

இரண்டுமே வரும்
சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷைப் புதிய தலைமுறையில் பேட்டி கண்டார்கள். ‘உங்கள் சமீப அனுபவத்தைக் கண்ட பிறகு களப்பணியாளர்களின் மனதில் எது அதிகமாகியிருக்கும்? பயமா? அல்லது தன்னம்பிக்கையா?’ என்ற கேள்விக்கு “பயம் அதிகமாகும். கூடவே போராட வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் வரும்” என்றார் யதார்த்தமாக. “உங்களுடைய பல முகங்களில் எது உங்களுக்கு அதிக நெருக்கமானது?’’ என்ற கேள்விக்கு “மனுஷ்தான்” என்றார் ஒரு சிறந்த மனிதராக.
சுறாவுக்குப் பிடித்த கால்
டிஸ்கவரி சானலில் ஒருவர் சுறாக்களைப் பற்றிய ஆராய்ச்சிக்காக வந்திருந்தார். அவருக்கு ஒரு கால்தான். ‘இத்துடன் கடலில் இறங்கி ஆராய்ச்சியா என்று நாம் வியக்க, அவர் தன் காலை இழந்ததே ஒரு சுறாவிடம்தான் என்று கூறி வியப்பை அதிகப்படுத்தினார்.
அவர் கையில் ஒருவகை மீன் கொத்தியதாம். அதிலிருந்து ரத்தம் வெளியாக அதற்காக அவர் பதறிக்கொண்டிருந்தபோது அவரது ஒரு காலை டக்கென்று கடித்து விட்டதாம் ஒரு சுறா. தன் காலை இழந்ததையே அவர் அப்போது உணரவில்லையாம்! விஞ்ஞானி ஒருவர் “மனிதர்கள் சுறாக்களுக்கு உணவு அல்ல.
அன்று கடல் கலங்கலாக இருந்தது. இவரிடமிருந்து ரத்தமும் வெளிப்பட்டது. ரத்த வாடையால் அங்கு வந்த அந்த ‘டைகர் சுறா’ இவரைக் கடல் ஆமை என்று நினைத்திருக்க வேண்டும்” என்று விளக்கம் கொடுத்தார்.
முதல்முறை
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் மும்பை மற்றும் கொல்கத்தா அணியினருக்கிடையே நடைபெற்ற ‘ப்ரோ கபடி’ போட்டியைக் காட்டினார்கள். 31- 27 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி யூ மும்பா அணியை வீழ்த்தி வெற்றிகொண்டது. மும்பை அணியின் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் சோகத்தில் மூழ்கியதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் “என்ன இவங்க நமக்கு இப்படி ஒரு அவமானத்தைக் கொண்டு வந்துட்டாங்களே” என்று ஒரு ரசிகர் கூறியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சற்றுநேரம் கழித்து “தாய் மண்ணில் (அதாவது மும்பையில்) அந்த அணி தோற்றது அதுவே முதல் முறை” என்றார் வர்ணனையாளர்.
எதிர்பாராதது!
ஜீ டி.வி. சானலில் ‘என் ஆட்டோகிராப்’ என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் கலா தன் வாழ்கையைக் ‘கிழி கிழி’ என்று கிழித்துக்கொள்ளவில்லை. ஜாக்கிரதையாகத்தான் பேசினார். தான் திரைப்படத்துக்கு நடனம் அமைத்த முதல் பாடல் ‘குருவாயூரப்பா’ என்றார். அடுத்த சில மாதங்களில் அவருக்குத் திருமணம் நடந்தது குருவாயூரிலாம்.