மலையாளக் கரையோரம்: ரஜினியால் மோகன்லாலுக்கு லாபம்

மலையாளக் கரையோரம்: ரஜினியால் மோகன்லாலுக்கு லாபம்

Published on

ரஜினியால் மோகன்லாலுக்கு லாபம்

மலையாள நடிகர்கள் அன்று முதல் இன்று வரை சினிமாவில் சம்பாதித்ததைப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வாழ்க்கையை அனுபவித்தவர்கள். பிரேம் நசீர் ‘கார்பன்' தொழில் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். மம்மூட்டி ‘கைரளி' டிவியில் பங்குதாரர் என்கிறார்கள். மோகன்லாலோ இறால் ஏற்றுமதி, ஹோட்டல்கள் நிர்வாகம், பங்குச் சந்தை முதலீடு என்றெல்லாம் கலக்கிவருகிறார் என்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘ஜனதா காரேஜ்' தெலுங்குப் படத்தில் மோகன்லால் நடித்திருப்பதுடன், சம்பளத்தின் ஒரு பகுதியாக ‘ஜனதா காரேஜ்' படத்தின் விநியோக உரிமையையும் வாங்கியுள்ளார். இப்போது ‘கபாலி' படத்தின் கேரளத் திரையரங்க உரிமையை எட்டுக் கோடி கொடுத்து வாங்கிய மோகன் லாலுக்கு அந்தப் படம் 10.5 கோடி வசூல் செய்து கொடுத்திருக்கிறதாம்.

புதிய கணக்கு

கடைசியில் ப்ரியா ஆனந்த் மலையாளக் கரையோரம் சென்றுவிட்டார். தமிழில் 'கூட்டத்தில் ஒருவன்', ‘முத்துராமலிங்கம்' படங்களில் ப்ரியா ஆனந்த் நடித்துக்கொண்டிருந்தாலும், மலையாளப் படஉலகம் மீது ஒரு கண் பதிந்திருந்தது. பழம் கனிந்து பாலில் விழுந்தது போல் ‘எஸ்ரா' பட வாய்ப்பு வந்ததும் ஓகே சொல்லிவிட்டார் ப்ரியா. ‘எஸ்ரா' படத்தில் ப்ரியாவின் ஜோடி பிரித்விராஜ். இதே வேகத்தில் ப்ரியா கன்னடப் பட உலகிலும் புதிதாகக் கணக்கு ஆரம்பிக்கிறார். ப்ரியா நடிக்கும் கன்னடப் படத்தின் தலைப்பு 'ராஜகுமாரா'.

நேற்று சல்மான்! இன்று மம்மூட்டி!

சல்மான்கான் ‘சுல்தான்’ படத்துக்காக ‘குஸ்தி’ செய்து முடித்து, களைத்து, கந்தலான நிலையில்… “பலாத்காரத்துக்கு உட்பட்ட பெண் மாதிரி உணருகிறேன்” என்று கமெண்ட் அடிக்க, அது செய்தி ஊடகங்களில் வெளியாகி, மத்திய பெண் கமிஷன் வரை விவகாரம் போய், சல்மானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சல்மான் நிலைமை தனக்கும் வரும் என்று மம்மூட்டி கனவிலும் நினைக்கவில்லை. ‘கசபா’ படத்தில் பெண்களை குறிப்பாகப் பெண் போலீஸ் அதிகாரியை அவமதித்து மம்மூட்டி நடிக்கும் கதாபாத்திரம் ‘காக்கி’ ராஜன் சக்கிரியா அசிங்கமாக கமெண்ட் அடிக்கும் வசனங்கள் அநேகம். அவைதான், மம்மூட்டிக்கு எதிராக மாறியுள்ளன. “உன்னையெல்லாம் யாருடி போலிஸ்ன்னு சொன்னாங்க”, “நான் நினைத்தால் உன் மாத விலக்கை நிறுத்த முடியும்” என்ற அருவருப்பான வசனங்கள் படத்தில் உள்ளன. இதற்கு மம்மூட்டியின் ஆண் ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தாலும், கேரள மாநில பெண் கமிஷனுக்குப் பெண்கள் சார்பில் புகார்கள் போகவே, கமிஷன் மம்மூட்டிக்கும், பட இயக்குநருக்கும், படத் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘கசபா’ படம் பார்க்கக் கூட்டம் இல்லாத நிலையில், இந்தத் திருப்பம். “அப்படி என்னதான் பொல்லாத வசனங்களை மம்மூட்டி பேசியிருக்கிறார்…” என்று மம்மூட்டி ரசிகர்கள் அல்லாதவரையும் ‘கசபா’ படத்தைப் பார்க்கவைக்கும்.

இரண்டாவது முறை!

தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஃபகத் பாசிலுக்கு வெற்றியைத் தேடித் தந்த படம் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’. ‘சால்ட் அண்ட் பெப்பர்’, ‘22 ஃபீமேல் கோட்டயம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மலையாளத்தின் முன்னணி இயக்குநரான ஆஷிக் அபு இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய திலீஷ்போத்தன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் படம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ஜோடி சேரும் படம் ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’ இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. மகேஷிண்ட பிரதிகாரத்தில் நடித்த சாபின் தாஹீர், அலெயன்ஸியர் லே ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்க இருக்கிறார்கள். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படமும் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in