திரை விமர்சனம்: குற்றமே தண்டனை

திரை விமர்சனம்: குற்றமே தண்டனை
Updated on
2 min read

விதார்த்துக்கு கண்ணில் பிரச்சினை. அவரது பார்வை வீச்சின் சுற்றளவு மிகவும் குறைவு. குழாய் வழியாகப் பார்ப்பதைப்போலதான் (Tunnel Vision) அவரால் பார்க்க முடியும். பக்கவாட்டுக் காட்சிகள் தெரியாது. படிப்படியாக அந்தப் பார்வைத் திறனும் மறைந்துவிடும், கண் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே தீர்வாக இருக்கும் என்கிறார் மருத்துவர். இதற்கு அவரது வருமானத்துக்கு மீறிய பெரும் தொகை தேவைப்படுகிறது.

விதார்த் வசிக்கும் வீட்டின் கீழ்தளத்தில் வசிக்கிறார் ஐஸ்வர்யா. அவரது வீட்டுக்கு ரஹ்மானும் மற்றொரு இளைஞரும் அவ்வப் போது வந்து போகின்றனர். திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகிறார். அதன் பின்பு என்ன நடந்தது, கொலை செய்தது யார், இதற்கும் விதார்த்தின் கண் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் என்பது மீதிக் கதை.

படத்தில் கதை என்று சொல்ல பெரி தாக எதுவும் இல்லை. ஒரு கொலை. அதை யடுத்த விசாரணைகள், சந்தேகங்கள், காய் நகர்த்தல்கள் என்று போகிறது திரைக்கதை. குற்றத்தை மையமாகக் கொண்டதுபோலத் தோற்றமளித்தாலும் உண்மையில் இந்தப் படம் மனித இயல்பையே தன் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. மனிதர்களின் நுட்பமான குணாதிசயங்களை வெளிக்கொணரும் காட்சிகள் மற்றும் சம்பவங்களின் தொகுப்பு தான் படம். நியாய தர்மம் பேசும் அளவு கோல்களுக்கு இந்தப் படத்தில் இடமில்லை. பாடல் கிடையாது. முத்திரை வசனம் கிடையாது. நாயகன், வில்லன் போன்ற வழக்கமான சங்கதிகள் எதுவும் கிடையாது.

விதார்த்தைப் பின்தொடரும் திரைக்கதை யின் போக்கில் ரஹ்மான், நாசர், பூஜா தேவ்ரியா, சோமசுந்தரம், ஐஸ்வர்யா ஆகி யோரின் பாத்திரங்கள் வழியாக அவரவர் இயல்பை அப்படியே காட்டியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். ஆசைகள், கனவு கள், ஏக்கங்கள், பொய்மை, கயமை, காதல், துரோகம் என அந்தப் பாத்திரங்களைச் சூழல்களே வடிவமைக்கின்றன. அவர் களது மாற்றங்களையும் சூழல்களே தீர்மானிக்கின்றன.

திரைக்கதையில் அழுத்தம் பெறும் மானுட வாழ்வின் எதிர்மறை அம்சங்களுக் கிடையே நாசரின் தார்மிகக் குரலும் பூஜாவின் களங்கமற்ற அன்பும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. நாசரின் குரல் படத்தின் அறக் குரலாக ஒலிக்கிறது. மனிதர்கள் எவ்வளவு சீரழிந்தாலும் இந்த உலகில் மெய்யான அன்பு எப்போதும் மிச்சமிருக்கும் என்பதைச் சொல்கிறது பூஜாவின் பாத்திரம். விதார்த்தின் குற்ற உணர்வின் இறுக்கம், நிலத்தின் மீது படரும் பனிப்படலம்போலப் படத்தின் மீது படர்ந்து புதியதொரு காட்சி அனுபவத்தை அளிக்கிறது.

பெரிய திருப்பங்களோ, விறுவிறுப்பான ஓட்டமோ அற்ற திரைக்கதையாக இருந் தாலும் சின்னச் சின்னத் திருப்பங்கள் மூலம் சுவாரசியப்படுத்துகிறார் இயக்குநர். வசனங்கள் சிக்கனமாக, இயல்பாக உள்ளன.

விதார்த் தொடங்கி காவல் துறை ஆய் வாளர் மாரிமுத்து, ‘பசி’ சத்யா வரை எல்லா நடிகர்களும் தங்கள் பங்களிப்பை இயல்பாகவும், கச்சிதமாகவும் செய்திருக் கின்றனர். மிகை என்பது எவரிடமும் துளியும் இல்லை. விதார்த்துக்கு நடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பார்வைக் குறைபாடும் குற்ற உணர்வு மாக நடமாடும் பாத்திரத்தை நன்கு கையாண்டிருக்கிறார். பார்வைக் கோளாறை மறைக்க சிரமப்படுவதையும் சிறப்பாகச் செய்திருக்கிறார். பார்வையிலும் சிரிப்பிலும் அன்பைப் பொழிகிறார் பூஜா தேவ்ரியா. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் பின்னணிக்கு வலு சேர்க்கிறார்.

தான் ஏற்கும் ஒவ்வொரு வேடத்துக்கும் பிரத்யேகமான அடையாளத்தை ஏற்படுத்தி விடும் கலைஞன் குரு சோமசுந்தரம். இந்தப் படமும் அதற்கு விலக்கல்ல. அமைதியும் ஆழமும் கொண்ட பாத்திரத்தை முழுமை யாக உள்வாங்கி அற்புதமாக வெளிப் படுத்தியிருக்கிறார் நாசர். ரஹ்மானின் பக்குவமான நடிப்பும் படத்துக்கு வலு சேர்க்கிறது.

திரைக்கதையின் ஒலிப் பரிமாணமாக அமைந்திருக்கிறது இளையராஜாவின் இசை. பின்னணி இசையின் ஓசை தூக்க லாக அமைந்திருப்பது சில இடங்களில் உறுத்துகிறது. என்றாலும், உணர்வுகளை இசையாக மொழிபெயர்க்கும் இளைய ராஜாவின் படைப்பாற்றல் படத்தின் மதிப்பைக் கூட்டுகிறது.

வழக்கமான அளவீடுகளுக்குள் அடங்க மறுக்கும் இந்தப் படம், பார்வை யாளர்களை ஒன்றவைப்பதில் முழு வெற்றி பெறவில்லை என்பதை பலவீனமாகச் சொல்லலாம். மனித நடத்தை, மனிதர்களின் செயல்பாடுகளில் சூழலுக்கு இருக்கும் பங்கு ஆகியவற்றைச் சித்தரித்த விதத்தில் வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர், படத்தைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து நிறுத்துவதில் சற்றே பின்தங்கியிருக்கிறார். காதல் பிரச்சினை களில் சிக்கி இளம்பெண்கள் கொலை யாவது அதிகரித்துள்ள நிலையில் அது போன்றதொரு கொலையைக் கையாளும் இந்தப் படம், அதுகுறித்த கேள்வி எதையும் எழுப்பவில்லை. பாதிக்கப்பட்ட பெண் என்ற கோணம் படத்தில் இல்லை.

நாயகன், நாயகி, வில்லன் முதலான சட்டகங்களைக் கழற்றி எறிந்துவிட்டு, உண்மைக்கு நெருக்கமாக நின்று வாழ்வின் சலனங்களைப் பதிவுசெய்யும் இந்தப் படத்தின் அணுகுமுறை தமிழுக்குப் புதிது. மனிதர்களின் பிறழ்வுகள், குற்றங்களை இயல்பாகச் சித்தரிக்கும் இந்தப் படம், அறத்தின் குரலை மிகையற்ற அழுத்தத்துடன் முன்வைத்திருப்பது படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in