

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து மறைந்துபோன கொரிய ஓவியக் கலைஞன் ஜாங் சியுங்-இயோப். ஓவிய மேதைமைக்காகவும் தாறுமாறான நடத்தைகளுக்காகவும் அறியப்பட்டவன். கொரியாவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சிறு வயதில் பல அவமதிப்புகளோடு வளர்ந்த அந்த ஓவியனால், தான் வளர்ந்த பிறகு, தனது ஓவியங்களுக்கு சமூகம் கொடுத்த கௌரவத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது. அகௌரவம் மற்றும் அநாகரீகம் என பொதுசமூகம் கருதும் வாழ்வை நடத்தியதின் வழியாக அவன் சமூகத்தைத் தொடர்ந்து அவமதித்தவன். குடி, வரைமுறையற்ற உறவுகள், வன்முறை நடத்தைகளே அவனது அன்றாடமாக இருந்துள்ளது. அக்கலைஞனின் வாழ்க்கை தொடர்பாகக் கிடைத்த சிதறலான தகவல்களிலிருந்தும், சொற்பமாகக் கிடைத்த அவனது ஓவியப் படைப்புகளிலிருந்தும் தூண்டுதல் பெற்றுக் கற்பனையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட திரைப்படமே பெயிண்டட் பயர்.
லத்தீன் அமெரிக்க ஓவியக் கலைஞர் ப்ரைடா காலோ பற்றிய திரைப்படமான ப்ரைடாவோடு ஒப்பிடத் தகுந்த படம் இது. ஆனால் ப்ரைடாவை விட பெயிண்டட் பயர் திரைப்படம் ஆழமும், கவித்துவமும் கொண்டது.
ஒரு முரட்டுத் தாளில் பதற்றத்துடனும், அலைக்கழிப்புடனும் உருவாகும் கோடுகளை ஒரு கை வரைவதிலிருந்து படம் தொடங்குகிறது. பெரும் நெருக்கடிகளுடனும், கொந்தளிப்புடனும் உருவான கோடுகள் ஆழ்ந்த அமைதி கொண்ட ஓவியமாக உருமாறுகின்றன. இதுதான் படத்தின் முதல் காட்சி. அப்படி வரையப்படும் ஓவியங்கள்தான் கலை பற்றிய உணர்வேயற்ற பணக்காரர்களின் கைகளைச் சேர்கிறது என்ற ஆழ்ந்த விமர்சனத்துடன் படம் தொடங்குகிறது.
ஜப்பானியப் பேரரசின் தலையீட்டுக்குக் கொரிய நாடு உள்ளாகும் பின்னணியில், அங்குள்ள குடியானவர்களின் போராட்டம், பொம்மை அரசைக் கவிழ்த்து ஏற்கனவே உள்ள நிலப்பிரபுத்துவ அமைப்பைக் குலைத்துப் போடுகிறது. புதிய சோசலிஷ அமைப்பில், ஏற்கனவே அரசவையினரால் போற்றப்பட்ட கலைஞர்களின் வாழ்வு நிராதரவாகிறது. இந்தப் பின்னணியில் ஓவியனாகும் ஜாங் சியுங்-இயோப், தனது சிறந்த படைப்புகள் பாமரர்கள் கையில் செல்வதைவிடத் தானே அவற்றை அழிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். குடியிலும், பெண் நாட்டத்திலும், வன்முறைகளிலும் அதீதமாக ஈடுபடுகிறான். ஒரு கட்டத்தில் கண் பழுதுபட்டுப் போக, கோடுகளை நேர்த்தியாக வரைய முடியாது என்ற நிலை வரும்போது, யாரும் அறியாத ஒரு இடத்துக்குப் போய் பீங்கான குடுவைகளைச் சுடும் சூளைக்குள் புகுந்து சுவடே இல்லாமல் மறைந்துபோகிறான்.
கொரிய ஓவியப் பாணியிலேயே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு கலைஞனின் அலைக்கழிப்பான வாழ்வை நடிகர் சோய் மின்-சிக் அற்புதமாகச் சித்தரித்திருப்பார். ஏழை மக்களின் வாழ்க்கையோடு, அதன் சகல கொண்டாட்டங்கள், துயரங்களையும் வெளிப்படுத்தியதில் செவன் சாமுராயின் டோசிரோ மிபுனேயை நினைவுபடுத்தும் நடிகர் இவர். கொரியாவின் இயற்கை எழில்வாய்ந்த நிலக்காட்சிகளை ஒரு ஓவியனின் கண்களால் படம்பிடித்த திரைப்படம் இது. அற்புதமான பாலுறவுத் தருணங்களுக்காகவும் சினிமா ரசிகர்களின் நினைவில் பெயிண்டட் ஃபயர் என்றும் நிலைத்திருக்கும்.
தான் வாழும் சமூகத்துக்கும், கலாச்சாரத்துக்கும் மிகப் பெரிய படைப்புப் பங்களிப்புகளைச் செய்யும் கலைஞர்கள் ஏன் சொந்த வாழ்வில் நிலைகுலைந்தவர்களாக இருக்கிறார்கள்? துயரங்களால் அலைக்கழிக்கப்படுபவர்களாகவும், துயரங்களைத் தேடித் துரத்துபவர்களாகவும் அவர்கள் ஏன் வதைபடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பும் படைப்பு இது.
மனித குலத்துக்கு மிகப் பெரிய அழகைப் பரிசாகத் தரும் ஒரு கலைஞன் தனது வாழ்வை ஏன் அலங்கோலமாக்கிக்கொள்கிறான்? இதைத்தான் பெயிண்டட் பயர், கொரிய ஓவியக் கலைஞன் ஜாங் சியுங்-இயோப் வாழ்க்கை வழியாக ஆழமாக விசாரிக்கிறது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொரியாவில் இருந்த ஓவிய முறைமைகள், பாணிகள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை மிகவும் நம்பத்தகுந்த வகையில் சித்தரிக்கும் படம் இது. க்வான் டய்க் இம் இயக்கிய திரைப்படம் இது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜியாங் சங் குறிப்பிடத்தகுந்தவர். இப்படம் 2002இல் வெளியானது.