திரையிசை: கோச்சடையான்

திரையிசை: கோச்சடையான்
Updated on
1 min read

இப்போ வரும், அப்போ வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்க வைத்த திரைப்படங்களில் ஒன்றாகக் கோச்சடையானும் இருந்துவிட்டது. இதோ ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கோச்சடையானின் வருகையை அறிவிக்கும் ஆடியோ வெளியாகிவிட்டது.

எஸ்.பி.பி. யின் குரலில் ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட ‘எங்கே போகுதோ வானம்’ முதல் பாடல். ‘மணப்பெண்ணின் சத்தியம்’ என்ற பாடல் இரண்டு முறை வருகிறது. பெண் குரலில் பாடியிருப்பவர் லதா ரஜினிகாந்த். கர்னாடக இசைப்பாணியில் அமைந்த அதே பாடல் ஹரிசரணின் ஆண் குரலில் ஒலிக்கும்போது சில நுணுக்கங்களை அனுபவித்து ரசிக்க முடிகிறது.

‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ பாடலில் ரஜினிகாந்தே இடையிடையே பேசியிருப்பது பாடலுக்குப் புது முகம் தந்திருக்கிறது.

‘கர்ம வீரன்’ என்ற மேற்கத்தியப் பாணியில் அமைந்த ஹைபிட்ச் பாடலை ஏ.ஆர். ரைஹானாவும் ஏ.ஆர். ரஹ்மானும் பாடியுள்ளனர். அதிரடியும் வேகமும் நிறைந்த இந்தப் பாடல், ஆடியோவில் தனித்து நிற்கிறது.

‘எங்கள் கோச்சடையான்’ தீமாட்டிக் பாடல். மேலும், ராணாவின் கனவு என்ற பெயரில் லண்டன் செஷன்ஸ் ஆர்கெஸ்ட்ரா இசையமைத்துள்ள கருவி இசை படத்தின் அடையாளமாக மாறும்.

எஸ்.பி.பி., சாதனா சர்கம் பாடியுள்ள ‘மெதுவாகத்தான்’ கொஞ்சம் மெதுவான பாடல்தான். பாடலை எழுதியவர் அமரர் வாலி. மற்றப் பாடல்கள் அனைத்தும் வைரமுத்து. சின்மயி, நிவாஸ் பாடியுள்ள ‘இதயம்’ பாடலின் பழைமை பொதிந்த வரிகள் கவனம் பெறுகின்றன.

ஆனால், பாடல்களின் பின்னணி இசை வசீகரிக்கும் அளவுக்குப் பாடல்களின் மெட்டுகள் மனதில் ரீங்கரிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in