

ஒரு படத்தின் கதைக்காக நடிகர்கள் தன்னுடைய உடலமைப்பை முழுவதுமாக மாற்றியமைதில்லை. அவ்வாறு மாற்றியமைக்கும் சில நடிகர்களில் ஒருவர் ஆர்யா. உடற்பயிற்சியில் தீவிரம் காட்டிவருபவர், 'கடம்பன்' படத்துக்காகத் தன் உடலமைப்பை முழுமையாக மாற்றியமைத்துள்ளார். அவரிடம் இது குறித்துப் பேசியதிலிருந்து...
உடற்பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்களே. எப்படி இந்த ஆர்வம் வந்தது?
நான் சிறு வயதிலிருந்தே தடகளவீரன். அதன் பிறகு மாடலிங் செய்து பின்னர் நடிகனானேன். பள்ளி, கல்லூரியில் வகுப்புகளில் இருந்ததைவிட மைதானத்தில் இருந்ததுதான் அதிகம். இப்போது நான் மைதானத்தில் இருக்கும் நேரம் குறைவு. ஏனென்றால் சினிமா மைதானத்தில் அதிகமாக விளையாடுகிறேன்.
ட்விட்டர் தளத்தில் பலரும் தங்கள் படத்தை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தும்போது, நீங்கள் உடற்பயிற்சி பற்றி அதிகம் குறிப்பிட என்ன காரணம்?
இதுவரை சுமார் முப்பதாயிரம் ட்வீட்ஸ் செய்திருப்பேன். அதில் மொத்தமாகப் பதினைந்து ட்வீட்ஸ் மட்டுமே என் படத்துக்காக செய்திருப்பேன் என நினைக்கிறேன். ஏனென்றால், ட்விட்டரில் நாம் தகவல் மட்டுமே கொடுக்க முடியும். படம் நல்லாயிருந்தால் மட்டுமே வெற்றியடையும். விளம்பரங்கள் மூலமாக ஒரு படம் வருகிறது என்று மக்கள் தெரிய வைக்க வேண்டும். ட்ரெய்லர், டீஸர் மூலமாகவே மக்கள் இந்தப் படத்துக்குப் போகலாமா, வேண்டாமா என்று முடிவு செய்துவிடுவார்கள். எனவேதான், எனக்கு மிகவும் பிடித்த உடற்பயிற்சி பற்றி அதிகமாக ட்வீட்ஸ் செய்கிறேன்.
உடற்பயிற்சி சம்பந்தமான ட்வீட்களுக்கு வரவேற்பு எப்படியுள்ளது?
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான் எனது ட்வீட்டுகளின் நோக்கம். ட்விட்டரில் பதிவிடும்போது, “ஆர்யா செய்வது நல்லாயிருக்கே. ஏன் நம்மளும் செய்யக் கூடாது” எனத் தோன்றும். நாம் கடந்த வாரம் இப்படிச் செய்துள்ளோம், இந்த வாரம் இதைச் செய்யலாம் என்று தோன்றும். நாம் எங்கு தவறு செய்கிறோம், என்ன சாப்பிட்டால் உடல் எடை குறைகிறது, கூடுகிறது உள்ளிட்ட அனைத்தையுமே அளவீடுகள் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொருத்தரின் உடலமைப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும். “நீ என்ன மச்சான் சாப்பிடுற, எனக்குச் சொல்லேன்” என்று கேட்பார்கள். அதெல்லாம் சுத்த வேஸ்ட். நமது உடலமைப்பை அளவீடு செய்தால் மட்டுமே அதைத் தெரிந்துகொள்ள முடியும்.
ட்விட்டரில் பதிவிடுவதின் மூலம் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?
உடற்பயிற்சியின் மீது அனைவருக்குமே ஆர்வம் உண்டு. நானே ஒருசில நாட்கள் இன்றைக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டுமா என நினைப்பேன். அப்போது “அய்யோ. இன்றைக்குக் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்து ட்விட்டரில் பதிவிட வேண்டுமே” என்ற எண்ணத்தில் உடற்பயிற்சிக்குச் செல்வேன். அப்போதுதான் நாம் நிறைய பேரை ஊக்குவிக்க முடியும் என நினைப்பேன். மற்றவர்கள் அவர்களுடைய உடற்பயிற்சி அளவீடுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “செமயா இருக்கே… நாமும் இப்படி செய்யலாம்” எனத் தோன்றும். என்னை விட அதிக நேரம் ஓடக்கூடியவர்கள், சைக்கிள் ஒட்டக்கூடியவர்கள் ட்விட்டரில் இருக்கிறார்கள். அதிலிருந்து நான் கற்றுக்கொள்கிறேன். ட்விட்டரில் உடற்பயிற்சியின் மூலம் நிறைய பேர் என்னைக் கவர்ந்துள்ளார்கள், நானும் நிறைய பேரை ஊக்குவித்துள்ளேன் என நம்புகிறேன். #MMDDDDLCTworkout என்ற ட்விட்டர் டேக்கில் போனால் பலரும் அவர்களுடைய உடற்பயிற்சி அளவீடுகளைப் பகிர்ந்துவருவதைக் காணலாம்.
உங்களுடன் உடற்பயிற்சிக்கு வரும் திரையுலகப் பிரபலங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...
சினிமா என்பது ரொம்ப சிரமம். அழுத்தம் நிறைந்த வேலை. பலர் அதை மறப்பதற்குக் குடிப்பார்கள், பார்ட்டிக்குப் போவார்கள் அல்லது உடற்பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதன் மூலமாக அழுத்தத்தைக் குறைப்பார்கள். எனக்குத் தெரிந்து உடற்பயிற்சியால் மட்டுமே அழுத்தத்தைக் குறைக்க முடியும் என நினைக்கிறேன். நாயகர்கள் என்றாலே உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க வேண்டும். சண்டையிடுவது, நடனமாடுவது எல்லாம் எளிதான வேலை அல்ல. எந்த நேரத்தில் செய்யச் சொல்வார்கள் என நம்மால் யூகிக்க முடியாது.
அனைத்து நடிகர்களுமே உடற்பயிற்சி செய்கிறார்கள். கூடத்தில் இல்லாமல் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வதுதான் மிகவும் சிறந்தது. அனைவராலும் திறந்த வெளிக்கு வந்து உடற்பயிற்சி செய்வது சாத்தியமில்லை. நான் என் அணியுடன் செல்வதால் எனக்குப் பிரச்சினையில்லை. எனது நண்பன் விஷால், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலர் என் அணியுடன் வந்து உடற்பயிற்சி செய்துவருகிறார்கள்.
படப்பிடிப்புப் பணிகளுக்கு இடையே உடற்பயிற்சி செய்வதற்கு தினமும் நேரம் கிடைக்கிறதா?
நமக்கு நேரமில்லை என்று நினைத்தால் கண்டிப்பாக நேரம் இருக்காது. நான் சைக்கிள் ஓட்டப் போகும்போது அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்துவிடுவேன். அது முடித்துவிட்டுப் படப்பிடிப்பு செல்வேன். சைக்கிள் ஓட்டப் போகவில்லை என்றால் படப்பிடிப்பு முடித்துவிட்டு மாலையில் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வேன். ஒரு நாளில் அனைத்துப் பயிற்சிகளும் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு நாளுக்கு ஏதாவது ஒரு பயிற்சி கண்டிப்பாகச் செய்ய வேண்டும். நேரமில்லை என்று சொல்வது முட்டாள்தனம், ஒரு நாளைக்கு நம்மால் 45 நிமிடங்கள்கூட ஒதுக்க முடியாதா?
‘கடம்பன்' படத்துக்காக எந்த அளவுக்கு உடலமைப்பை மாற்றியுள்ளீர்கள்?
18 கிலோ எடையைக் கூட்டினேன். 91 கிலோ கொண்டுவந்து கொஞ்சம் குறைத்து 88 கிலோவிலேயே உடல் எடையை வைத்திருந்து நடித்துள்ளேன். சிக்ஸ் பேக் வைக்கும்போது அனைவருமே சாப்பாட்டைக் குறைத்துக்கொண்டுவருவார்கள். அது அனைவருமே செய்வது; நான் அப்படிச் செய்யவில்லை. கதைக்கு ஏற்ப படத்தில் நீங்கள் உயரமானவராகவும், நல்ல உடலமைப்பு உடையவராகவும் தெரிய வேண்டும் என்று இயக்குநர் தெரிவித்துவிட்டார். ஏனென்றால் யானைக்குப் பக்கத்தில் ஒல்லியாக இருந்தால் காமெடியாக இருக்கும். அதுமட்டுமன்றி, நாம் ப்ரேமிலேயே தெரியவே மாட்டோம். ஆகையால், பிரம்மாண்டமான உடலமைப்பு வேண்டும் என முடிவு செய்து நன்றாக சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்தேன். இப்போது கடம்பன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது
மீண்டும் உடல் எடையைக் குறைக்க சிரமமாக இருந்திருக்குமே?
‘சந்தனத்தேவன்' படத்துக்கு நல்ல ஒல்லியாக இருக்க வேண்டும் என இயக்குநர் அமீர் கேட்டுக்கொண்டார். அதற்காக 15 கிலோ எடையைக் குறைத்துவருகிறேன். 'சங்கமித்ரா' படத்துக்காக 'கடம்பன்' படத்தை விட உடல் எடையை அதிகரித்து மேலும் பிரம்மாண்டமான உடற்கட்டு வேண்டும் என இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். பலூனில் காற்று அடிப்பது போல உடல் எடையைக் குறைப்பதும் அதிகரிப்பதும் எனக்கு வாடிக்கையாகிவிட்டது. நல்ல இயக்குநர்கள், நல்ல கதை வரும்போது உடல் எடையைக் குறைப்பது, அதிகரிப்பது ஒரு பெரிய விஷயமில்லை என நினைக்கிறேன். எனக்குப் புகைப் பழக்கமோ, குடிப் பழக்கமோ கிடையாது. அது எனக்கு மிகப் பெரிய நன்மையாக இருக்கிறது. இந்தப் பழக்கங்கள் இருந்திருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும்.
கதாநாயகிகள் உடற்பயிற்சியில் போதிய ஆர்வத்துடன் இருப்பதாக நினைக்கிறீர்களா?
அவர்களும் நன்றாகவே உடற்பயிற்சி செய்கிறார்கள். அவர்களும் கேரக்டருக்காக உடல் எடையைக் கூட்டுவார்கள், குறைப்பார்கள். ஒரு மாதத்தில் நான்கு படங்களில் மாற்றி மாற்றி நடிப்பார்கள். நடிகர்களை விட நடிகைகள்தான் பயங்கர பிஸி. அவர்கள் முக்கியமாகச் சாப்பாட்டில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதில் கவனமாக இல்லையென்றால் உடல் எடை பயங்கரமாக கூடிவிடும். நடிகைகளைச் சந்தித்துப் பேசும்போது, என்னவெல்லாம் சாப்பாடு ஃபாலோ செய்கிறார்கள் எனச் சொல்வார்கள். நான் செய்யும் உடற்பயிற்சிக்கும், அவர்களுடைய உடற்பயிற்சிக்கும் சம்பந்தமே கிடையாது.
கடந்த ஆண்டு சைக்கிள் போட்டியில் பங்கேற்றீர்கள். இந்த ஆண்டு?
இரும்பு மனிதன் போட்டிக்குத் தயாராகலாம் என்று இருக்கிறேன். நீச்சல், சைக்கிள் ஒட்டுவது, ஒட்டுவது என அனைத்தும் கலந்தது. அதற்குத்தான் தயாராகிவருகிறேன்.