மாயப் பெட்டி: அதிரவைத்த சிம்பு!

மாயப் பெட்டி: அதிரவைத்த சிம்பு!
Updated on
1 min read

அதிரவைத்த சிம்பு!

புதுயுகம் சேனலின் நட்சத்திர ஜன்னல் பகுதி. “க்ளாஸ் படமா? மாஸ் படமா? எந்த மாதிரிப் படத்துக்கு இப்போது முன்னுரிமை கொடுப்பீர்கள்?’’ என்று நிகழ்ச்சியை வழங்கிய நடிகை சங்கீதா கேட்டதற்கு “எந்தப் படமும் செய்யப் பிடிக்கவில்லை” என்று பதிலளித்தார் சிம்பு. அவரது இந்தப் பதிலுக்கு வியப்படைந்தவர்கள், பிறகு என்ன செய்ய விருப்பம் என்ற கேள்விக்கு அவர் கூறியதைக் கேட்டு பெருவியப்பை அடைந்திருப்பார்கள். “சமூகம் கெட்டுப் போய்க் கொண்டிருப்பதற்குக் காரணம் பணம்தான். எனவே உலகத்திலிருந்து பணத்தை நீக்கிவிட வேண்டுமென்று நினைக்கிறேன்”.

இதுகூடவா தெரியாது?

மக்கள் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான குறுக்கெழுத்துப் போட்டி ஒன்று ‘ரெட்டைவால் குருவி’ என்ற நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக இடம்பெற்றது. மிக எளிமையான க்ளூக்கள் அளித்ததை, குழந்தைகளுக்கானவை என்ற அடிப்படையில் ஏற்கலாம். ஆனால் இவ்வளவு அலங்கோலமாகவா குறுக்கெழுத்துக் கட்டங்களை அமைப்பது? ஒரு வார்த்தைக்கான கட்டங்கள் முடிவடைந்ததும் ஒரு கறுப்புக் கட்டம் தேவை என்ற அடிப்படை விதியைக்கூடக் கடைப்பிடிக்கக் காணோம்.

ஷிராஸ்டா சாப்பிட்டிருக்கிறீர்களா?

ஒன்றிலிருந்து இரண்டு மாதங்கள் மட்டுமே வளர்ந்த ஒருவகை மீனின் பெயர் ஷிராஸ்டா. வெண்மை வண்ணத்தில் நீள நீளமாகக் காணப்பட்டன. NHK World என்ற ஜப்பானிய சேனலில் இந்த வகை மீன்களைக் காட்டி “பதப்படுத்த வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்” என்று அந்த மீன்களை உயிரோடு உள்ளே தள்ளினார்கள். ஒரு கருத்து தோன்றுகிறது. ஆனால் ‘பேலியோ டயட் - பன்றிக்கறி இறைச்சி வருங்காலத்தில் கரப்பான் பூச்சி ரத்தம்தான் நமக்கான புரத வங்கி’ என்பதுபோல் வந்துகொண்டிருக்கும் செய்திகள் நினைவுக்கு வர, அந்தக் கருத்தை விழுங்கிக்கொள்கிறேன்.

உடைந்த குட்டு!

ரஷ்யா டுடே சேனலில் ஒரு சிறு தகரக் கொட்டையின் கீழ் வாழும் ஏழைச் சிறுவனைப் பேட்டி கண்டார்கள். ஒரு நாள் சிலர் அவனிடம் வந்து “நீ உன் உடல் உறுப்புகளைத் தானமாகத் தருவாயா? நிறைய பணம் தருகிறோம்” என்று கேட்டார்களாம். இந்த ‘ராக்கெட்’டில் பல டாக்டர்களுக்கும் பங்கு உண்டு என்றார் செய்தியாளர். ஒரு சிறுநீரகத்துக்கு 20,000 டாலர்வரை அளிக்கவும் தயாராக இருக்கிறார்களாம். இதற்கான அறுவை சிகிச்சை இந்தியாவிலும் நடக்கிறது என்று இந்த விவகாரத்தில் இந்தியச் சூழ்நிலையின் குட்டையும் உடைத்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in