானிலிருந்து வந்து சேர்கின்றன என்றவர், “ஆனால் நாம் உடனடியாக இந்த பாகிஸ்தான் வருகையை நிறுத்திவிட்டால்கூட, அடுத்த ஐந்து வருடங்களுக்கான போதை மருந்தை இங்கே ஸ்டாக் வைத்திருக்கிறார்கள்” என்றார். அவர் கூறியதில் ஒரே ஆறுதலான விஷயம் போதைப் பழக்கத்திலிருந்து மீண்ட அவர் எடை தூக்குதல் பயிற்சி விளையாட்டில் ஈடுபடப்போவதாகக் கூறியதுதான்.
ஆராவாரம் காட்டாத அரவங்கள்
பாம்பு கிராமம் பல முறை சின்னத் திரையில் பார்த்ததுதான். சிறுவர்கள்கூடப் பாம்புகளைக் கையில் எடுத்து விளையாடுவதும் பார்த்த காட்சிதான். ஆனால் டிஸ்கவரி சேனலில் மேற்கு வங்க கிராமம் ஒன்றில் உள்ள வீடுகளில் வெகு இயல்பாக பாம்புகள் (கடும் விஷம் கொண்ட கண்ணாடி விரியன் உள்பட) நடமாடுவதைப் பார்த்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. வீட்டிலுள்ள எலிகளைத் தேடி சமையல் அறையிலிருந்து படுக்கை அறை வரை சகஜமாக நடமாடுகின்றன. தூங்கிக்கொண்டிருக்கும்போது போர்வையைக் கடக்கின்றன.
அரிவாள்மணையில் இல்லத்தரசி வெங்காயம் வெட்டும்போது அந்த வெங்காயங்களுக்கு நடுவே ஊர்ந்து செல்கிறது. சிறு குழந்தைகள் வாசற்படியில் உட்கார்ந்திருக்க இவையும் அதே நுழைவாயில் வழியாக எந்தத் தடையுமின்றி உள்ளே நுழைகின்றன. எந்த அதிர்ச்சியுமே பழகிவிட்டால் இயல்பாகிவிடும் என்பது அரசியல் முதல் அரவங்கள் வரை இயல்புதான் போலும்.
அதென்ன சிக்னேச்சர்?
நடன இயக்குநர் ஸ்ரீ தர் ‘ஒவ்வொரு பாட்டுக்கும் ‘சிக்னேச்சர்’ அளிப்பதற்கு நிறைய முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது’ என்றார். (பொதிகை அன்புடன் உங்களுடன்). அதென்ன சிக்னேச்சர்? சிரிச்சு சிரிச்சு வந்தா பாடல் காட்சியில் அந்த நடிகை உட்கார்ந்து எழுந்தபடி வீணை வாசிப்பது போன்ற அசைவு செய்வாரே, அது. ‘போக்கிரிப் பொங்கல்’ பாடலுக்கு விஜய் தன் சட்டைக் காலரை மீண்டும் மீண்டும் தூக்கி விட்டுக்கொள்வாரே அது. வசனகர்த்தாக்களுக்கு பஞ்ச் வசனம்போல நடன இயக்குநர்களுக்கு இந்த சிக்னேச்சர். அவரவருக்கு அவரவர் கவலை.
கழுகின் வேலை!
இனிமேல் விளம்பரம் வரும்போது சேனலை மாற்றாதீர்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் உங்கள் கையை விட்டுப் போகலாம். விம்பிள்டன் போட்டிகளைக் காணவைப்பதற்கான விளம்பரம் ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பியது. அதில் இடம் பெற்றது டென்னிஸ் விளையாட்டு வீரர்களோ, ரசிகர்களோ அல்ல.
ஒரு கழுகு! ரஃபஸ் என்ற அந்தக் கழுகின் வேலை விம்பிள்டன் மைதானத்தின்மீது வட்டமடித்து புறாக்கள் எதுவும் மைதானத்தில் நுழைந்து இடையூறு தராமல் பார்த்துக்கொள்வதுதான். முந்தைய வாரம் ரஃபஸ் பற்றிய ஒரு கேள்விக்குத் தவறாக பதிலளித்து ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இழந்தார் ‘’உங்களில் யார் கோடீஸ்வரர்?’ (ஸ்டார் விஜய்) நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒருவர்.