

பிரியமானவள், காதலி, மனதில் இருப்பவள் போன்ற பல பொருளை உள்ளடக்கியது, மெஹுபூபா என்ற உருதுக் கவிச் சொல். பல பாடல்களில் நாம் இன்றும் கேட்டுவரும் இந்த சொல்லின் உருவகமான காதலியை எல்லாக் கவிஞர்களையும் போலத் திரைப்பட பாடலாசிரியர்களும் நிலவுடன் ஒப்பிடுவது வழக்கம்.
இப்படி நிலவுடன் காதலியை ஒப்பிட்டுள்ள ஒரு இந்திப் படப் பாடலும் அதற்கு இணையாகவும் வேறாகவும் விளங்கும் தமிழ்ப் படப் பாடலையும் பார்ப்போம்.
முதலில், 1965-ல் வெளிவந்த ‘ஹிமாலய் கி கோத் மே’ என்ற திரைப்படத்திற்காக கல்யாண்ஜி-ஆனந்த்ஜி இசையில், சோகத்தையும் காதல் சுகத்தையும் வசீகரமாக வெளிப்படுத்தும் முகேஷ் பாடிய, ஆனந்த் பக்ஷி எழுதிய இந்திப் பாடல். சுமார் 638 திரைபடங்களில் 3500க்கும் அதிகமாகப் பாடல் எழுதிய ஆனந்த பக்ஷிக்கு ‘பிரேக்’ கிடைத்த பாடல் இது. இந்தப் படத்தின் நாயகன் மனோஜ் குமார், படத்தின் முதன்மை நாயகியான மாலா சின்ஹாவின் மோவாயைப் பிடித்து முகத்தை நிலவாக ரசித்தபடி பாடும் பாடல் இது. இன்று 77 வயதாகும் வாங்காள நடிகையான மாலா சின்ஹா அன்று இந்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு நிலவைப் போலவே கொண்டாடப்பட்டவர்தான்.
பாடலின் சில வரிகள்:
சாந்த் ஸீ மெஹுபூபா ஹோ மேரி
கப் ஐஸ்சா மைனே சோச்சா தா
ஹான், தும் பில்குல் ஐஸ்ஸி ஹோ
ஜைஸ்ஸா மைனே சோச்சா தா
(சாந்த்)
ந கஸ்மே ஹை ந ரஸ்மே ஹை
ந ஷிக்வே ஹை ந வாதே ஹை
ஏக் சூரத் போலி- பாலி ஹை
தோ நயனே ஸீதே- ஸாதே ஹை
ஐஸ்ஸா ஹி ரூப் கயாலோமே தா,
ஜைஸ்ஸா மைனே சோச்சா தா,
வழக்கமான இந்திப் பாடல் போல் அல்லாது ஒரு புதிய பாணியில் அமைந்த இந்தக் கவித்துமான பாடலின் பொருள்:
நிலவை விட அழகாக என்னவள் இருக்க வேண்டும்
என்று எப்பொழுது நான் நினைத்தேன்.
ஆம், முழுவதுமாக அப்படியே நீ இருக்கிறாய்.
நான் எப்படி நினைத்தேனோ அப்படி
நிலவை விட அழகாக...
இலக்கணப்படி இல்லை இதிகாசப்படி இல்லை
இல்லை ஒரு குறை, இல்லை உறுதிமொழி
நிர்மலமான ஒரு முகம்
நேர்மையான இரு விழிகள்
இப்படித்தான் இருந்தது என் உள்ளக் கிடக்கை
ஆம், அப்படியே முழுவதுமாக இருக்கிறாய்
எப்படி நான் நினைத்தேனோ அப்படியே
கவின் மாளிகை வாசக் கனவைக் காணாது
என் உள்ளத்தில் வசிக்கும் விருப்பத்துடன்
இந்த உலகில் யார் இருப்பார் (உன்னைத் தவிர என)
எப்படி நான் நினைத்தேனோ
ஆம், முழுவதும் அப்படியே நீ இருக்கிறாய்.
இப்பாடலின் மையக் கருத்துடன் இணைந்தும் வெளிப்படுத்தும் உணர்விலும் நடையிலும் சற்று மாறுபட்டும் விளங்கும் தமிழ்ப் பாட்டு கவிஞர் வாலி எழுதியது. படம்: உலகம் சுற்றும் வாலிபன்
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள்தானோ
பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைக்கரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழிதான் மலர்ந்தவளோ
செந்தமிழின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழைத் தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்
1972-ல் வெளிவந்து 42 வருடங்களுக்குப் பிறகும் அனைவரும் விரும்பிப் பார்க்கும் படமாகத் திகழும் உலகம் சுற்றும் வாலிபன் தமிழ்த் திரை உலகின் ஒரு சாதனைப் படமாகும். எம்.ஜி.ஆர். இயக்கிய அவரது சொந்தப் படமான இப்படத்தில் கண்ணதாசன் ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘லில்லி மலருக்குக் கொண்டாட்டம்’, ‘உலகம்... உலகம்’ ஆகிய பாடல்களையும், வாலி ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘பன்சாயி...’ ஆகிய பாடல்களையும், புலமைப்பித்தன் ‘சிரித்து வாழ வேண்டும்’ பாடலையும் எழுதினார்கள். ‘நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்’ என்று தொடங்கும் டைட்டில் பாடலை, சீர்காழி கோகாவிந்தராஜன் பாட புலவர் வேதா எழுதினார். இத்தனை பாடலாசிரியர்களின் கைவண்ணமும் கற்பனை வளமும் அந்தப் படத்தின் பாடல்களை மெருகேற்றின.
படம் உதவி: ஞானம்