

யார் இவர்?
சாய் பிராஞ்சபே என்ற பெயர் நம் நினைவில் பதிந்திருக்காவிட்டாலும் ‘சாஸ்மே புதூர்', ‘ஸ்பர்ஷ்' போன்ற புகழ்பெற்ற அவரது சினிமாக்கள் பலரது நினைவை விட்டு அகலாமல்தான் இருக்கின்றன.
நாடகம், டிவி, சினிமா என அனைத்துக் கலை வடிவங்களிலும் நம்மை வசப்படுத்தும் படைப்புகளைத் தந்திருக் கிறார் இயக்குநர் சாய் பிராஞ்சபே.
வணிகப் படங்கள், மாற்றுப் படங்களுக்கு இடையே மிகவும் மெல்லிய இடைவெளி இருக்கிறது. அதை சாதுரியமாகக் கடந்தவர் சாய்.
பின்னணி
சாயின் மேதமைக்கு அவருடைய தாத்தா, அம்மா, மாமா போன்றவர்களே காரணம். சாயின் தந்தை யோரா ஸ்லெப்ட்ஸாஃப் ஒரு ஓவியர், அம்மா சகுந்தலா பிராஞ்சபே ஒரு நடிகை.
சாயின் அம்மா வழித் தாத்தா விராங்க்ளர் பிராஞ்சபே, கணிதவியலாளர் மற்றும் கல்வியாளர். அவர் காலையில் தாடியைத் திருத்திக் கொண்டிருக்கும்போது, சாயிடம் ஆங்கிலச் செவ்விலக்கியங்களைப் படித்துக்காட்டச் சொல்வது வழக்கம். அத்துடன் வடமொழியையும் கற்றுத் தந்த அவர், உச்சரிப்பையும் திருத்தி இருக்கிறார். இந்தப் பன்மொழி இலக்கிய அறிவே, சாயின் படைப்பிலக்கிய ஆளுமைக்கு அடித்தளமாக இருந்தது.
சாயின் மாமாவான புகழ்பெற்ற இயக்குநர் அச்யுத் ராணடே, சிறுவயதில் நிறைய திரைக்கதைகளைச் சாய்க்குக் கூறுவது வழக்கம்.
புதுடெல்லி தேசிய நாடகப் பள்ளி யில் படித்த சாய், ஆரம்பத்தில் பூனா அகில இந்திய வானொலியில் அறிவிப் பாளராகவும், குழந்தைகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருந்தார். கொஞ்ச நாட்களிலேயே மராத்தி, இந்தி, ஆங்கில நாடகங்களை எழுதி, இயக்க ஆரம்பித்தார்.
முதல் அரும்பு
"தூர்தர்ஷனுக்காகப் பார்வையற் றோர் பள்ளியில் படப் பதிவு செய்யச் சொன்னார்கள். ஆனால், அதைக் கையாளும் தைரியம் எனக்கு இல்லை என்று போக மறுத்தேன். ஆனால், அங்கே பார்வையற்ற குழந்தைகள் சிரிப்பதையும் விளையாடுவதையும் பார்த்தபோதுதான், என்னுடைய முதல் படம் ‘ஸ்பர்ஷ்'ஷுக்கான விதை விழுந்தது" என்கிறார் சாய்.
முக்கியப் படைப்புகள்
பார்வையற்றோர் பள்ளி ஒன்றின் முதல்வராக இருக்கும் பார்வையற்ற நசீருதின் ஷா, அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் பார்வையுள்ள ஷபானா ஆஸ்மி ஆகியோர் இடையிலான காதல், அதில் எழும் சிக்கல்தான் ‘ஸ்பர்ஷ்' (தொடுதல்). சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய இரண்டு தேசிய விருதுகளை (1980) இந்தப் படம் பெற்றது.
நாயகனைக் காதலிக்க முயற்சிக்கும் நாயகியை, நாயகனின் 2 நண்பர்கள் தடுத்து நிறுத்த முயற்சிப்பதுதான் ‘சாஸ்மே புதூர்' படத்தின் கதை. இந்தியில் கடந்த ஆண்டு ரீமேக் செய்யப்படும் அளவுக்கு இந்தப் படம் பிரபலமாக இருந்தது. லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகள் பற்றி ‘சாஸ்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இவருடைய குறிப்பிடத்தக்க மற்ற படங்கள்: கதா, திஷா.
1970-களில் குழந்தைகளுக்கான இந்தியத் திரைப்படக் கழகத்துக்கு (CFSI), சாய் இரண்டு முறை தலைவராக இருந்தார். குழந்தைகளுக்கான படங்களை அப்போது இயக்கினார். ஜாதூ கா சங் (1974), சிகந்தர் (1976) ஆகியவை விருதுகளைப் பெற்றன.
கேப்டன் லக்ஷ்மி ஷெகல் பற்றி ஒரு ஆவணப் படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘சூடியான்' என்ற ஆவணப் படம், மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் நடைபெற்ற குடிக்கு எதிரான போராட்டத்தைப் பற்றியது. சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த ஆவணப் படத்துக்கான தேசிய விருதை (1993) இது பெற்றது.
தனிச் சிறப்பு
கட்டுப்பாடற்று அன்பு செலுத்துபவர் கள் இடையே நிலவும் கதகதப்பு நிறைந்த உறவு, அப்பாவித்தனமும் தனித்தன்மையும் கொண்ட மனிதர்கள் போன்றவற்றுக்காக இவரது படங்கள் நினைவுகூரப்படுகின்றன.
தெரியுமா?
சாய் பிராஞ்சபே எட்டு வயதிலேயே ‘முலஞ்சா மேவா' என்ற தேவதை கதை புத்தகத்தை மராத்தியில் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக அவர் எழுதியவற்றில் ஆறு புத்தகங்கள் தேசிய, மாநில விருதுகளை வென்றுள்ளன.
டெல்லி தூர்தர்ஷன் தயாரிப்பாளராக அவர் இயக்கிய முதல் டிவி படமான ‘தி லிட்டில் டீ ஷாப் (1972)' ஆசிய ஒளிபரப்புக் கூட்டமைப்பு விருதைப் பெற்றது. 2006-ம் ஆண்டு பத்ம பூஷண் பட்டம் பெற்றார்.
இவருடைய மகன் கௌதம் ஜோகலேகர் மராத்தி திரைப்பட இயக்குநர். 1980-களில் வெளியான சாயின் பல படங்கள், நாடகங்கள், டிவி சீரியல்களில் அவருடைய மகள் வின்னி நடித்துள்ளார்.