

மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் சுந்தரத்திடம் ஒரு குழந்தையை அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். அந்தக் குழந்தைக்கு எதாவது வாய்ப்புகள் தரும்படி கேட்கின்றனர். பாடச் சொல்லிக் கேட்கிறார் சுந்தரம். அக்குழந்தை உச்சஸ்தாயில் பாடுவது மேற்கத்திய கிளாசிக்கல் வாய்ப்பாட்டு வடிவமான ஓபராவைக் (Opera)கேட்பதுபோல் இருக்கிறது.இவ்வளவு சிறப்புமிக்க அந்தப் பெண் குழந்தைக்கு அப்போது வயது 9தான். சுந்தரம் அக்குழந்தையின் பாட்டை வெகுவாகப் பாராட்டுகிறார். அப்பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே மாடர்ன் தியேட்டர்ஸில் 5ஆண்டுகளுக்குப் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு எடுக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களிலெல்லாம் அந்தக் குழந்தையின் பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை. அவர்தான் யூ.ஆர்.ஜீவரத்தினம்.
யூ.ஆர்.ஜீவரத்தினம் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஈரோடு அருகில் உள்ள ஊஞ்சலூரில் பிறந்தார். இவருடைய தந்தை சுப்ரமண்யம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். தாயின் பெயர் குஞ்சம்மாள். சிறுவயதிலேயே ஜீவரத்தினம் நாடகம் மற்றும் வாய்ப்பாட்டில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறார். இவருடைய ஆற்றலை மேலும் வளர்த்தெடுக்கச் சரியான வாய்ப்பு மெட்றாஸில் கிடைக்கும் என்பதால் 9ஆம் வயதிலே ஜீவரத்தினம் வாய்ப்பு தேடி மெட்றாஸ் வந்தார். நடிகை அங்கமுத்துவின் சிபாரிசுவின் பேரில் கிருஷ்ணய்யா நாடகக் கம்பெனியில் 6மாதகாலம் இருந்தார். அதன் பிறகு அவருடைய திரைப்பட ஆர்வத்தின் காரணமாக சேலம் வந்து மாடர்ன் தியேட்டர் சுந்தரத்தைச் சந்தித்துள்ளார்.
1937ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘சதி அகல்யா’மூலம்தான் ஜீவரத்தினத்தின் திரைப்பட வாழ்க்கை தொடங்குகிறது. இந்தப் படத்தில் அவர் தன் முதல் பாடலைப் பாடினார். 1941இல் எடுக்கப்பட்ட ‘பக்த கெளரி’ படத்தில் தலைப்பு வேடம் ஏற்று நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய ‘தெருவில் வாரான்டி, வேலன்...’ என்னும் பாடல் மெட்றாஸ் மாகாணத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் கொண்டாடப்பட்டது. ஒருபக்கம் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்தாலும் அவர் சி.எஸ்.ஜெயராமன், குன்னக்குடி வெங்கட்ராம அய்யர் போன்றோர்களிடம் சாஸ்திரிய சங்கீதம் கற்பதைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் ஜூபீட்டர் ஃபிம்ஸின் படமான கண்ணகியில் கெளதி அடிகளார் வேடம் ஏற்று நடித்தார். 1942இல் வெளிவந்த இப்படத்தில் ஜீவரத்தினத்தின் நடிப்பு பாராட்டப் பெற்றது. இதில் நாயகன் - நாயகி வேடம் ஏற்று நடித்த பி.யூ.சின்னப்பா - கண்ணாம்பா இருவர்களையும் ஒப்பிடும்போது ஜீவரத்தினத்திற்கு மிகச் சிறிய வயது. உருவத்திலும் அவர் மிகச் சிறியவராகவே தெரிந்தார். பி.யூ.சின்னப்பாவும் - கண்ணாம்பாவும் இவரைக் குழந்தை என்றே அழைத்துள்ளனர். ஆனால் இப்படத்தில் ஜீவரத்தினம் உச்சஸ்தாயில் பாடும்போது இருவரும், இவரையா நாம் குழந்தை என்றோம்? என வியந்தனர். 1944இல் வெளிவந்த பூம்பாவையில் ஜீவரத்தினத்தின் நடிப்பையும் பாட்டையும் கல்கி தன் விமர்சனத்தில் புகழ்ந்துள்ளார். இதைத் தொடந்து ஜெகதாளப்பிரதாபனில் பி.யூ.சின்னப்பாவுக்கு ஜோடியாகிறார்.
ஜீவரத்தினம் ஜூபீட்டர் ஃபிம்ஸின் மேலாளர் டி.எஸ்.வெங்கடசாமியை மணமுடித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் போன்றவர்களுக்கு முதல் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர்கள் வெங்கடசாமி-ஜீவரத்தினம் தம்பதியினரே. இவர்கள் மெர்குரி ஃபிலிம்ஸ் என்னும் பெயரில் பட நிறுவனத்தைத் தொடங்கிச் சில படங்களைத் தயாரித்தனர். பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்க மேடை நாடகங்களில் நடித்தார். கச்சேரிகளில் பாடினார்.
நடிப்பதை நிறுத்திக்கொண்டாலும் ஜீவரத்தினம் தன் குரல்களால் வெகுகாலம் தமிழ் சினிமாவில் நினைவுகூரத்தக்கவராக இருந்தார். அவர் 2000ஆம் ஆண்டு ஜூலை 26இல் மரணமடைந்தார். ‘தமிழுக்கு உயிர் கொடுப்போம்! தயங்காதே தோழா!’ என்னும் பாடல் வரிகள் மூலம் தமிழகம் தாண்டி இலங்கையில் உள்ள தமிழர்களின் நினைவிலும் நீங்காத இடம் பிடித்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம்.