

அரசியல் மற்றும் பொது கொள்கைக்கான ‘தி இந்து’ மையம், சென்னை அமெரிக்க தூதரகத்துடன் இணைந்து ‘சினிமாவும் வாக்காளரும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த பிப்ரவரி 7-ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இயக்குநர் கிரேஸ் லீ, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் மூத்த துணை ஆசிரியர் நாராயண் லக்ஷ்மன், கலை விமர்சகர் சதானந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கலந்துரையாடலின் முக்கிய அம்சமாக இயக்குநர் கிரேஸ் லீ இயக்கிய ‘ஜெனீன் ஃப்ரம் தெ மொய்ன்’(Janeane from Des Moines) என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.
ஓர் இல்லத்தரசியும் சில அரசியல்வாதிகளும்
இயக்குநர் கிரேஸ் லீ ‘ஜெனீன் ஃப்ரம் தெ மொய்ன்’என்ற இந்தத் திரைப்படத்தை ஒரு மாதிரி ஆவணப்படமாக (Mockumentary) எடுத்திருக்கிறார். 2012 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர்களை ஐயோவா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண இல்லத்தரசியான ஜெனீன் சந்திக்கிறார். இந்த வேட்பாளர்களிடம் தன்னுடைய பிரச்சினைகளை முறையிட்டு, அதற்கான தீர்வுகள் அவர்களிடம் இருக்கிறதா என்று கேள்வியெழுப்புகிறார். இதுதான் படத்தின் மையக்கரு. ஐயோவாவின் தேர்தல் பிரச்சார நிகழ்வுகளின் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜெனீன் (ஜேன் எடித் வில்சன்) ஒரு நடிகர் என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு ஆவணப்படத்துக்காக எடுக்கப்படும் காட்சிகள் என்பதும் எந்த வேட்பாளருக்கும் பொதுமக்களுக்கும் தெரியாது.
பகுதி நேரமாகச் சுகாதார உதவியாளராகப் பணியாற்றுகிறார் ஜெனீன். குடியரசு கட்சியின் கொள்கைகளை ஆதரிக்கும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். அவருடைய கணவரின் வேலை பறிபோய்விடுகிறது. ஒருகட்டத்தில், அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதும் தெரியவருகிறது. ஆனால், கணவரின் வேலைப் பறிபோய்விட்டதால் மருத்துவக் காப்பீடு வசதியைப் பயன்படுத்தமுடியாமல் போகிறது. என்ன செய்வெதன்று தெரியாமல் தவிக்கிறார். ஆனால், தொடர்ந்து தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
பதில் கிடைக்காத கேள்விகள்
மத்திய மேற்கு அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும் வேலைவாய்ப்பின்மை, மருத்துவக் காப்பீடு போன்ற இந்தப் பிரச்சினைகளை வேட்பாளர்களிடம் முன்வைக்கிறார் ஜெனீன். 2012 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் மிட் ரோம்னி, ரிக் சன்டோரம், ரிக் பெர்ரி, மிச்சல் பேச்மேன் உள்ளிட்டவர்களைத் தனியாகச் சந்தித்து பேசுகிறார் அவர். இந்தச் சந்திப்புகளின்போது, ஜெனீனுக்கு அவருடைய கேள்விகளுக்கு பதில்கள் எதுவும் கிடைத்துவிடவில்லை. ஆனால், குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட கொள்கைகளை அவரிடம் வெளிப்படுத்துகிறார்கள். உதாரணமாக, ஜெனீனுடன் பேசும்போது மிச்சல் பேச்மேன் தன்னை ஒரு பழமைவாத கிறிஸ்தவர் என்று சொல்கிறார். ஐயோவாவில் இயங்கும் ‘பிளான்டு பேரன்ட்வுட்’ என்ற சுகாதார மையத்தை ‘கொலைத் தொழிற்சாலை’என்று மிச்சல் வர்ணிக்கிறார். அதைப்போல, குடியரசுக்கட்சி ஆதரவாளரான ஜெனீனும் தனக்கு மருத்துவ உதவிசெய்யும் மையத்தில், “ஒபாமா கேர் திட்டமாக இல்லாமல் வேறு எதுவாக இருந்தாலும் சரி” என்று சொல்கிறார். குடியரசுக் கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என இரண்டு தரப்பின் மனநிலையையும் இந்தப் படம் அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது.
ஜெனீன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜேன் எடித் வில்சன் யதார்த்தத்திலிருந்து விலகாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் நையாண்டி செய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஜெனீன் கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மை இந்தப் படத்தைக் கூடுதலாக ரசிக்கவைக்கிறது.
2012-அதிபர் தேர்தல் முடிவுகளில் ஒபாமாவே மீண்டும் அதிபரானதால் இந்த ஆவணப்படம் அப்போது அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது. ஆனால், இப்போது குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்த நேரத்தில் இந்தப் படம் அதற்கு மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ட்ரம்ப் ஏன் வெற்றிபெற்றார் என்பதற்கான விடையைக்கூட இந்தப் படத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவின் பழமைவாத முகத்தின் இன்னொரு பக்கத்தை இந்தப் படத்திலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது.
இயக்குநர் குரல்
“மத்திய மேற்கு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நான், ஜெனீன் மாதிரியான பல நபர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் பழமைவாதிகளாக இருக்கிறார்கள் என்று மதிப்பீடு செய்வதைவிட, அதற்கான காரணத்தைத் தேடியபோதுதான் ஜெனீன் கதாபாத்திரம் உருவானது. ஜெனீன் கதாபாத்திரத்தில் நடித்த ஜேன் எடித் வில்சனும் ஐயோவாவைச் சேர்ந்தவர்தான். அந்தக் கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மை கூடுதலாக அமைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல்தான் இந்தப் படத்தை எடுத்தோம். ஆனால், அரசியல்வாதிகள்தான் தேர்ந்த நடிகர்கள் ஆயிற்றே! ஊடகங்களின் சர்க்கஸையும் இந்தப் படத்தில் நையாண்டி செய்திருக்கிறோம். அதனால் ஊடகக் கேமராக்களின் எதிர்புறத்தில்தான் எங்களுடைய கேமராவை அமைத்திருந்தோம்” என்று சொல்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் கிரேஸ் லீ.