

மொத்த இந்தியாவையும் பாலிவுட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த புத்தாயிரத்தின் கதாநாயகிகள் பட்டியலில் வித்யா பாலனுக்கு நிச்சய இடமுண்டு. ‘டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ போன்ற படங்களின் மூலம் பெண்ணின் கதைகள் வெற்றிபெறும் என்பதை நம்பி பாக்ஸ் ஆபீஸ் நட்சத்திரமாக உயர்ந்த அவருக்கு இன்று பிறந்த நாள்.மும்பையில் வளர்ந்த பாலக்காட்டுத் தமிழ்ப் பெண்ணான 37 வயது வித்யா பாலன், வெற்றியை எட்டிப்பிடிக்கச் சந்தித்த போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
தென்னகம் இழந்த திறமை
16 வயதில் ஏக்தா கபூரின் நகைச்சுவைத் தொடரில் அறிமுகமான வித்யா பாலன், மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும்போது, ‘சக்ரம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுக்கு நாயகியாக ஒப்பந்தமானார். மோகன்லாலின் நாயகி என்பதால் அடுத்தடுத்து 12 மலையாளப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ‘சக்ரம்’ வெளிவரவேயில்லை. படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நாயகியின் ராசிதான் காரணம் என்று கூறி அத்தனை படங்களிலிருந்தும் தூக்கியெறியப்பட்டார்.
மலையாளத்தில் ஒரு படம்கூட முடிக்காத நிலையில், லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் மாதவனுக்கு நாயகியானார் வித்யா பாலன். முதல் கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு வித்யா பாலன் மும்பைக்குத் திருப்பியனுப்பப்பட்டார். அடுத்து ஒப்புக்கொண்ட ‘மனசெல்லாம்’ படத்தில் இவருக்குப் பதில் த்ரிஷா நாயகியானார்.
நான்காண்டு போராட்டத்துக்குப் பிறகு, ஆறு விளம்பரப் படங்களில் நடித்த வித்யா பாலன் வங்காளப் பட இயக்குநர் கவுதம் ஹைதரின் ‘பலோ தேகோ’ படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டார். அப்படம் இவருக்குச் சிறந்த நடிகை விருதைப் பெற்றுத் தந்தது. தென்னிந்திய சினிமா அசலான திறமையொன்றை இழந்தது.
இரண்டாயிரத்தில் நடிகையாக முயற்சித்துப் பல போராட்டங்களையடுத்து இந்தியில் வெளியான ‘பரினீதா’ வித்யாவின் ஏக்கத்தைத் தீர்த்தது. சரத் சந்திரரின் புகழ்பெற்ற கதாபாத்திரமான லலிதாவுக்கு தன் ஆன்மாவைத் தந்து புதிய தமிழ் நடிகை வித்யா பாலன் நடித்திருக்கிறார் என்று மும்பை பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளின. அடுத்து சஞ்சய் தத் நாயகனாக நடித்து ராஜ் குமார் ஹிரானி இயக்கிய புகழ்பெற்ற படமான ‘லகே ரஹோ முன்னாபாய்’, இவரை பாலிவுட்டின் முன்னணிக் கலைஞர்களின் பட்டியலுக்குள் கொண்டு சேர்த்தது.
மறுஅவதாரம் எடுத்த வித்யா
பாலிவுட்டின் பார்முலா நாயகியாகப் பாதுகாப்பான இடத்திலிருந்த வித்யா, 2009-ல் தன் வழியை மாற்றினார். ப்ரோகெரியா சிண்ட்ரோமால் அவதிப்படும் 12 வயதுப் பையனின் திருமணமாகாத அன்னையாக அமிதாப் பச்சன் நடித்த ‘பா’ படத்தில் சவாலான வேடத்தை ஏற்றார். அடுத்து விஷால் பரத்வாஜின் ‘இஸ்கியா’ திரைப்படத்தில் பாலிவுட் பார்பி பொம்மைகளாக வலம்வரும் சக நடிகைகளிடமிருந்து வேறுபட்டவர் என்ற பெயரை எடுத்தார். இதற்கிடையில் மணி ரத்னத்தின் இயக்கத்தில் உருவான ‘குரு’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார்.
தென்னிந்திய சினிமா ரசிகர்களைத் தனது கவர்ச்சியால் ஈர்த்துவைத்திருந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் துயர வாழ்வைத் தழுவிக்கொண்ட ‘டர்ட்டி பிக்சர்’, வித்யா பாலனை இந்தியா முழுவதும் பெயர் சொல்ல வைத்தது. திரைக்கு முன்பும் பின்பும் பாலியல் பண்டமாகவே ஆண்களால் உபயோகிக்கப்பட்டுக் கசக்கி எறியப்படும் ஒரு நடிகையின் தனிப்பட்ட ஆளுமையையும் மனக் கொந்தளிப்புகளையும் வித்யா பிரமாதமாக இப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். 2011-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது இவருக்குக் கிடைத்தது.
மாதவிக்குட்டியாக வித்யா
காணாமல் போகும் தன் கணவனை கொல்கத்தாவில் தேடும் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணாக சுஜாய் கோஷின் ‘கஹானி’யில் வாழ்ந்திருந்தார் வித்யா பாலன். டர்ட்டி பிக்சர் படமும் கஹானியும் பாலிவுட்டின் பெரிய வர்த்தக வெற்றிகளும்கூட.
கஹானி இயக்குநர் சுஜாய் கோஷுடன் மீண்டும் இணைந்துள்ளார் வித்யா பாலன். மீண்டும் கொல்கத்தா நகரத்தில் நடக்கும் கதையில் நடிக்கவுள்ள வித்யா பாலனுடன் அமிதாப் பச்சனும் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘டிஇ3என்’. இப்படத்தில் வித்யா பாலன் போலீஸ் அதிகாரியாக வேடமேற்றுள்ளார். ஏற்கெனவே ‘உருமி’ மலையாளப் படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றிய வித்யா பாலன், தற்போது மலையாள இலக்கியத்தின் முக்கியப் பெண் ஆளுமையான மாதவிக்குட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவிக்குட்டியாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குபவர் முன்னணி மலையாள இயக்குநரான கமல்.
ஒரு நேரத்தில் ஒரேயொரு படத்தில் நடிக்கும் வித்யா ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பக்கமே வருவதில்லை. “ ட்விட்டர் போன்றவற்றில் எதைச் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி எல்லாரும் பைத்தியமாக உள்ளனர். நடு இரவில் எழுந்து போன்களைப் பார்ப்பவர்களைக்கூட எனக்குத் தெரியும். ஒரு திரைப்படத்திற்குப் போனால், அனைவரின் முகத்திலும் டெலிபோன் திரை ஒளிர்வதைப் பார்க்க முடிகிறது. எனக்கு ஒரு நேரத்தில் ஒரு காரியத்தைத்தான் செய்ய முடியும்” என்கிறார் இந்த லேடி சூப்பர் ஸ்டார்!