

ஜாக்கி சானின் அடுத்த அதிரடி ஆரம்பமாகிவிட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி சீனாவில் வெளியாகிறது ‘தி ஃபாரினர்’. தொடர்ந்து, 13-ம் தேதி அமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஸ்டீஃபன் லெதர் என்பவர் எழுதி 1992-ம் ஆண்டு வெளியான ‘தி சைனா மேன்’ எனும் நாவலை அடிப்படையாக வைத்து, இந்தப் படத்தை இயக்கிஇருக்கிறார் மார்டின் கேம்பெல். படத்தின் டிரெய்லர் கடந்த 25-ம் தேதி வெளியிடப்பட்டது. பயங்கர அசத்தல்!
இந்தப் படத்தில் உணவகம் ஒன்றின் உரிமையாளராக வருகிறார் ஜாக்கி. ஐரிஷ் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் தன் மகளைப் பறிகொடுக்கிறார். அதைத் தொடர்ந்து ஜாக்கி சான் மேற்கொள்ளும் பழிவாங்கும் படலமே இந்தப் படத்தின் மையக் கதை என்கிறார்கள்.
ஜாக்கி சானுக்கு 63 வயது என்பதை நம்பவே முடியவில்லை. முகத்தில் வேண்டுமானால் சிறிது முதுமை தென்படலாம். ஆனால், அவர் பறந்து பறந்து போடும் சண்டைக் காட்சிகள் அவருக்கு இன்னும் வயதாகவில்லை என்பதையே காட்டுகின்றன. சுமார் 35 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாராகிவரும் இந்தப் படத்தின் மற்றுமொரு ஆக்ஷன் ஸ்டார் ஜேம்ஸ் பாண்ட் சீனியர் பியர்ஸ் பிராஸ்னன். ஜேம்ஸ் பாண்டின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ, ஜாக்கி சான் ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.