திரை விமர்சனம்: அதே கண்கள்

திரை விமர்சனம்: அதே கண்கள்
Updated on
2 min read

சொந்தமாக உணவகம் நடத்திவரும் பார்வை யற்ற இளைஞர் வருண் (கலையரசன்). அவரது தோழியான பத்திரிகையாளர் சாதனா (ஜனனி) அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார். வருணோ இரக்க குணம் கொண்ட தீபாவை (ஷிவதா) காதலிக்கிறார். ஒருநாள் உணவகம் முடிந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்தின் மூலம் பதினைந்து வயதில் பறிபோன பார்வை, வருணுக்கு திரும்பவும் கிடைத்துவிடுகிறது.

பார்வை கிடைத்துவிட்டாலும் காதலி காணாமல் போயிருப் பதைக் கண்டு பதற்றமடையும் வருண், அவரைத் தேடிச் செல் கிறார். அவருக்குக் காதலி கிடைத் தாரா? சாதனாவின் ஒருதலைக் காதல் என்னவானது ஆகிய கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் தருகிறது அறிமுக இயக்கு நர் ரோஹித் வெங்கடேசனின் ‘அதே கண்கள்’.

காதல் கதையாகத் தொடங்கும் படம், திடீரென்று த்ரில்லராக மாறுவதுதான் திரைக்கதையின் சிறப்பு. மர்ம முடிச்சுகளை இறுக்கமாகப் போடும் இயக்குநர் படிப்படியாக அதை அவிழ்ப்பதில் பெருமளவு நேர்த்தியாகவே செயல்பட்டுள்ளார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு நாயக னின் இலக்கு பிடிபடுவதற்குள் முக்கால்வாசிப் படம் ஓடிவிடு கிறது. இந்த இலக்கை இடை வேளைக்கு முன்பே நிலைநிறுத்தி யிருந்தால் இன்னும் வேகமாகக் கொண்டுசென்றிருக்கலாம்.

போலீஸ் கான்ஸ்டபிளை வைத் துக்கொண்டு நாயகன் பார்க்கும் துப்பறியும் வேலை சுவாரஸ்ய மாக இருந்தாலும் சில இடங் களில் நம்பகத்தன்மை அடிவாங்கு கிறது. ஜனனிக்கும் கலையரசனின் அம்மாவுக்கும் எழும் சந்தேகங்கள் நியாயமானவை. அவற்றை எளி தில் போக்கக்கூடிய நாயகன் அவர்களிடம் ஏன் பேசுவதே இல்லை? என்னதான் தீவிரமான தேடல் என்றாலும் அம்மாவின் தொலைபேசி அழைப்பை நிரா கரிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ன நடந்தது என்பதை விவரிக் கும் காட்சிகள் டாக்குமென்டரி படத்தின் சாயலில் உள்ளன.

காட்சிகளின் ஓட்டத்திலும் சஸ்பென்ஸ்களை விடுவிப்பதில் திரைக்கதையாசிரியரான இயக்கு நர் காட்டியிருக்கும் தந்திரங்களும் இந்தக் குறைகளை ஈடுகட்டிவிடு கின்றன. காதல், சஸ்பென்ஸ், நகைச்சுவை, இசை ஆகிய அம்சங் களுக்குச் சரியான விகிதத்தில் இடமளித்திருப்பதால் நிறைவான பொழுதுபோக்குப் படம் பார்த்த உணர்வைத் தந்துவிடுகிறார் இயக்குநர். மோசடிக் கும்பல் பார்வையற்றவர்களைக் குறி வைப்பதில் உள்ள நுட்பம் திரைக் கதையின் சிறப்புகளில் ஒன்று.

கலையரசனுக்கு இரண்டு பரிமாணங்களைக் கொண்ட கதா பாத்திரம். பார்வையற்ற இளைஞ ராக இருந்தாலும் தன்னம்பிக்கை மிக்க, கழிவிரக்கம் இல்லாத இளைஞராகவும் பார்வை கிடைத்தபின் நியாயத்தைத் தேடிப் புறப்படும் துடிப்பான இளைஞராக வும் இரண்டு பரிமாணங்களில் அசத்தியிருக்கிறார். எந்த இடத் திலும் மிகை இல்லை. ஆனால், ஒரு சில இடங்களில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக ஜனனியை வெவ்வேறு சந்தர்ப் பங்களில் அவர் எதிர்கொள்ளும் விதம் பலவீனமாக உள்ளது. திரைக்கதையின் குறையாகவும் இதைச் சொல்லலாம்.

ஜனனிக்கு அதிக வேலை இல்லை என்றாலும் திரைக்கதை யின் முக்கியத் திருப்பங்களில் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் பாத்திரம். அதில் கச்சிதமாகப் பொருந்தி யிருக்கிறார்.

ஷிவதாவின் பாத்திரமும் அவ ரது நடிப்பும் ஆச்சரியமளிக் கின்றன. ‘நெடுஞ்சாலை’ படத்தில் கிராமத்துப் பெண்ணாகக் கவர்ந்த இவரா என்று தோன்றவைக்கும் கதாபாத்திரம். அதைச் சரியாகச் செய்ய முயன்று உழைத்திருக்கும் அவரைப் பாராட்டலாம். கண்கள், முக பாவங்கள், உடல் மொழி ஆகியவற்றில் நுட்பத்தைக் கூட்டி முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்.

கான்ஸ்டபிளாக வந்து புலனாய்வில் ஈடுபடும் வேடத்தில் பால சரவணன் பொருத்தமாக நடித்திருக்கிறார். ஆங்காங்கே நகைச்சுவைப் பொடிகளையும் தூவிவிடுகிறார்.

முகில் சிவாவின் வசனங்கள் எளிமையாகவும் காட்சிகளுக்குப் பொருத்தமாகவும் அமைந்திருக் கிறன. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு. ஒரு சின்ன பட்ஜெட் படத்துக்கு உயர் தரமான தோற்றத்தை தனது ஒளிப்பதிவு மூலம் சாத்தியப் படுத்தியிருக்கிறார். குறிப்பாக, கன்யாகுமரிக் காட்சிகள் யதார்த்த மாக உள்ளன.

துள்ளல் மிகுந்த இசையை வழங்கியிருக்கிறார் ஜிப்ரான். எல்லாப் பாடல்களும் கேட்கும்படி யாக இருப்பதுடன் அவற்றைக் காட்சிப்படுத்திய விதமும் நன்று. இரண்டாம் பாதியில் த்ரில்லர் தடத்தில் படம் பயணிக்கத் தொடங்குப்போது பின்னணி இசையும் அதற்கேற்ப மாறுகிறது.

திரைக்கதை, இசை, ஒளிப் பதிவு ஆகியவை குறைகளை மீறி நேர்த்தியான த்ரில்லரை வழங்குகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in