Last Updated : 05 Aug, 2016 11:04 AM

Published : 05 Aug 2016 11:04 AM
Last Updated : 05 Aug 2016 11:04 AM

’ஒலிம்பிக்’ களத்தில் சில திரைப்படங்கள்

எங்கும் ஒலிம்பிக் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. வெற்றி தோல்விக்கிடையே அல்லாடும் பல மனிதர்களின் வாழ்வை ஒலிம்பிக்கின் பின்னணியில் பார்க்க முடியும். உலகமெங்குமிருந்தும் கலவையான மனிதர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் விளையாட்டுக் களம் உயிரோட்டமான பல கதைகளின் களமாகவும் உள்ளது. அப்படியான கதைகளின் அடிப்படையில் உருவான சில ரசனையான திரைப்படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒலிம்பியா (1938)

ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி (1936) Olympia: Festival of Nations மற்றும் Olympia: Festival of Beauty என 2 பாகங்களில் ஆவணத் திரைப்படமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நடிப்பு, ஒளிப்பதிவு, தயாரிப்பு, நடனம், எடிட்டிங் எனப் பன்முகத்திறமை கொண்ட லெனி ரைஃபென்ஸ்தால் (Leni Riefenstahl) என்ற பெண் இயக்குநரின் ஆக்கத்தில் இப்படங்கள், அதன் தொழில்நுட்ப உத்திகளுக்காக இன்றளவும் பேசப்படுகின்றன.

டோக்யோ ஒலிம்பியாட் (Tokyo Olympiad 1965)

நாஜி ஆட்சிக்கால ஜெர்மனி தன்னை உலகப் பார்வையில் நல்லவிதமாகக் காட்டிக்கொள்ள ஆவணமாக்கிய ‘ஒலிம்பியா’ போல, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் மேற்கொண்ட முனைப்பே ‘டோக்யோ ஒலிம்பியாட்’ திரைப்படம். டோக்யோவில் (1964) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழா முதல், நிறைவு விழா வரையிலான நிகழ்வுகளைத் திரைப்படமாக பதிவுசெய்தார்கள். ஒலிம்பியா போல டோக்யோ ஒலிம்பியாடும் இன்னமும் பேசப்பட அதன் ஆவண உத்தியே காரணம்.

சாரியட்ஸ் ஆஃப் ஃபயர் (chariots of Fire 1981)

1924-ல் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரிட்டன் குழுவில் யூதரான ஹரால்ட் ஆப்ரஹம் மற்றும் கிறிஸ்துவரான எரிக் லிடல் என்ற 2 தடகள வீரர்கள் தயாராகிறார்கள். மதம் மற்றும் இன ரீதியான இடைஞ்சல்கள், பயிற்சியின்போதும் ஒலிம்பிக் களத்திலும் முளைத்த தடைகள்… இவற்றைத் தாண்டி இருவரும் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரான இத்திரைப்படம், சிறந்த படம், திரைக்கதை, உடையலங்காரம் மற்றும் இசை என 4 ஆஸ்கர் விருதுகள் உட்பட 18 சர்வதேசத் திரைப்பட விருதுகளை வாங்கிக் குவித்தது. 2012-ல் லண்டன் ஒலிம்பிக்கை முன்னிட்டு, நவீனத் தொழில்நுட்பங்களுடன் இங்கிலாந்தில் இத்திரைப்படம் மீண்டும் வெளியானது.

ரன்னிங் பிரேவ் (Running Brave 1983)

அமெரிக்க இந்தியராகப் பிறந்து அந்நாட்டுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பில்லி மில்ஸின் கதையே ரன்னிவ் பிரேவ் திரைப்படம். வறிய குடும்பம், தாய் தந்தையை இழந்து அநாதையானது ஆகியவற்றைவிட, அமெரிக்க இந்தியராகத் தனக்கான அடையாளத் தேடலே பில்லி மில்ஸை ஓடவைத்தது. குத்துச்சண்டை, கால்பந்து என தனக்கு பயிற்றுவிக்கப்பட்டதைத் தவிர்த்துவிட்டு மில்ஸ் ஓட ஆரம்பித்ததற்கு இதுவே காரணம். இனவெறிப் பாகுபாடுகளைக் கடந்து அமெரிக்க ஒலிம்பிக் அணியில் இடம்பிடித்த மில்ஸ், ஒருவழியாய் டோக்யோ ஒலிம்பிக்கில் 10 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்கிறார். ஓட்டக் களத்தில் சக வீரர்களால் நெட்டித்தள்ளப்பட்டும், அசராது மில்ஸ் எல்லைக்கோட்டை தாண்டுவதை ‘ரன்னிங் பிரேவ்’ துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

பிரிஃபாண்டெய்ன் (Prefontaine 1997)

நீண்ட தூர ஓட்டப் பந்தய வீரராக அமெரிக்க தேசத்தால் கொண்டாடப்பட்டவர் ஸ்டீவ் பிரிஃபாண்டெய்ன். தேசிய சாதனைகள் படைத்த இந்த இளைஞர் அமெரிக்கா சார்பில் ம்யூனிக் (1972) ஒலிம்பிக்கில் பங்கேற்றுக் கண நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அடுத்த ஒலிம்பிக்கிற்கு நம்பிக்கையோடு தயாரான ஸ்டீவ், எதிர்பாரா விதமாய் கார் விபத்தொன்றில் பலியானபோது அவருக்கு வயது 24. அமெரிக்க இளைஞர்களை அதிகம் வசீகரித்த இவரது வாழ்க்கையை பிரிஃபாண்டெய்ன் (1997) என்ற படம் பதிவுசெய்தது. இதே பாணியில் தொடர்ந்து வித்தவுட் லிமிட்ஸ் (Without Limits 1998) என்ற படமும் வெளியானது.

மிராகிள் (Miracle 2004)

அமெரிக்கா-ருஷ்யா இடையே பனிப்போர் தீவிரமான காலத்தில், 1980 குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்ற அமெரிக்க ஆடவர் ஐஸ் ஹாக்கி அணி, ருஷ்யாவை வீழ்த்தி தங்கம் வென்ற பின்னணியில் உருவான படம். அமெரிக்க ஹாக்கி வீரராக இருந்து அந்நாட்டின் ஒலிம்பிக் ஹாக்கி அணியின் பயிற்றுநராக வளர்ந்த ஹெர்ப் ப்ரூக்ஸ் என்பரை மையமாக்கி நகரும் இப்படத்தின் தழுவலே, இந்திய ரசிகர்களுக்காக ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘சக்தே இந்தியா’ இந்திப் படம்.

ம்யூனிக் (Munich 2005)

ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் 1972 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்திருந்த இஸ்ரேலிய வீரர்கள், பாலஸ்தீன தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாகப் பிடிப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஹாலிவுட் படங்கள் கணிசமாக எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் யூதரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரித்து இயக்கிய ‘ம்யூனிக்’ திரைப்படம் முதன்மையானது. 11 யூத விளையாட்டு வீரர்கள் சாவுக்குக் காரணமான தீவிரவாதிகளை உலகம் முழுக்கத் தேடித் தேடி அழித்தொழிக்கும் இஸ்ரேலின் மொஸாட் உளவுக்குழு ரகசிய நடவடிக்கை பின்னணியில், தீவிரவாதத்துக்கு எதிரான அரச பயங்கரவாதத்தையும் அமைதியாக இப்படம் தோலுரித்தது.

த அதெலெட் (2009)

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கறுப்பின ஆப்பிரிக்கரான Abebe Bikila -வின் போராட்ட வாழ்க்கையை செலுலாய்டில் செதுக்கிய படம். 1960 ரோம் மற்றும் 1964 டோக்யோ என அடுத்தடுத்து 2 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்த எத்தியோப்பிய மாரத்தான் வீரர், தொடர்ந்து நேரிட்ட வாகன விபத்தில் சக்கர நாற்காலியில் முடங்கினார். இருந்தபோதும் நம்பிக்கையைத் தளரவிடாது வில்வித்தையில் பங்கேற்க ஆயத்தமானார். ஆனால் விபத்தில் உறைந்திருந்த மற்றொரு உடல்நல பாதிப்பு அவரது ஒலிம்பிக் கனவை நிராசையாக்கி 41 வயதிலேயே உயிரைப் பறித்தது.

பாக் மில்கா பாக் (2013)

ரோம் (1960) ஒலிம்பிக்கில் நூலிழையில் வெண்கலத்தைப் பறிகொடுத்த இந்திய தடகள வீரரான மில்கா சிங் குறித்து, இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் தொடங்கி இந்தியாவின் நிறைவேறாத ஒலிம்பிக் தடகள வெற்றி வாய்ப்பு வரை பேசும் படம். ஜோக்குகளுக்கு அப்பாலும் ‘பறக்கும் சீக்கியர்’ என பாகிஸ்தானால் புகழ் பெற்றவர் மில்கா சிங். இவரது வாழ்க்கையோட்டத்தை, மில்காவின் தந்தை உயிர் அச்சத்தில் ‘ஓடு மில்கா ஓடு’ என்று விரட்டியது ஒலிம்பிக் வரை மில்காவைச் செலுத்தியதையும் இந்த இந்திப் படம் சொல்லும்.

மேரி கோம் (2014)

இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ச்சியாக 5 தங்கம் வென்றதோடு, லண்டன் (2012) ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2 குழந்தைகளின் தாயாக மணிப்பூரிலிருந்து ஒலிம்பிக் வரையிலான மேரி கோமின் கதை, அவரது பெயரிலேயே 2014-ல் படமானது. மேரி கோமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த வகையிலும் இந்த இந்திப் படம் கவனம் ஈர்த்தது. வணிக ரீதியிலும் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்த படம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x