

மெட்ராஸ் தலித் அரசியலை வெளிப்படையாகப் பேசுகிறது என்று ஒரு தரப்பும், அது ஒரு சராசரி வணிக சினிமா என்று மற்றொரு தரப்பும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மெட்ராஸ் பட விவகாரத்தில் ஒரு விஷயத்தை எல்லோருமே வசதியாக மறந்துவிட்டார்கள்.
‘மெட்ராஸ்’ என்ற தலைப்பைப் பார்த்த பிறகு ‘வேக் அப் சித்’ இந்திப் படத்துக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தில் எத்தனை குடைச்சல் கொடுத்தார்கள் என்ற சம்பவம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. 2009-ல், பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் தயாரிப்பில் வெளியான படம்தான் ‘வேக் அப் சித்’. பாம்பே என்று இருந்த மகாராஷ்டிராவின் தலைநகரை மும்பை என்று மாற்றிய பிறகு எடுக்கப்பட்ட படம்.
இந்தப் படத்தில், நாயகன் ரன்பிர் கபூரும் நாயகி கொங்கனா சென்னும் மும்பை என்று சொல்ல வேண்டிய பன்னிரெண்டு இடங்களில் பாம்பே என்ற பழைய பெயரையே உரையாடலில் பயன்படுத்துவதுபோல காட்சியமைப்புகள் இருந்தன. அவ்வளவுதான், தீப்பற்றிக்கொண்டது.
2006-ல் ராஜ் தாக்கரேவால் ஆரம்பிக்கப்பட்ட மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.), இந்தப் படம் மகாராஷ்டிரர்களை இழிவுபடுத்துகிறது’ என்று எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தியது (அடுத்த சில வாரங்களில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருந்ததும்கூட ஒரு முக்கியக் காரணம்).
சேனாவின் தேர்தல் கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியும், “மும்பை என்று பெயர் மாறியதற்கு நாங்கள் முக்கியக் காரணம். பாம்பே என்ற பழைய பெயரைச் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது’’ என்று இதிலும் உரிமையை நிலைநாட்டியது. அவ்வளவுதான் திரையரங்குகளிலிருந்து படம் அதிரடியாக நீக்கப்பட்டது.
நிலைமையைச் சரிசெய்ய ராஜ் தாக்கரே வீட்டுக்கு விசிட் அடித்தார் படத்தின் இயக்குநர். அங்கேயே அவரிடம் மன்னிப்பும் கேட்டார். படத்தில் இடம்பெற்ற வசனங்களில் பாம்பே என்று வருகிற எல்லாக் காட்சிகளிலும் மும்பை என்று மாற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார். படத்தின் டைட்டில் கார்டில், பாம்பே என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அறிவித்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே, “இனிமேல் திரையுலகம் பாம்பே என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறேன்.” என்று பாலிவுட் படவுலகத்துக்கு த்ரில்லர் படம் காட்டினார். இதைத் தொடர்ந்து போராட்டங்கள் நிறுத்தப்பட்டு, ‘வேக் அப் சித்’ மீண்டும் திரையரங்குகளில் வெளியானது.
மதராஸ், மெட்ராஸ் என்பது சென்னையாக மாற்றப்பட்டதன் பின்னணியில் நவ்நிர்மாண் சேனா போல் தீவிர தமிழ்த் தேசிய அரசியல் இல்லை. காலனியாதிக்கத்தின் தாக்கத்தில் திரிந்துபோன தமிழ் ஊர்களின் பெயர்களை மீட்டெடுக்கும் ஒரு தமிழ்ப் பணியாகவே இது அரசியல் கட்சிகளைக் கடந்து ஒருமித்த உணர்வுடன் செய்யப்பட்டது.
ஆனால் கார்த்தி நடித்து ‘காளி’ என்ற தலைப்பில் உருவாகி வந்த படம் திடீரென ‘மெட்ராஸாக’த் தலைப்பு மாறியபோது தமிழ்நாட்டில் குறிப்பாகச் சென்னையில் வாழும் ஆர்வலரோ, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளோ கிஞ்சித்தும் கண்டுகொள்ள வில்லை என்பதுதான் மெட்ராஸ் பட விவகாரத்தில் மற்றொரு ஆச்சரியம்!