Published : 20 Jan 2016 10:32 AM
Last Updated : 20 Jan 2016 10:32 AM

சினிமா எடுத்துப் பார் 42: ஆடு புலி ஆட்டம்

எனது இயக்கத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த படம் ‘ஆடு புலி ஆட்டம்’. கமல் ரஜினி சேர்ந்து நடித்த படங்களில் ஒன்றை நான் இயக்கியது எனது குழுவுக்குக் கிடைத்த பெருமை.

இப்படத்தைத் தயாரித்தவர் மலையாளக் குணச்சித்திர நடிகர் சத்யனின் ஒப்பனையாளர் சாந்தி நாராயணன். இவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்ல; சிறந்த சினிமா தயாரிப்பாளரும் ஆவார். இப்படத்தில் கதாநாயகன் கமல். வில்லன் ரஜினி. ‘இளமை கலந்த’ இரண்டு திறமைசாலிகள் மோதிக்கொண்டனர்.

அந்தக் காலத்தில் பி.யூ.சின்னப்பா- தியாகராஜ பாகவதர். அதன் பிறகு சிவாஜி - எம்.ஜி.ஆர். அவர்கள் வழியில் கமல் - ரஜினி. இவர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ, இவர்களின் ரசிகர்களிடம் போட்டி, மோதல் எல்லாம் உண்டு. அதிலும் குறிப்பாக சிவாஜி - எம்.ஜி.ஆர் ரசிகர்களின் மோதல் போர்க்களமாகிவிடும். சிவாஜி எம்.ஜி.ஆர் சேர்ந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ ஓடிய தியேட்டரில் ஒரே கூச்சலும், விசிலும் காதை செவிடாக்கியது. அந்த இரண்டு மகா கலைஞர்களின் ரசிகர்களும் இப்போதும் அவர்களைத் தெய்வமாகவே நினைக்கிறார்கள்.

கே.பாலசந்தர் பட்டறையில் உருவானவர்கள் கமலும் ரஜினியும். அதனாலேயே இருவரிடையே நல்ல நட்பு தொடர்கிறது. ஆடுபுலி ஆட்டம்’ படத்தின் திரைக்கதை - வசனத்தை மகேந்திரன் எழுதியிருந்தார். என்னோடு அவர் பல படங்களில் பணியாற்றியுள்ளார். நல்ல படைப்பாளியான அவருடைய ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

இயக்குநர் சங்கம் நடத்திய ‘டி - 40’ விழா மேடையில் ரஜினியை கே.பாலசந்தர் சார் பேட்டியெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கே.பாலசந்தர் சார் ரஜினியிடம் ‘‘நீ நடித்ததில் உனக்குப் பிடித்த படம் எது?’’ என்று கேட்டார். ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்று எல்லோருமே ஆவலோடு எதிர்பார்த் தார்கள். ரஜினி, ‘‘முள்ளும் மலரும்’’ என்றார். ரஜினியின் திறந்த மனதுக்குப் பெரிய கைதட்டல். இப்படி ரஜினியால் விரும்பப்படுகிற டைரக்டர் மகேந்திரனின் திரைக்கதை வசனம் ‘ஆடு புலி ஆட்டம்’ படத்துக்கு பலம் சேர்த்தது. படத்துக்கு இசையமைத்தவர் விஜய பாஸ்கர்.

அப்போதெல்லாம் வெளியூர்களில் படப்பிடிப்பு நடத்த பட்ஜெட் ஒத்து வராது. எனவே, விஜயா கார்டன், வி.ஜி.பி தங்கக் கடற்கரையில்தான் பாடல்களைப் படமாக்குவோம். ‘ஆடு புலி ஆட்டம்’ படத்தில் ‘உறவே புதுமை/நினைவே இளமை’ என்ற பாடலில் கமல் சைக் கிளில் சங்கீதாவை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர், திருநீர்மலை போன்ற இடங்களில் சுற்றி வருவார். அப்போ தெல்லாம் அங்கு பசுமையான வயல்கள் இருந்தன. அந்தச் சூழலில் பாடலும் குளுமையாக அமைந்தது. அப்படத்தில் கமல் முஸ்லிம் தோற்றத்தில் பாடும் ‘வானுக்கு தந்தை எவனோ/ மண்ணுக்கு மூலம் எவனோ’ என்ற பிரபலமான பாடல் மக்கள் மத்தியில் மத ஒற்றுமைக்கான விழிப்புணர்வை உண்டாக்கியது. கதையும் ஆக்‌ஷனும் கலந்த அப்படம் வெற்றிப்படமானது. ‘‘இன்றைக்கும் ‘ஆடு புலி ஆட்டம்’வசூல் எனக்கு சோறு போடுகிறது’’ என்று நன்றியோடு சொல்வார் தயாரிப்பாளர் சாந்தி நாராயணன்.

இதே தயாரிப்பாளர் தயாரித்த இன்னொரு படம் கணவன்- மனைவி அந்தரங்கம் பற்றியது. அதில் கமல் நாயகன். அந்தப் படம் ‘மோகம் முப்பது வருஷம்’. ‘ஆனந்த விகடன்’ மணியன் எழுதிய நாவல் அது. இந்தப் படத்துக் கும் மகேந்திரன் சார்தான் திரைக்கதை - வசனம் எழுதினார். இசை விஜயபாஸ்கர். கணவன் மனைவியின் அந்தரங்கம் என்பது அசிங்கமான விஷயமில்லை; அது பேரின்பம். மோகம் முப்பது நாள் இல்லை… முப்பது வருஷம் என்பதை முன்வைத்து இக்கதையைப் படமாக்கினோம்.

இதில் கமலுக்கு ஜோடி சுமித்ரா. கமல் வெளிநாட்டில் படித்த மாடர்ன் பையன். சொந்தம் விட்டுவிடக்கூடாது என பட்டிக்காட்டில் வளர்ந்த உறவுப் பெண் சுமித்ராவை கமலுக்கு திருமணம் செய்துவைப்பார்கள். மற்றொரு நாயகன் விஜயகுமார். இவர் ஓர் ஓவியர். பெண்களை ஓவியமாக வரைவதில் மிகுந்த ஆர்வம்கொண்ட விஜயகுமார், அந்த நேசத்தை ஒருநாளும் அவரது மனைவி படாபட் ஜெயலட்சுமியிடம் காட்ட மாட்டார். இப்படத்தில் படாபட் ஜெயலட்சுமி விரகதாபம் கொண்ட பெண்ணாக நடித்தார்.

கமல், தன் மனைவி சுமித்ராவுக்கு ஆசை ஆசையாக மல்லிகைப் பூ வாங்கி வந்து எழுப்புவார். சுமித்ரா, ‘‘அந்தப் பூவை அதோ அந்த சாமி படத்துல போடுங்க. எனக்கு தூக்கம் வருது. என்னை எங்க பாட்டி 8 மணிக்கெல்லாம் தூங்க வெச்சிப் பழக்கிட்டாங்க’’ என்று கூறுவார். அப்படி ஒரு வெகுளியாக சுமித்ரா நடித்தார். படப்பிடிப்பில் ஏதா வது நகைச்சுவையாக பேசினால்கூட தாமதமாகப் புரிந்துகொண்டு, 5 நிமி ஷத்துக்குப் பிறகுதான் சிரிப்பார். அத னாலயே சுமித்ராவுக்கு ‘டியூப்லைட்’ என்று கிண்டலாகப் பெயர் வைத்திருந்தோம்.

இப்படத்தில் ஸ்ரீபிரியாவும் உண்டு. இவருக்கு கமலை ஒருதலையாகக் காதல் செய்யும் கதாபாத்திரம். ‘‘உனக்குக் கல்யாணமாச்சு. நிச்சயம் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டே. உன்கிட்டே ஒரே ஒரு வேண்டு கோள். அது தவறான வேண்டுகோள் தான். எனக்கு ஒரு குழந்தையை மட்டும் கொடு. அந்த ஞாபகத்திலேயே வாழ்ந்துவிடுகிறேன்’’ என்பார். உடனே கமல் ஷோகேசில் இருந்து ஒரு குழந்தை பொம்மையை எடுத்துவந்து அவர் கையில் கொடுப்பார். ஸ்ரீபிரியாவின் கேள்விக்கு கமலுடைய ரியாக்‌ஷன் அவரது கண்ணியத்தைக் காட்டும்.

இந்த மாதிரியான சூழலில் கமலும் படாபட் ஜெயலட்சுமியும் தனியே சந்திக்கும் வாய்ப்பு நிகழும். இருவரும் தப்பு பண்ண முயற்சிப்பது போல் காட்சிகளை பில்டப் செய்து, கடைசியில் அதை தவறு என்று உணர்த்தி, கணவன்-மனைவி உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருப்போம். படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் - சுகுமாரி இருவரும் கணவன் - மனைவி எப்படி இருக்க வேண்டும்? என்ன பேச வேண்டும்? தாம்பத்ய வாழ்க்கையை எப்படி இனிமையாக நகர்த்த வேண்டும் என்பதை கமல் - சுமித்ரா, விஜயகுமார் படாபட் ஜெயலட்சுமி ஜோடிகளுக்கு முன்பாக வாழ்ந்து காட்டுவார்கள்.

கணவன் - மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை விரசம் இல்லாமல், எளிமையாகவும் மென்மையாகவும் சொன்னதால்தான் மக்கள் அந்தப் படத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

கமல் படம் பற்றி சொல்லிவிட்டேன். அடுத்து, ரஜினியைப் பற்றி சொல்ல வேண்டும். ஒருமுறை பஞ்சு அருணா சலம் அவர்கள், ‘‘தொடர்ந்து ஒரே மாதிரியான படமாக எடுத்துக்கொண்டிருக்கிறோமே, வித்தியாசமாக ஒரு படம் எடுப்போமா?’ என்றார். அதற்கு நான் ‘‘எந்த மாதிரி எடுப்போம்?’’ என்றேன். ‘‘முழுப் படத்தையும் வெளிநாட்டில் படமாக்குவோம்’’ என்றார். ‘‘செலவு அதிகம் ஆகுமே?’’ என்றேன் நான்.

‘‘அதுக்கு என்னிடம் ஒரு ஐடியா இருக்கு’’ என்றார். என்ன ஐடியா அது?

- இன்னும் படம் பார்ப்போம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x