

தெலுங்கில் வெளியான ‘யமுடிகி மொகுடு’ படத்தை நானும், பஞ்சு அருணாசலம் அவர்களும் பார்த்தோம். கதையில், எமலோகத்துக்கு வர வேண்டிய நபர் வராமல் ஆள் மாறி வந்துவிடுவார். கடைசியில் அவர் இல்லையென்று தெரிந்ததும் மீண்டும் பூலோகத்துக்குத் திரும்பிவிடுவார். ஆவி ஓர் உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு மாறும் காட்சிகள் இருந்தன. இதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது.
தயாரிப்பாளர் பூரண சந்திர ராவ் அவர்கள், ‘‘எந்த சந்தேகமும் வேண்டாம். தெலுங்கில் மாபெரும் வெற்றியோடு வெள்ளி விழா கொண்டாடிய படம். தமிழில் ரஜினிகாந்தை வைத்து எடுத்தால் படம் பிச்சுக்கிட்டு ஓடும்!’’ என்றார். உடனே ரஜினியை சந்தித்தோம். அவர் , ‘‘நான் இப்போ நடிக்கிற படங்கள்ல இருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமா இருக்கு. எல்லோரும் ஏத்துக்குற மாதிரி கதையில லாஜிக்கா சில காட்சிகளைச் சேருங்க. ஸ்கிரிப்ட் ரெடியானதும் ஷூட்டிங் வேலைகளை ஆரம்பிப்போம்!’’ என்றார். அந்தப் படம்தான் ‘அதிசய பிறவி’.
பெரிய பேனர் லட்சுமி புரடொக்ஷன்ஸ். சிறந்த தயாரிப்பாளர் பூரண சந்திர ராவ். படத்தை பிரம்மாண்டமாக எடுத்தாங்க. ஆர்ட் டைரக்டர் சலம் அவர்களுக்கு வாய்ப்பும், வசதியும் அமைந்தால் விட்டுவிடுவாரா? எமலோக செட்டை அசத்தலாக வடிவமைத்தார். படத்தில் வினுசக்ரவர்த்தி அவர்கள்தான் எமன். கம்பீரமான தோற்றம். நல்ல கருப்பு நிறம். மேக்கப் போட்டு உடை அலங்காரத்தோடு வந்தபோது எமதர்ம ராஜாவாகவே ஆகிவிட்டார். அப்படிப்பட்ட எமனுக்கு, எல்லாவற்றையும் சரியாக எடுத்துச் சொல்லும் ஒரு உதவியாளர் சித்திரகுப்தன். அதற்கு சோ அவர்கள்தான் சரியாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தோம். இருவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது.
சோ அவர்கள், பூலோகத்தில் இருந்து வருவர்களை எமதர்மராஜாவிடம் என்ன தவறு செய்தார் என்ற விவரத்தை சொல்வார். செய்த குற்றங்களுக்கு ஏற்றாற்போல அவருக்கு எமன் தண்டனை கொடுப்பார். சோ அவர்கள் பூலோகத்தில் இருந்து வருபவர்களைப் பற்றி எடுத்துச்சொல்லும் விதம் படத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிலும், அரசியல்வாதிகள் வரும்போது, அவர்கள் செய்த குற்றங்களை நக்கலாகவும், கேலியாகவும் எடுத்துச் சொல்லி எமனிடம் கூடுதல் தண்டனை வாங்கிக் கொடுப்பார். அந்த வசனங்களில் சென்சாரால் கத்திரி போடப்பட்டது. அப்படி வெட்டப்பட்ட பிறகும் வசனங்கள் மக்களிடம் பெரிய அளவுக்கு பாராட்டை பெற்றன. சென்சாரில் வெட்டப்படாமல் முழுதும் வந்திருந்தால் அரசியல்வாதிகளின் கதி அதோகதிதான்!
படத்தில் ஒருவர் உண்மையான ரஜினி. இன்னொருவர் ஆவி ரஜினி. இரண்டு பேருக்கும் இரண்டு நாயகிகள். அவரில் ஒருவர் ஷீபா ஆகாஷ்தீக். மும்பை இறக்குமதி. அவருக்கு சுத்தமான தமிழ் தெரியாது. தமிழும், ஆங்கிலமும் கலந்து பேசினால் ‘தமிங்கிலிஷ்’ என்று சொல்கிறோமே அந்த மாதிரி தமிழையும், ஹிந்தியையும் கலந்து ‘தமிழிந்தி’யில் பேசினார். அவர் பேசுவது யாருக்கும் புரியாது. அதை சமாளித்து ஷூட்டிங் முடித்து நல்ல தமிழ் பேசும் நடிகையை வைத்து அவருக்கு டப்பிங் பேச வைத்தோம். அதனால் மும்பை நாயகி ஷீபா ஆகாஷ்தீக் காப்பாற்றப்பட்டார். பிற மொழி நடிகைகளைக் காப்பாற்றுவதே சிறந்த டப்பிங் கலைஞர்கள்தான். திறமையான டப்பிங் கலைஞர்கள் முகபாவத்தோடு டப்பிங்கில் பேசுவதால் பிற மொழி நடிகைகள் பெயர் வாங்குகிறார்கள். பாவம்.. டப்பிங் ஆர்ட்டிஸ்டின் முகம் தெரியாது. குரலை மட்டும்தான் கேட்கிறோம். அவர்களின் திறமைகளைப் பாராட்டுவோம்.
படத்தில் இரண்டாவது நாயகி கனகா. தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகையாக பயணித்த தேவிகாவின் மகள். அவரைப் போலவே கனகாவும் திறமையாக நடித்தார். ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்தும் தொடர்ந்து அவருக்கு எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டால் வளர்ச்சியிலும் பாதிப்பு இருக்கத்தானே செய்யும். கனகா மன அமைதியோடு வாழ, வாழ்த்துவோம்!
இந்தப் படத்துக்கு தமிழகத்தின் சிறந்த கவிஞர்கள் வாலி, புலமைபித்தன், பிறைசூடன், கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தார்கள். அத்தனை பாடல்களுமே ஹிட். நல்ல இசை என்றால் யாராக இருக்க முடியும்? நம் இசைஞானி இளையராஜாதான். ‘தானந்தன கும்மிக்கொட்டி.. கும்மிக்கொட்டி’, ‘உன்ன பார்த்த நேரம் ஒரு பாட்டெழுதி பாடத் தோணும்’ ஆகிய பாடல்களில் ரஜினி, கனகாவின் நடிப்பும், நடனமும் சிறப்பாக அமைந்தது. அதேபோல மும்பை நாயகி ஷீபா ஆகாஷ்தீக்கோடு, ரஜினிகாந்த் இணைந்து டூயட் பாடும் ‘சிங்காரி பியாரி’ பாடலும் கவனம் பெற்றது. ‘அன்னக்கிளியே சொர்ணக்கிளியே சந்தேகம் உனக்கு ஏனடி’ பாடலில் ரஜினிகாந்த் ஒரு நாயகிக்கு தெரியாமல் இன்னொரு நாயகியோடு மாறி மாறி ஆடும் பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனதோடு, மக்கள் வெகுவாக ரசித்தனர். இவ்வளவு நடனங்களுக்கும் எங்கள் குழுவின் சமஸ்தான நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாதான்.
இவ்வளவு அம்சங்கள் இருந்தும் தெலுங்கில் பெற்ற வெற்றிபோல் தமிழில் வெற்றி பெறவில்லை. ‘ஆவி உடம்புல போகுதாம். வருதாம். காதுல பூ சுத்துறாங்கப்பா!’ என்று படம் பார்த்தவர்கள் கமாண்ட் அடித்தார்கள். பக்கத்து பக்கத்து மாநிலம், ரசனையில்தான் எவ்வளவு வித்தியாசம்.
இந்த காலகட்டத்தில்தான் தொலைக் காட்சிகளில் தொடர்கள் வரத் தொடங்கின. சரவணன் சார் அவர்களிடம் போய், ‘நாமும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கலாம்!’ என்றேன். அவரும், ‘ஓ தாரளமா எடுப்போமே!’ என்று சம்மதம் சொன்னார்.
சின்னத்திரை தொடருக்காக கதை தேட ஆரம்பித்தோம். ஒருமுறை நான் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நாடக எழுத்தாளர் வெங்கட் அவர்களை சந்தித்தேன். அவர், ‘முன்ன மாதிரி இப்போ வேலை இல்லை சார். ஏதாவது வாய்ப்புகள் வந்தால் சொல்லுங்க!’ என்று சொன்னார். அவர் ஒரு சிறந்த நாடக ஆசிரியர். பல நாடகங்களுக்கு விருது பெற்றவர். நான் அவருடைய பல நாடகங்களை பார்த்திருக்கிறேன். ‘வாய்ப்பு வரும்போது சொல்லுகிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். அது நினைவுக்கு வந்தது. அவரை அழைத்து விவரம் சொல்லி சரவணன் சாரிடம் அழைத்துச் சென்றேன்.
மூன்று, நான்கு கதைகள் சொன்னார். அந்த கதைகள் சரவணன் சாருக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த நேரத்தில், அமிர்தம் கோபால் தயாரித்த வெங்கட் கதை, வசனம் எழுதிய ‘காசேதான் கணவனடா’ என்ற நாடகத்தை நான் பார்த்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த கதை. ‘அதை சரவணன் சாருக்கு சொல்லுங்கள்’ என்று சொன்னேன். வெங்கட் சொன்னார். அந்தக் கதை சரவணன் சாருக்கு ரொம்ப பிடித்துபோய் விட்டது. ‘அந்த நாடகத்தை சின்னத்திரைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொடுங்கள்!’ என்று கேட்டுக்கொண்டார். அவரும் எழுதத் தொடங்கினார். எப்போதோ பார்த்த வெங்கட் நாடகம் என் நினைவுக்கு வந்தது வெங்கட்டின் எழுத்து திறமைதான். சின்னத்திரை, சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் நடத்தும் நாடகங்களும், எழுதும் நாவல்களும் எங்கள் மனதை தொட்டால் நாங்களே உங்களை அழைப்போம் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.
வெங்கட் அவர்கள் நாடகத்தை மிக அழகாக சின்னத்திரைக்கு ஏற்றமாதிரி காட்சிகளை அமைத்து சிறப்பாக வசனம் எழுதியிருந்தார். நடிகர், நடிகைகளை தேர்வு செய்து படப்பிடிப்பை தொடங்கினோம். அந்தத் தொடர் என்ன?
இன்னும் படம் பார்போம்.