Published : 03 Mar 2014 11:50 AM
Last Updated : 03 Mar 2014 11:50 AM

7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது ‘கிராவிட்டி’: சிறந்த திரைப்பட விருதை வென்றது ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’

நடப்பாண்டுக்கான ஆஸ்கர் போட்டி யில் 7 விருதுகளைக் குவித் திருக்கிறது ‘கிராவிட்டி’. சிறந்த திரைப்படமாக `12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை மேத்யூ மெக்கனாகே, சிறந்த நடிகைக்கான விருதை கேட் பிளான்செட் வென்றனர்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 86-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படத்துக்கான விருது ஸ்டீவ் மெக்குயின் இயக்கிய `12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ படத்துக்கு வழங்கப்பட்டது. விருதுப்போட்டியில் 6,000க்கும் அதிக மான வாக்குகளை இப்படம் பெற்றது. 12 இயர்ஸ் எ ஸ்லேவ் படத்தை இயக்குநர் மெக்குயினுடன் இணைந்து ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் உள்பட 7 பேர் தயாரித்திருந்தனர்.

சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில் டல்லாஸ் பையர்ஸ், கிராவிட்டி உள்பட 9 படங்கள் போட்டியிட்டன.

விருதுகளை அள்ளிய ‘கிராவிட்டி’

இந்த ஆஸ்கர் விழாவில் அதிகபட்சமாக 7 விருதுகளை ‘கிராவிட்டி’ திரைப்படம் வென்றது. சான்ட்ரா புல்லக் நடிப்பில் வெளியான, முப்பரிமாண விண்வெளி சாகசத்தை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் 10 வெவ்வேறு பிரிவுகளில் விருதுக்குப் போட்டியிட்டது. இதில் சிறந்த இயக்குநர், சிறந்த இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட 7 பிரிவுகளில் ‘கிராவிட்டி’ படம் வென்றது.

சிறந்த கலைஞர்கள்

சிறந்த நடிகருக்கான விருது டல்லாஸ் பையர்ஸ் கிளப் படத்தில் நடித்த மாத்யூ மெக்கனாகேவுக்கு வழங்கப்பட்டது. எய்ட்ஸ் நோயாளி மற்றும் அதற்கான மருந்தைக் கடத்தி விற்பவராக மேத்யூ மெக்கனாகே நடித்திருந்தார்.

சிறந்த நடிகைக்கான விருது புளூ ஜாஸ்மின் படத்தில் நடித்த கேட் பிளான் செட்டுக்கு வழங்கப்பட்டது. புளூ ஜாஸ்மின் திரைப்படத்தை வுடி ஆலன் இயக்கியிருந்தார்.

சிறந்த உறுதுணை நடிகர் விருது ஜேரட் லிட்டோவுக்கும், உறுதுணை நடிகை விருது லூபிட்டா நியாங்கோவுக்கும் வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் 12 இயர்ஸ் எ ஸ்லேவ் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

சிறந்த இயக்குநருக்கான விருது ‘கிராவிட்டி’ படத்துக்காக அல்போன்ஸா குவாரோனுக்கு வழங்கப்பட்டது.

ஏமாற்றம் அளித்த திரைப்படங்கள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கன் ஹஸில் திரைப்படம் ஒரு விருதைக் கூட வெல்லவில்லை. இப் படம் 10 பிரிவுகளில் போட்டியிட்டும் வெறுங்கையுடன் திரும்பியது. அதே போல் லியானர்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட் படமும் எந்த விருதையும் பெறவில்லை.

2014 ஆஸ்கர் விருதுப் பட்டியல்

சிறந்த படம் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

சிறந்த அனிமேஷன் படம் - புரோஸன்

சிறந்த ஒளிப்பதிவு - கிராவிட்டி

சிறந்த ஆடை வடிவமைப்பு - தி கிரேட் காட்ஸ்பை

சிறந்த ஆவணப்படம் - 20 ஃபீட் ஃப்ரம் ஸ்டார்டம்

சிறந்த ஆவணக் குறும்படம் - லேடி இன் நம்பர் 6: மியூசிக் சேவ்டு மை லைஃப்

சிறந்த எடிட்டிங் - கிராவிட்டி

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் - தி கிரேட் ப்யூட்டி

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - டல்லாஸ் பையர்ஸ் க்ளப்

சிறந்த இசை - ஸ்டீவன் பிரைஸ் (கிராவிட்டி)

சிறந்த பாடல்- லெட் இட் கோ (புரோஸன்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு- தி கிரேட் காட்ஸ்பை

சிறந்த அனிமேஷன் குறும்படம் - மிஸ்டர். ஹப்லட்

சிறந்த குறும்படம்- ஹீலியம்

சிறந்த ஒலித் தொகுப்பு - கிராவிட்டி

சிறந்த ஒலிக்கலவை- கிராவிட்டி

சிறந்த கிராபிக்ஸ் - கிராவிட்டி

சிறந்த திரைக்கதை - ஹெர்

சிறந்த தழுவல் திரைக்கதை - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

சிறந்த நடிகர் - மேத்யூ மெக்கனாகே (டல்லாஸ் பையர்ஸ் கிளப்)

சிறந்த இயக்குநர் - அல்போன்ஸோ குவாரோன் (க்ராவிட்டி)

எதிரொலித்த கோல்டன் குளோப்

2014-ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகளை வென்ற படங்களே ஆஸ்கரிலும் அதிக விருதுகளை வென்றன.

கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்ட 71 ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படத்துக்கான விருதை 12 இயர்ஸ் எ ஸ்லேவ் வென்றிருந்தது.

இசை மற்றும் நகைச்சுவைப் பிரிவில் சிறந்த படத்துக்கான விருதை அமெரிக்கன் ஹஸில் வென்றிருந்தது. சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதை மெக்கனாகேவும், சிறந்த நடிகைக்கான விருதை கேட் பிளான்செட்டும், சிறந்த இயக்குநருக்கான விருதை அல்போன்ஸோ குவாரோனும் வென்றிருந்தனர்.

சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை ஜேரட் லிட்டோ வென்றிருந்தார். சிறந்த திரைக்கதைக்கான விருதை ஹெர் வென்றிருந்தது. சிறந்த அனிமேஷன் விருதை புரோஸனும், சிறந்த வெளிநாட்டு விருதை தி கிரேட் பியூட்டியும் வென்றிருந்தன. இந்த விருதுப் பட்டியல் ஆஸ்கரிலும் அப்படியே பிரதிபலித்தது.

ஆனால், சிறந்த உறுதுணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை ஜெனிபர் லாரன்ஸிடம் தவறவிட்ட லூபிட்டா நியாங்கோ, ஆஸ்கரில் அதனைத் தட்டிப் பறித்தார். சிறந்த இசை, பாடல் ஆகிய விருதுகளில் மட்டும் மாற்றமிருந்தது. ஆக, ஆஸ்கருக்கு முன்னோட்டமாக கோல்டன் குளோப் அமைந்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x