திரையிசை : கோலிசோடா

திரையிசை : கோலிசோடா
Updated on
1 min read

ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் இயக்கும் இரண்டாவது படம் கோலிசோடா.

எஸ்.என். அருணகிரி என்ற புது இசையமைப்பாளர் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கதை கோயம்பேடு மார்க்கெட்டில் நடக்கிறது என்பதால், அந்த பின்னணிக்குப் பொருந்தும் வகையில் சென்னையின் அக்மார்க் இசையான கானா இசை இப்படத்துக்கு நன்கு பொருந்திப் போகிறது. பெரும்பாலான பாடல்கள் குறும்பாடல்களாகவே இருக்கின்றன.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகராகிவிட்ட கானா பாலா இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். "ஆறு அடி வீடு" சோகப் பாடல் வகை. அவருடைய மற்றொரு பாடலான "ஆல் யுவர் பியூட்டி" பாடலில் உற்சாகம் கரைபுரள்கிறது. ஆனால், இது பி.பி. நிவாஸின் புகழ்பெற்ற பாடலான "பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா"வின் ரீமிக்ஸ் போலிருக்கிறது. ‘சிலுசிலுன்னு’ பாடலும் கானா பாடல் வகையறாதான். புதுப் பாடகர் சத்யாவே எழுதிப் பாடியிருக்கிறார்.

யுவன்சங்கர் ராஜாவின் குரலை சற்றே ஞாபகப்படுத்தும் ஹரீஷின் குரலில் வந்திருக்கிறது "காதல் பண்ணேன்" பாடல். இது ஹீரோ காதலை விவரிக்கும் பாடல். "உய்யாலே" பாடல் ஹீரோயினுக்கான பாடல், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை ஞாபகப்படுத்துகிறது.

இந்த ஆடியோவின் சிறந்த பாடல் யாசின் பாடியுள்ள "ஜனனம் ஜனனம்". கர்னாடக இசை தாக்கத்துடன் அமைக்கப்பட்ட இந்தப் பாடல் இசையமைப்பாளரின் திறமைக்கு நல்ல அடையாளம். இதை ஆடியோ முழுமைக்கும் விரிவுபடுத்தியிருந்தால், தனி அடையாளம் கிடைத்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in