

சென்னையில் இன்று அவ்வை சண்முகம் சாலையாக இருக்கிறது அன்றைய லாயிட்ஸ் ரோடு. இந்தச் சாலையில் 90 ஆண்டுகளாக இருக்கும் எங்கள் வீட்டின் எண் 162. எண் 160இல் குடியேறி வசித்துவந்தவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் அங்கு வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. என் தந்தையார் திரு வி.பி. ராமனும், அவரும் ஒரே அரசியல் இயக்கத்தில் இருந்தவர்கள். வாடகைக்கு வீடு வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னபோது, எங்களுக்குச் சொந்தமாக இருந்த, 160ஆம் எண் விட்டில் தங்கலாமே என்று என் தந்தை கூறினார். என் தாத்தா திரு ஏ.வி. ராமன், அதற்கு ஒரு படி மேலே சென்று, வாடகைக்கு எதற்கு வீட்டையே வாங்கிக்கொள்ளலாமே என்று கூறினார்.
அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்., மிகப் பெரிய கதாநாயகன் என்ற உயரத்தை எட்டியிருக்கவில்லை. தன்னிடம் வீடும் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்று என் தாத்தாவிடம் கூறிவிட்டார். ஆனால் என் தாத்தா விடவில்லை. “இப்பொழுது சொல்கிறேன் சந்திரா கேட்டுக்கொள், எனக்கு ஒரு மகன், அவனுக்கு ஒரு வீடு போதும். நீ எனக்கு இன்னொரு மகன். நீ தங்கப்போகும் இந்த வீட்டிற்கு இதுதான் விலை. தவணை முறையிலோ, உனக்கு வசதி வரும்போதோ பணம் கொடுத்து இந்த வீட்டைச் சொந்தமாக்கிக்கொள். ஆனால் விலை இன்று நான் நிர்ணயிப்பது. உடனே வந்துவிடு” என்று சொல்லிவிட்டார்.
தாத்தா இப்படிச் சொன்னதும், நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் சக்கரபாணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் எங்கள் வீட்டில் குடியேறினர். எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் நிறுவனம் 160ஆம் எண் இல்லத்தில்தான் தொடங்கப்பட்டது. நாடோடி மன்னன் எடுக்கப்பட்டு ஓஹோ என்று ஓடியது. எம்.ஜி.ஆரும் அவரது சகோதரரும் சேர்ந்து வீட்டை வாங்கிக்கொண்டனர். அந்த வீட்டுக்கு ‘அன்னை இல்லம்’ என்று பெயர் பொறித்தார்.