

மூவிஸ் நவ் சேனலில் ‘ ய பர்ஃபெக்ட் மர்டர்’ (A Perfect Murder)’ என்ற திரைப்படம் ஒளிபரப்பானது. எளிமையான, மூன்றே கதாபாத்திரங்களை முன்னிறுத்தி உருவான திரைப்படம். ஸ்டீபனின் முதலீடுகள் எல்லாம் சரிவைச் சந்திக்கின்றன. மனைவி எமிலி கோடிக்கணக்கான சொத்துக்களைக் கொண்டவள். ஆனால் அவள் தன் கணவனை விட்டு ஓவியன் ஒருவனுடன் தன் வாழ்க்கையைத் தொடர முடிவெடுக்கிறாள். ஸ்டீபனின் ஆராய்ச்சியில் அந்த ஓவியனின் கடந்த காலம் குற்றங்கள் நிறைந்தது ஒன்று எனத் தெரியவருகிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஸ்டீபன் “ உன் குற்றங்களையெல்லாம் வெளிப்படுத்தி விடுவேன். கூடாதென்றால் என் மனைவியை நீயே கொன்றுவிடு. பணமும் தருகிறேன்” என்கிறார். இந்தக் கொலை முயற்சியில் ஓவியன் அனுப்பிய கொலைகாரனை எமிலி கொன்று விடுகிறாள். படத்தின் இறுதியில் உண்மையை அறிந்து கணவனைக் கொன்று விடுகிறாள் எமிலி. தற்காப்புக்கான முயற்சி என்று வாதிட்டு, விடுதலையும் பெறுகிறாள். ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் ‘டயல் எம் ஃபார் மர்டர்’ படத்தை அதிகமாகவே நினைவுபடுத்துகிறது இதன் முதல் பாதி. என்றாலும் தொடர்ந்து சுவாரசியத்தைத் தக்க வைக்கும் திரைப்படம்.
நெத்தியடி
‘சேம் சைட் கோல்’ என்பதுகூடச் சில சமயம் ரசிக்கும்படிதான் இருக்கிறது. விஜய் டிவியின் பொங்கல் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் நடிகர் விஜய் சேதுபதி. நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோள் இது. “நண்பர்களே, பொங்கல் தினத்துல டிவி முன்னாலே உட்கார்ந்துக்காதீங்க. வெளியே போய் அந்த நாளைக் கொண்டாடுங்க”.
தலைவலிப் பூக்கள்
‘ஜி’ டிவியில் ‘தலையணைப் பூக்கள்’ தொடரில் தான் கர்ப்பிணி என்று நாடகமாடுகிறாள் மூத்த மருமகள். சில மாதங்களாகத் தொடரும் இந்த நாடகத்தை அவளுடன் அன்யோன்யமாக இல்லறம் நடத்தும் கணவன் கண்டுபிடிக்கவே இல்லையாம். தலையணைப் பூக்கள் நம் காதுகளில் இவ்வளவு பூக்களைச் சுற்றலாமா?
தலைகீழ் பேட்டி?
கலைஞர் டிவியில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் சாந்தனுவுடன் பங்கேற்றார் பார்த்திபன். “சினிமாவுக்கு சம்பந்தப்படாதவங்க சினிமா தயாரிக்கும்போதுதான் சினிமா வளர்ச்சி அடையுது” என்று ஒரு பொன்மொழியை உதிர்த்தார். (தற்போது வெளியாகியிருக்கும் அவரது திரைப்படம், திரைத்துறைக்கு அறிமுகமில்லாத பத்துப் பேர் இணைந்து தயாரித்திருக்கும் ஒன்று). புதுமை என்ற பெயரில் பார்த்திபனும், பட நாயகன் சாந்தனுவும் தங்கள் நாற்காலிகளை எதிரும்புதிருமாகத் திருப்பிப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து பேட்டி அளித்தனர்! அடுத்த திரைப்படத்தின்போது மேலும் புதுமையாக இருக்கட்டும் என்று சிரசாசனம் செய்தபடியே பார்த்திபன் பேட்டி அளிப்பாரோ?