

அடிப்படை மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது அவை போலியானவையாக இருக்கக் கூடாது. அப்போதுதான் அவற்றோடு ரசிகர்கள் ஒன்ற முடியும். என்றென்றும் புன்னகை படத்தில் இதை ஓரளவு சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அகமது.
கவுதம் (ஜீவா), ஸ்ரீ (வினய்), பேபி (சந்தானம்) மூவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள். மூவரும் சேர்ந்து விளம்பரப் படங்கள் எடுக்கும் நிறுவனத்தை நடத்துகிறார்கள். கவுதம் சிறுவனாக இருந்தபோது அம்மா, அப்பாவை விட்டுப் பிரிந்துவிடுகிறார். இதனால் பெண்கள் என்றாலே கவுதமுக்கு ஆழமான வெறுப்பு. அப்பாவின் மீதும் அந்த வெறுப்பு படர்கிறது. அவரோடு பேசுவதே இல்லை. காதல் மீது நம்பிக்கையற்றவனாக, கல்யாணமே வேண்டாம் என்னும் உறுதியுடன் வாழ்கிறான். கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது என்று நண்பர்களையும் வற்புறுத்துகிறான்.
தொழில் நிமித்தமாக ப்ரியாவை (த்ரிஷா) சந்திக்க நேர்கிறது. கவுதம் அவளைக் கண்டுகொள்வதே இல்லை. விளம்பரப் படத்தில் நடிக்கும் சோனியா (ஆண்ட்ரியா) கவுதமால் கவரப்படுகிறாள். கவுதம் அவளை முரட்டுத்தனமாக விலக்குகிறான். ப்ரியாவுக்கு கவுதம் மீது அனுதாபமும் அன்பும் இருந்தாலும் அவள் நிதானமாக நடந்துகொள்கிறாள். எதிர்பாராத ஒரு தருணத்தில் கவுதமின் நண்பர்கள் அவனை விட்டுப் பிரிந்து, திருமணமும் செய்துகொள்கிறார்கள். தொழிலில் நெருக்கடி ஏற்படும் கட்டத்தில் ப்ரியா கவுதமுக்குக் கைகொடுக்கிறாள். இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்படுகிறது. ஒரு பூவைப் போல இயல்பாக மலரும் காதலை கவுதமின் வீம்பு கசக்கி எறிகிறது.
அவனிடம் மாற்றம் ஏற்பட்டதா? காதல் மீண்டும் மலர்ந்ததா?
முதல் பாதி நட்பு, கிண்டல், கேலி என்று நகருகிறது. இரண்டாம் பாதியை உணர்ச்சிப் போராட்டங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. உணர்ச்சி களை அழகாகவும் அழுத்தமாகவும் கையாண்டிருக்கும் இயக்குநர் அகமது, நட்பைக் கையாள்வதில் சறுக்குகிறார். நட்பு சிறுபிள்ளைத்தன்மானதாகவே தெரிகிறது. கவுதமின் பெண் வெறுப்பு, அப்பாவின் மீதான கோபம் ஆகியவற்றுக்கும் அழுத்தமான காரணம் சொல்லப்படவில்லை.
அழகும் திமிரும் கொண்ட சோனியாவின் ஆளுமை அழுத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மென்மையும் அன்பும் கொண்ட ப்ரியாவின் ஆளுமை இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவளுக்கு கவுதம் மீது காதல் வரும் இடமும் இயல்பாகவே உள்ளது.
தனது தந்தையுடன் கவுதம் பேசாமல் இருப்பதற்கான காரணம் மிகவும் பலவீனமாக உள்ளது. கல்யாணமான ஆண்கள் அனைவருமே அனுதாபத்துக்குரியவர்களாகச் சித்தரிக்கப்படும் தேய்ந்துபோன படிமம் இந்தப் படத்திலும் உள்ளது.
’கோ’ படத்துக்குப் பிறகு ஜீவாவுக்கு சரியான நடிப்புத் தீனி. தனிமையின் கழிவிரக்கத்தையும் வீம்பையும் நெகிழ்வையும் நன்றாகச் சித்தரித்திருக்கிறார். ஒரு காட்சியில்கூட சொதப்பவில்லை. த்ரிஷாவின் நடிப்பில் நுட்பமும் முதிர்ச்சியும் கூடியுள்ளன. சந்தானத்தின் காமெடி பல இடங்களில் சிரிக்கவைக்கிறது. வினய் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பாசமும், ஏக்கமும் நிறைந்த அப்பாவாக மிக நெருக்கமாக உணர வைக்கிறார் நாசர்.
ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஏமாற்றவில்லை. ஒளிப்பதிவாளர் மதி காட்சிகளுக்கு அழகூட்டுகிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் அழகு. நட்பு, காதல், பாசம் மூன்றையும் வைத்துக் கதை சொன்ன விதத்தில் அகமத் கவர்கிறார். முதல் பகுதியை மேலும் செதுக்கியிருந்தால் புன்னகை மேலும் பிரகாசமாக இருந்திருக்கும்.