Last Updated : 18 Oct, 2013 10:53 AM

 

Published : 18 Oct 2013 10:53 AM
Last Updated : 18 Oct 2013 10:53 AM

இது ஆண்களின் ரகசிய உலகம்

ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை உலகின் பார்வைக்குக் கொண்டுசென்றதில் ஆவணப்படங்களின் பங்கு முக்கியமானது. ஆவணப்படங்களைப் பிரச்சார ஆயுதமாகத் தமிழகத்தில் செயல்படுத்திக் காட்டியவர்களில் முக்கியமானவர் ஆர்.பி. அமுதன். இவரது ‘செருப்பு’, ‘மயானக் குறிப்புகள்’, ‘வந்தே மாதரம்’ போன்றவை, உலக ஆவணப்பட விழாக்களில் கவணத்தையும் பரிசுகளையும் பெற்ற முக்கிய ஆவணப்படங்கள். மதுரை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் லீலாவதி படுகொலை தொடர்பாக இவர் எடுத்த லீலாவதி என்ற ஆவணப்படம் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆவணப்படத் தளத்தில் தீவிரமாக இயங்கிவந்த இவர், தற்போது ‘த ரிடில்’ (புதிர்) என்னும் திரைப்படத்தின் மூலம், வெகுஜன சினிமாவுக்கும் வந்திருக்கிறார். தி இந்துவுக்காகப் பிரத்தியேகமாகத் தனது திரைப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். படத்தைப் பற்றி இவர் அளிக்கும் முதல் பேட்டி இது.

ஒரு ஆணாதிக்க சமூகத்தின் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்தான் என்பதைத் திரைப்படம் மூலம் சொல்ல இருக்கிறார். குடும்பம் மற்றும் பொருளாதார நிலையை முன்னிட்டு, இயல்பான பாலுறவு கிடைக்காமல் இருப்பது முதல், பாலியல் வன்முறை வரை பல்வேறு துயரங்களை அடையும் மூன்று நகரங்களைச் சேர்ந்த ஆண்களின் கதையை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என நான்கு மொழிகளில் இயக்குகிறார் அமுதன்.

“சிறு வயதிலேயே சித்தப்பாவினால் பாலியல் தொந்தரவுக்குள்ளாகி, செக்ஸ் என்றாலே அருவெறுக்கும் ஐடி இளைஞன், தங்கைகளைத் திருமணம் செய்து கொடுப்பதிலேயே 40 வயதைக் கடந்து, பாலுறவு அனுபவம் இல்லாமலேயே ஆபாசப்படங்கள் (போர்ன் வீடியோ) மூலமே தனது ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் நடுத்தர வயது மனிதர், ஓரினப் பாலுறவில் மட்டுமே நாட்டமுள்ள, ஆனால் அதைக் குடும்பத்திலும் சமூகத்திலும் பகிரங்கமாகத் தெரிவிக்க இயலாமல் ஒளிந்து வாழும் பெங்களூரைச் சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளி ஒருவர். இந்த மூவர்தான் புதிரின் கதாநாயகர்கள். “இவர்கள் தங்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு எப்படி ஒரு விடுதலையைக் கண்டடைகிறார்கள் என்பதைத்தான் நான் என் படத்தில் காட்சிப்படுத்தி வருகிறேன்” என்கிறார் இயக்குனர் அமுதன்.

ஆர்.பி. அமுதனின் இத்திரைப்படத் தயாரிப்பில் இன்னொரு வித்தியாசமும் உள்ளது. நண்பர்கள், முகநூல் மற்றும் இணையதளம் வாயிலாக கோரிக்கை விடுத்து, பண உதவி கோரி ‘க்ரௌட் ஃபண்டிங்’ என்ற முறையில் இந்தப்படம் தயாராகிறது.

“தமிழிலேயே க்ரௌட் ஃபண்டிங்கில் படம் எடுக்கும் முறை சமீபத்தில்தான் தொடங்கியது. ‘பச்சை என்கிற காத்து’ திரைப்படம் அந்த முறையில் முயற்சி செய்யப்பட்டதுதான்.

இந்தப் படத்தை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கான காரணத்தைக் கேட்டபோது அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை அடைய முடியும் என்பது முதன்மையான காரணம் எனும் அமுதம், “லஞ்ச்பாக்ஸ், ஷிப் ஆப் தீசிஸ் திரைப்படங்களில் இந்தி சொற்பமாகப் பேசப்படிருந்தாலும் அவை ஆங்கில மொழிப்படங்கள்தான். அவை பெற்ற வெற்றியும் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. ரிடில் படத்தையும் ஆங்கிலத்தில் கொண்டுசெல்லும்போது அதிக பார்வையாளர்களைச் சென்றடைய முடியும். பெரும்பான்மையும் உலகப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதையே தனது கலையாளுமையாகக் கருதி இயங்கிவரும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சன்னி ஜோசப் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது, இந்தப் படத்தை இன்னும் மேன்மையுறச் செய்யும் என்கிறார்” அமுதன்.

அமுதனின் இத்திரைப்படம் சக ஆண்களாலேயே வன்முறைக்குள்ளாக்கப்படும் ஆண்களைப் பற்றியும், அதனால் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் மன உளைச்சல்கள் பற்றியும் ஆழமாக ஆராய உள்ளது. பாலியல் சார்ந்து இந்திய ஆண்களின் ஏக்கங்கள் மற்றும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தைரியமாகப் பேசப்போகிறது .

அத்துடன் உலகமயமாதல் காரணமாக பெண்கள் அனைத்து துறைகளிலும் கால்பதித்திருக்கும் நிலையில் ஆண்களுக்கு உருவாகியிருக்கும் அச்சுறுத்தல், பாதுகாப்பின்மை உணர்வுகளையும் பேசும் என்கிறார் அமுதன்.

நகர்புறங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தற்காலத்தில் அதிகரித்துள்ளன. இதற்கு காரணமான இந்திய ஆண்களின் பிரச்னைகள் என்னென்ன என்பதை 'புதிர்' ஆராயும் என்கிறார். யார் ஆண்? எது ஆண்மை? அவர்கள் நல்லவர்களா? குரூரமானவர்களா? பாவப்பட வேண்டியவர்களா? இதற்கெல்லாம் பதில்சொல்லப் போகிறது புதிர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x