திரை விமர்சனம்: பைரவா

திரை விமர்சனம்: பைரவா

Published on

வலிமை வாய்ந்த கல்விக் கொள்ளையனின் அட்டகாசத்தை தனி ஒருவன் முறியடிக்கும் கதைதான் ‘பைரவா’.

திருநெல்வேலியில் வசிக்கும் கீர்த்தி சுரேஷ், அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பை நூலிழையில் தவறவிடுகிறார். லட்சக்கணக்கில் பணம் கட்டித் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேருகிறார். படிப்படியாக ‘உயர்ந்த’ உள்ளூர் தாதாவின் கல்லூரி அது. போதிய வசதிகள் இன்றி நடத் தப்படும் அந்தக் கல்லூரியை எதிர்த் துப் போராடிய மாணவி ஒருவர் குரூரமாகப் பழிவாங்கப்படுகிறார். தன் தோழிக்காக சட்டரீதியான போராட்டத்தை மேற்கொள்ளும் கீர்த்திக்கு அடுக்கடுக்காக சோதனைகள்.

சென்னையில் வாராக் கடன் களை வசூலிக்கும் வங்கிப் பணி யில் இருக்கும் விஜய், திருமணம் ஒன்றில் கீர்த்தியைச் சந்தித்து காதல்வயப்படுகிறார். அவரது நெருக்கடியை அறிந்து களம் இறங்குகிறார். அவர் எப்படி வெல் கிறார் என்பதே மீதிக்கதை.

பேருந்து நிலையத்தில் கீர்த்தி சுரேஷுக்குப் பிரச்சினை ஏற்படும் இடத்தில்தான் கதை தொடங்கு கிறது. அதுவரை கிட்டத்தட்ட முக் கால் மணிநேரத்தை சிறுபிள்ளைத் தனமான காட்சிகளே ஆக்கிரமித் துக்கொள்கின்றன. அதிலும் அந்த கிரிக்கெட் காட்சி. எப்படித்தான் இப்படி ஒரு காட்சியை யோசித் தார்கள் என்பது புரியவில்லை. அதன் பிறகும் படம் நிமிரவில்லை. வில்லனின் லீலைகளை முடிந்த அளவுக்கு பூதாகரப்படுத்துவது, பிறகு நாயகனை அவதார மூர்த்தியாகக் களம் இறக்குவது என்னும் மசாலா மந்திரத்தைப் பலமாக உச்சரிக்கிறார் இயக்குநர் பரதன். மசாலா படம் என்றாலும் அதிலும் கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா?

சாதாரண வங்கி ஊழியரான விஜய் ஒரே இரவில் பெரிய படை பலத்துடன் அதிரடியில் இறங்கு கிறார். அவருக்கு அத்தனை பேர் எங்கிருந்து கிடைத்தார்கள்? லட் சக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்ட அவருக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? சாட்சியங்களை வில்லன் அழித்தாலும் அவரது வீட்டில் நடந்த ‘ரெய்டின்’ வீடியோ பதிவு விஜயிடம் இருந்திருக்க வேண்டுமே? நீதிமன்றத்தில் எந்த சாட்சியமும் இல்லாமல் உணர்ச்சி கரமான வாதங்களை மட்டுமே விஜய் முன்வைக்கிறார். ஆனால் அதைக் கேட்டு நீதிபதி அவ காசம் தருகிறார். விஜய் ஆவேச மாகப் பேசும்போது பணிவான மாணவியைப் போல நீதிபதி தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரதமர் வரு கையை ஒட்டி நடக்கும் நாடகம், என்எஸ்ஜி படையினருடன் சேர்ந்து விஜய் சுடுவது என்று திரைக்கதையின் போங்காட்டம் கட்டுக்கடங்காமல் நீள்கிறது.

டேனியல் பாலாஜியை திசை திருப்புவது போன்ற சில திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஆனால், சிரிப்பு வரவழைக்கும் வாயு, பாலாஜியின் மனைவி பாசம் ஆகியவை கதையில் முக்கியப் பங்கு வகிக்கப்போகின்றன என்பதையெல்லாம் எளிதில் ஊகித்து விட முடிகிறது. சமூக வலை தளங்களின் மூலம் நடக்கும் ‘புரட்சி’, பிரதமரின் முடிவை மாற்றுவதெல்லாம் பெரிய தமாஷ்! விஜய் ஏற்பாடு செய்யும் பலவீனமான நாடகத்தைக் கண்டு ஏமாந்து கறுப்புப் பூனைப் படையினர் வருவதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பதென்றே தெரியவில்லை.

விஜய் முன்பைவிட இளமையாகத் தெரிகிறார். அவரது உடல் மொழி வழக்கம்போலவே துடிப்பாக இருக்கிறது. காதல் காட்சிகளில் அசட்டுத்தனத்தையும், சீரியஸான காட்சிகளில் தீவிரத்தையும் நன்றாகவே வெளிப்படுத்துகிறார். ஆனால், எதுவும் புதிதில்லை. வித்தியாசம் காட்ட வேண்டும் என்று நீட்டி முழக்கிப் பேசியிருப்பது ரசிக்கும்படி இல்லை. பஞ்ச் வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது. எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக விஜயை நிறுத்தும் காட்சிகள் இந்தப் படத்திலும் உள்ளன.

வெறும் அழகுப் பதுமையாக அல்லாமல், கதையின் முக்கிய அம்சமாக கீர்த்தி சுரேஷின் பாத்திரத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர். அவரும் தன் கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்.

சதீஷின் நகைச்சுவை ஓரளவு எடுபடுகிறது. அக்கா பாத்திரத்துக்கு குறையில்லாமல் நடிக்கிறார் சிஜா ரோஸ். ஓரிரு காட்சிகளில் வந்தாலும் ஹரீஷ் உத்தமன் கவனம் ஈர்க்கிறார். டேனியல் பாலாஜிக்கு சற்று வலுவான வேடம்; நிறைவாகச் செய்திருக்கிறார். வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தைச் சரி யாகக் கையாளுகிறார் ஜெகபதி பாபு. சரத் லோகிதஸ்வா, மன், ‘ஆடுகளம்’ நரேன், சண்முகராஜா, மாரிமுத்து ஆகியோர் வந்து போகிறார்கள். மைம் கோபியை அநியாயத்துக்கு வீணடித்திருக் கிறார்கள்.

சுகுமாரின் நேர்த்தியான ஒளிப் பதிவு, படத்துக்குப் பெரிய பலம். சந்தோஷ் நாராயணன் இசை, படத்துடன் ஒட்டவில்லை. ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’ பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது.

தனியார் கல்லூரிகளின் முறை கேடுகளைக் கையில் எடுக்கும் படம், அதை ‘பைரவ’ புராணத்தில் தொலைத்துவிடுகிறது!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in