மீண்டும் வருவாரா அந்த ரஜினி?

மீண்டும் வருவாரா அந்த ரஜினி?
Updated on
2 min read

ரஜினியின் மிகச் சிறந்த படம் எது? அவருடைய ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும் இந்தக் கேள்வி கடினமாகத் தோன்றலாம். ஆனால், சினிமாவைச் சினிமாவாக மட்டுமே பார்க்கும் யதார்த்தமானவர்கள் பட்டெனச் சொல்லும் முதல் படம் ‘முள்ளும் மலரும்’. தமிழில் ‘பாசமலர்’ பாணியில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், அந்தப் பாணியில் பதிவு செய்யப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்று. காளி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் கலக்கியிருப்பார் ரஜினி. கோபம், இயலாமை, வெறுப்பு, பாசம் என யதார்த்தமான நடிப்பில் பல இடங்களில் ஸ்கோர் செய்திருப்பார் ரஜினி. ‘இந்தக் காளி கெட்ட பய சார்’ எனப் பஞ்ச் வசனங்கள் இல்லாத காலகட்டத்திலேயே இயல்பாகப் பேசி நடித்திருப்பார்.

வில்லத்தனமான கதாபாத்திரங்களில் இருந்து விடுபட்டு அடுத்தகட்டக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது வெளியான ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படமும் ரஜினியின் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய படம்தான். இந்தப் படத்தில் ரஜினியின் ஸ்டைல் காட்சிகள் ஆங்காங்கே வெளிப்பட்டாலும், தன் நண்பன் செய்த தவறைப் பொறுக்க முடியாமலும், அதற்குத் தீர்வு காண முடியாமல் தவிக்கும் காட்சியிலும் கமலுக்கு இணையாக இயல்பாகத் தன்னை வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி. ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற சோகம் ததும்பிய படங்களிலும், ‘ராகவேந்திரா’ போன்ற சாந்த சொரூபி படங்களிலும் ரஜினி நடித்திருக்கிறார் என்பதெல்லாம் இந்தத் தலைமுறையினருக்கு ஆச்சரியமான விஷயமாகவே இருக்கும்.

இதுபோன்ற சில படங்கள் அவர் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் அளவுக்கு வந்திருந்தாலும், அதிரடி ஆக் ஷன் ஹீரோவாகவும், மாஸ் ஹீரோவாகவும், டான் போன்ற கதாபாத்திரங்களிலும் வந்த படங்கள் அவரது இயல்பான நடிப்புத் திறமையை மங்கச் செய்தன. ஸ்டைல் மன்னன், மாஸ் ஹீரோ என்ற இமேஜுக்கு ஏற்ப அவரது ஸ்டைல்களும், அதிரடிக் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் அவரது படங்களை ஆக்கிரமித்தன.

இதுபோன்ற ஸ்டைல்களையும் அதிரடிக் காட்சிகளையும் ரஜினியும் அவரது ரசிகர்களும் விரும்பினார்களோ இல்லையோ, பட முதலாளிகளும், இயக்குனர்களும் விரும்பியதன் விளைவு, இயல்பான நடிப்பில் இருந்து தடம் மாறிப் பயணிக்க வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் எந்த இடத்திலும் ரஜினி மாஸ் ஹீரோ என்ற இமேஜிலிருந்து வெளி வர முடியாமல் போனதற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அடுத்து வரும் கோச்சடையான் படமும் மாஸ் ஹீரோ முத்திரை மாறாமலேயே ரஜினியின் கதாபாத்திரம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருகாலத்தில் ஒரே ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆண்டுக்கு ஒரு படம் என்ற அளவுக்குச் சுருங்கியபோது, அவரது பட அறிவிப்பே தலைப்புச் செய்தியாக மாறியது. எப்போதாவது ரஜினி படம் வெளிவரும் இன்றைய நிலையில் இனி ‘முள்ளும் மலரும்’ போன்ற இயல்பான கதாபாத்திரங்களில் நடித்த ரஜினியைக் காணவே முடியாதா? அதுவும், தற்போது வயதாகி விட்ட நிலையிலும், அவரது உடல்நிலை முன்பு போல ஒத்துழைக்க மறுக்கும் சூழ்நிலையிலும் ரஜினியை இயல்பான நடிப்பில் காண ஒரு கூட்டம் இப்போதும் காத்திருக்கிறது. அதைக் காணத் தமிழ் ரசிகர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

ரஜினி நடித்த சமகாலத்தில் இந்திப் பட உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கி இப்போது ஹாலிவுட் அளவுக்கு உயர்ந்து விட்ட அவரது நண்பர் அமிதாப்பச்சன் ‘பா’, ‘சர்க்கார்’, ‘சீனிகம்’, ‘நிசப்த்’ போன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ச்சியாக நடிக்க முடிகிறது. 1980களில் அமிதாப் படங்களின் பல ரீமேக் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற ரஜினியாலும் இதுபோன்ற படங்களில் நிச்சயம் நடிக்க முடியும். அந்த நாளைக் காண அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் கூறு நல்லுலகமும் காத்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in