

சம்பவங்களின் சாட்சிப் பதிவாக மட்டும்தான் ஆவணப்படங்கள் இருக்க வேண்டுமா, ஏன் உணர்வு பூர்வமாக இருக்கக்கூடாது என்கிற கேள்வி சத்யஜித் ரே திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போதே ரெஞ்சித் குழூருக்கு எழுந்தது. அப்படி உருவாக்கியதுதான் ‘18 ஃபீட்’ ஆவணப்படம். முற்போக்குவாதிகளின் மாநிலமாகப் பார்க்கப்படும் கேரளத்தில் வேரூன்றியிருக்கும் சாதியத்தை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கும் படம் இது. 18 அடி என்கிற இப்படத்தின் பெயர் சுட்டிக்காட்டுவது நெடுங்காலமாகக் கேரளத்தில் ஊடுருவியிருக்கும் சாதிய ஒடுக்குமுறையின் அளவுதான்.
கேரளம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடமா கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை அப்பட்டமாக வழக்கில் இருந்த காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியினருக்கு 18 அடி தூரம் இடைவெளி விட்டுத்தான் நடக்க வேண்டும். “இன்று அத்தகைய சாதிய அடக்குமுறைகள் வெளிப்படையாக நடைமுறையில் இல்லைதான். ஆனாலும் அது மிக நுட்பமாக நடந்தேறுகிறது என்பதைத்தான் 18 ஃபீட்டில் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் ரெஞ்சித்.
உறையவைக்கும் உரையாடல்
‘கரிந்தளக்கூட்டம்’ என்கிற இசைக் குழுவினரின் வாழ்க்கை அனுபவங்களின் வழியாகச் சாதியத்தின் கலாசார அரசியலை 18 ஃபீட் காட்சிப்படுத்துகிறது. தலித் மக்களின் வாழ்வை இசை வடிவில் சொல்லும் கரிந்தளக்கூட்டத்தின் தலைவர் ரமேஷ். பேருந்து நடத்துநரான இவர் தன்னுடைய பால்ய நண்பர்களை இணைத்து இசைக் குழுவை உருவாக்குகிறார். பள்ளி ஆசிரியர், கட்டிட மேஸ்திரி என இந்த இசைக்குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வாழ்வாதாரத்துக்காக வெவ்வேறு பணி புரிபவர்கள். ஆனால் தலித் என்பதால் சிறு பிராயத்திலிருந்து சாதிய அடக்குமுறைக்கு ஆளானவர்கள். குறிப்பாகப் படத்தில் ரமேஷின் தந்தைக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் பார்வையாளர்களை உறையவைக்கிறது.
ரமேஷின் தாய் நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த நாட்களை நினைவுகூர்கிறார் அவருடைய தந்தை. மதியச் சாப்பாட்டுக்குக் கூலி வாங்க அண்டைவீட்டு வாசலில் சிதறிக் கிடந்த சாணத்தை அள்ளிய சம்பவத்தை மகனிடம் விவரிக்கிறார். அதைச் சொல்லும்போதே அவருடைய குரல் உடைகிறது, வரண்டு சுருங்கிய கண்களிலிருந்து நீர் வழிகிறது. அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது தன் தாயின் கருவறையில் இருந்தது தான்தான் என்பதை எண்ணி ரமேஷும் கண் கலங்குகிறார். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த குழந்தைகள்கூடச் சாதிய அடையாளத்தைச் சுட்டிக்காட்டியும், சாதியின் பெயராலேயே வயது முதிர்ந்தவர்களைக்கூட விளிக்கும் நிலை உள்ளதை விளக்கும்போதும் ரமேஷ் நொறுங்கிப்போகிறார்.
உதிர்ந்த காதல்!
மற்றுமொரு காட்சியில் இசைக் குழுவைச் சேர்ந்த மோகன், தன் இளமைக் காலக் காதலை நினைவுகூர்கிறார். “ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த என் பள்ளி சக மாணவர்கள், நான் பறையர் காலனியைச் சேர்ந்தவன் என என்னைக் காதலித்துவந்த பெண்ணிடம் சொன்னார்கள். அடுத்த நாளிலிருந்து என் காதலி என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அதுவரை அவளுக்கு என்னுடைய சாதி தெரியாது என்பதே அப்போதுதான் எனக்குப் புரிந்தது” எனச் சிரிக்கிறார். அவர் சிரித்தபடி விவரித்தாலும் அந்தக் காட்சி நம்மை அறைகிறது. இதேபோல ரமேஷின் தாய், மற்றொரு இசைக் கலைஞரின் மனைவி எனப் படத்தில் இடம்பெறும் பெண்களும் சாதியத்தின் மிக நுட்பமான வெறியாட்டத்தை மென்மையாக வெளிப்படுத்துகிறார்கள். உட்சாதிப் பிரிவுகளுக்கு இடையிலும் கால்பதித்திருக்கும் சாதிய வெறியை அவை அப்பட்டமாக்குகின்றன.
மாறாத வாழ்க்கை!
படத்தின் தொடக்கக் காட்சியில் சிறிய இசைக் குழுவாக ஆரம்பிக்கப்படும் கரிந்தளக்கூட்டம் வருடங்கள் உருண்டோடப் பிரபலம் அடைகிறது. உலக இசைத் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகிறது. மலேசியாவில் நடைபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் உலகின் தலைசிறந்த இசைக் குழுக்களுக்கு மத்தியில் கரிந்தளக்கூட்டமும் மேடை ஏறுகிறது. வெளிநாட்டினரின் ஏகோபித்த வரவேற்பைப் பெறுகிறது. ஆனாலும் அங்கும் அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படாமல் ஏமாற்றப்படுகிறார்கள். வெளிநாடு சென்று திரும்புபவர்கள் மீண்டும் தங்கள் குடிசைக்கே திரும்புகிறார்கள். இத்தனை சம்பவங்களையும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பல ஆயிரம் மணி நேரம் தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார் இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் எடிட்டருமான ரெஞ்சித் குழூர்.
இவற்றை 77 நிமிடங்கள் நீளும் படமாகத் தொகுத்திருக்கிறார். 18 ஃபீட்டில் ஒரு நிமிடம்கூட அநாவசியம் இல்லை. இதனாலேயே மும்பை சரவ்தேசத் திரைப்பட விழாவில் 2016-க்கான சிறந்த எடிட்டர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. எடிட்டராகப் பல மலையாளத் திரைப்படங்களில் பணிபுரிந்தாலும் அவர் இயக்கிய முதல் படம் இதுவே. இயக்குநராகவும் 2015-ன் சிறந்த ஆவணப்பட இயக்குநர் விருதைக் கேரள அரசு இவருக்கு வழங்கியது. “நான் பிறந்து வளர்ந்த கிராமத்தையும் என் பால்ய நண்பர்களின் இசை அனுபவங்களையும் பற்றி படம் எடுக்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்லச் சாதியம் இவர்களை எத்தனை ஆழமாக ஒடுக்கியுள்ளது என்பது புரிந்தது” என்கிறார் அழகியலோடு வலுவான அரசியலை ஆவணப்படுத்தியிருக்கும் ரெஞ்சித்.
இங்குப் பறை அங்கு மறம்!
“இந்த இசைக்குழுவில் இணைந்த பிறகுதான் என்னை நானே மதிக்கத் தொடங்கினேன்” என்பது வெறும் ஒருவரின் குரலாக அல்லாமல், பல அடுக்குகளில் காட்சி வடிவில் படம் முழுவதும் விரிவது 18 ஃபீட்டின் தனித்துவம். ஆக்ரோஷமாகப் பறை அறைந்து தாங்கள் ஒடுக்கப்பட்ட வரலாற்றை உணர்ச்சி பொங்கக் கரிந்தளக்கூட்டம் வெளிப்படுத்துவதில்லை. கேரளத்துத் தலித் மக்களின் பாரம்பரிய வாய் மொழி மரபை மறம், துடி, செந்தா, ஒட்டா, வடி சிலம்பு, குழித்தலம் ஆகிய தாளக் கருவிகளைக் கொண்டு மீட்டுருவாக்கம்செய்கிறது. இதன் மூலம் இயற்கையை, காதலை, மனிதத்தைப் பாகுபாடின்றி இணக்கமாகக் கொண்டாட யத்தனிக்கிறது.
ரெஞ்சித்