இங்கே நண்பர்கள், அங்கே எதிரிகள்

இங்கே நண்பர்கள், அங்கே எதிரிகள்
Updated on
1 min read

தமிழ் சினிமாவின் இணை பிரியாத நண்பர்கள் பட்டியலில் ஆர்யா - விஷால் இருவருக்கும் ஆத்மார்த்தமான இடமுண்டு. ‘நான் கடவுள்’ படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்ட ஆர்யா, தனது நண்பன் விஷாலை இயக்குநர் பாலாவிடம் பரிந்துரைத்தார். அதனால் ‘அவன் இவன்’ படத்தில் நடித்து நல்லபெயர் வாங்கினார். விஷாலுக்குத் திருமணம் ஆனால்தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று பேட்டிகொடுப்பார் ஆர்யா. ஆர்யா வீட்டு பிரியாணியைப் போல இந்த உலகில் வேறு எங்கும் பிரியாணி கிடையாது. இது என் நண்பனின் கைமணம் என்பார் விஷால்.

இத்தனை நெருக்கமான இந்த நண்பர்கள் தெலுங்கில் எதிரிகள் ஆகியிருக்கிறார்கள். இவர்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் இன்று ஆந்திர பாக்ஸ் ஆபிஸில் ஒரு கை பார்க்க இருக்கின்றன. ஏற்கனவே தெலுங்கில் நல்ல வர்த்தகத்தை வைத்திருக்கும் விஷாலின் ‘பட்டத்துயானை’, ‘தீருடு’வாகத் தெலுங்கில் இன்று வெளியாக உள்ளது. ஆர்யா, நயன்தாரா நடித்து தமிழில் சக்கைபோடு போட்ட ‘ராஜா ராணி’யும் இன்று களம் காண்கிறது.

தனது நண்பர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்த ‘பட்டத்து யானை’, தமிழில் சுமாரான வெற்றியையே பெற்றது. இதில் அர்ஜூன் மகள் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் ஆர்யாவின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி, 40 கோடி வசூலை அள்ளியது ‘ராஜா ராணி’. ‘தீருடு’ (தீரன்) என்று தலைப்பு இருப்பதால் தெலுங்கு ரசிகர்கள் விஷாலின் ஆக்‌ஷன் படத்தை எதிர்பார்க்கிறார்கள். அதேநேரம் ‘ராஜா ராணி’க்கும் எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. அந்த அழகான காரணம் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் நயன்தாரா.

நண்பர்கள் இரண்டு பேரில் யார் அங்கே வசூல் ராஜா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in