

அரவான் படத்துக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கியிருக்கும் ‘காவியத் தலைவன்’ நவம்பர் 14-ல் வெளியாகிறது. எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் காவியத் தலைவன் உருவான கதையைப் பகிர்ந்துகொண்டார் வசந்த பாலன்.
“திருநெல்வேலியில் ஜெயமோகனோடு ஒரு விடுதியில தங்கியிருந்தேன். நள்ளிரவு தாண்டி நெடுநேரம் பேசிக்கொண்டே இருந்தோம். அப்போது அவ்வை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற புத்தகம் பற்றிச் சிலாகித்துப் பேசினார். பிறகு தமிழ் நாடகம் பற்றி நிறைய பேசினோம். சுதந்திரத்துக்கு முன்பு செழித்து வளர்ந்திருந்தது நாடகக் கலை.
அன்று ஒரு குழுவா தங்கிப் பயிற்சி எடுத்துக்கிறது. சின்ன வயசிலேயே கொண்டுவந்து நாடகத்துல நடிக்கிறதுக்காக விட்டுறது. டிமாண்ட் உள்ள நடிகர்களை ஏலம் போட்டுக்கூட ஒரு முதலாளி இன்னொரு நாடக முதலாளிக்கு வித்த தெல்லாம்கூட நடந்திருக்கு.
ராஜபார்ட், கள்ளபார்ட், ஸ்த்ரீ பார்ட்னு அவங்க வாழ்க்கையே வேறு ஒரு உலகம். அழகான ஆண்கள் ஸ்த்ரீபார்ட் போட்ட காலம். குருகுல வாழ்க்கை. இன்னும் நிறைய ஜெயமோகன் பேசிவிட்டுப் போய்விட்டார். உடனே, நாடகங்கள் சம்பந்தமான நமது வரலாற்றுத் தரவுகளைத் தேடினேன். போதும் போதும்கிற அளவுக்கு நம்மகிட்ட இருந்தது.
இவ்வளவு சுவாரசியமா இருக்கே. இதை ஏன் படமா பண்ணக் கூடாதுனு நினைச்சேன். நிறைய கலர் கலரான துணிகள், மேக்கப்புகள், விதவிதமான கெட்டப்புகள்னு ஒரு பெரிய உலகம் அது. அந்த உலகம் தமிழ் சினிமால வரல. மக்களுக்கும் இலக்கியத்திற்கும் பாலமா நாடகங்கள் இருந்திருக்கு.
நாடகக் கலைஞர்கள்தான் நேரடியா மக்கள்கிட்ட பேசியிருக்காங்க. நாடகத்தைப் போராட்ட ஆயுதமாகவும் பயன்படுத்தியிருக்காங்க. காரணம் அந்தக் காலத்தில் மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு நாடகம் மட்டும்தான். அதை இன்றைய முக்கியப் பொழுதுபோக்கா இருக்கும் சினிமாவில் சுவைபடச் சொன்னா என்ன என்று நினைத்தபோது உருவானதுதான் காவியத் தலைவன் கதை.
சித்தார்த், பிருத்விராஜ், நாசர், வேதிகான்னு எல்லோருமே அந்தக் காலத்துல பார்த்த அழகான நாடக நடிகர்களாக மாறி இருக்கிறாங்க. ரசிகர்கள் மனதைக் கண்டிப்பா கொள்ளையடிப்பாங்க” என்கிறார் வசந்த பாலன்.