Published : 01 Nov 2013 03:58 PM
Last Updated : 01 Nov 2013 03:58 PM

3 அயர்ன்: உங்கள் வீட்டில் ஒரு அந்நியன்?

ஒரு பெருநகரத்தில் மோட்டார் பைக்கில் சுற்றும் தனிமையான இளைஞன்தான் நாயகன். அவன் திருடன் அல்ல. ஆனால் பூட்டிக் கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து, அந்த வீட்டு உரிமையாளர்கள் வரும்வரை, அந்த வீட்டைப் பயன்படுத்துபவன். அவர்களின் சமையலறையில் சமைத்து உண்டு, அவர்களின் படுக்கையறையில் தூங்கி எழுந்து செல்பவன். அதற்கு நன்றிக்கடனாக அந்த வீட்டில் பழுதான எலக்ட்ரானிக் பொருட்களைச் சரிசெய்து வைப்பான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவான். உடைந்த பொருட்களை நேர்த்தியாக ஒட்டிவைப்பான். அழுக்குத் துணிகளை- உள்ளாடைகள் உட்பட- துவைத்து உலர்த்தி ஓரிரு நாட்களில் வீட்டு உரிமையாளர் வருவதற்குள் அகன்றுவிடுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டவன். அவன் பெயர் டாய்-சுக்.

வேறு மனிதர்கள் வாழும் வாழ்க்கையைத் தற்காலிகமாக வாழ்வதில் காமுறும் டாய்-சுக், முன்னாள் நடிகையும், விளம்பர மாடலுமான சுன்-ஹூவாவின் வீட்டில் நுழைகிறான். யாரும் இல்லை என்று நினைத்துப் பூட்டை உடைத்து நுழையும் அவனை, கணவனாலேயே சிறைவைக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்படும் அந்த நடிகை, டாய்-சுக்கின் செயல்களை மறைந்திருந்து பார்க்கிறாள். ஒருகட்டத்தில் இருவரும் அறிமுகமாகிறார்கள். நடிகையைக் கொடுமைப்படுத்தும் கணவனைத் தாக்கிவிட்டு, நடிகையும், நாயகனும் தப்பிக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து பூட்டப்பட்ட வீடுகளைத் திறந்து, தற்காலிகமாக தங்கிச் செல்கிறார்கள். இப்படியாக ஒரு வீட்டுக்குள் அவர்கள் நுழையும்போது, அந்த வீட்டின் உரிமையாளர் அநாதையாக இறந்துகிடப்பதைப் பார்த்து, உடைந்த பொருட்களைச் சரிசெய்வது போலவே மரியாதைபூர்வமான ஒரு இறுதிச்சடங்கையும் அந்த வீட்டின் தோட்டத்திலேயே நடத்துகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து வேறு வேறு வீடுகளுக்குப் பயணித்தாலும் அவர்களுக்குள் உரையாடல் படம் முழுவதும் இல்லை. மௌனமான உறவின் ஒருகட்டத்தில் உடல்ரீதியாகவும் இணைகின்றனர். மரணமடைந்த மனிதரின் மகன் வீடு திரும்புகிறான்.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தந்தையைக் கொலைசெய்ததாகவும் டாய்-சு மற்றும் சுன்-ஹூவாவின் மீது புகார் கொடுக்கிறான். சுன்-ஹூவாவின் கணவன் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். டாய்-சு சிறைக்குப் போகிறான்.

டாய்-சு சிறையில் ஒரு இடத்தில் இருந்துகொண்டே மறைந்திருக்கும் வினோதமான கலை ஒன்றைப் பயிற்சி செய்கிறான். சிறையிலிருந்து விடுதலை அடைந்தவுடன் சுன்-ஹூவாவின் வீட்டிற்கே திரும்புகிறான். அங்கு மூன்று பேர்(!) சேர்ந்து வாழத்தொடங்குகின்றனர்.

த்ரீ அயர்ன் திரைப்படத்தை இயக்கியவர் கிம் கி டுக். கடந்த பத்து ஆண்டுகளில் உலகச் சினிமாப் பார்வையாளர்களை வியக்கவைத்த கொரிய இயக்குனர் இவர். வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட வன்முறை மற்றும் குரூரங்களை எந்த ஜோடனையும் இல்லாமல் வெளிப்படுத்திய படங்கள் இவருடையது. அதேவேளையில் நவீன மனிதனின் ஆன்மீகத்தேவைகளையும், வெறுமையையும் அவர் தன் படைப்புகள் வழியாகப் பரிசீலிக்கக்கூடியவர்.

உரிமையாளர்கள் வெளியேறிய காலி வீடுகளைப் போல நாம் அனைவரும் இருக்கிறோம். இன்னொருவர் யாருடைய வருகையோ நம்மை நிரப்பும் என்று காத்திருக்கிறோம். அந்தக் விருந்தினரால் விடுதலை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் அந்தக் காலி வீடுகள் காத்திருக்கின்றன.

அத்துடன் நாம் வாழாத இன்னொரு வீட்டின் மீதும், இன்னொரு வாழ்க்கை மீதும் நமக்கு எப்போதும் ஏக்கம் இருக்கிறது. ஒருவகையில் காதலும் காமமும் உறவுகளும்கூட நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் நிரப்பிக்கொள்ள மேற்கொள்ளும் செயல்கள்தானோ என்ற கேள்வியை 3 அயர்ன் திரைப்படம் எழுப்புகிறது.

இப்படத்தில் கிம் கி டுக், நாம் வாழ விரும்பும் இன்னொருவரின் வீடு, இன்னொருவரின் படுக்கையறை, இன்னொருவரின் தோட்டம், இன்னொருவரின் செடிகள், இன்னொருவரின் வளர்ப்பு மீன்கள் ஆகியவற்றுடன் வாழ நம்மை அழைத்துச் செல்கிறார். அது இன்னொருவருடையது என்ற எண்ணமே ஒரு குறுகுறுப்பையும், ரகசியக் கிளர்ச்சியையும் அளிக்கிறது.

ஒருவகையில் நாம் எல்லாருமே ஒரு காலியான இன்னொருவரின் வீட்டுக்குள் நுழைவது போலத்தான் இந்த உலகத்திற்குள் வருகிறோம். ஆனால் அந்தக் குறுகுறுப்பையோ, மகிழ்ச்சியையோ நாம் ஏன் அடைவதில்லை?

படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறு திருடன் போன்று தோன்றும் நாயகன், படத்தின் இறுதியில் பொருள் சார்ந்த தளத்திலிருந்து மேலெழுந்து தன் இருப்பே தெரியாமல் மறைந்து வாழும் ஒரு ஞானியை ஒத்தவனாக மாறிவிடுகிறான். அவன்தான் விடுதலை பெற்றவன் என்று கிம் கி டுக், ஒரு அழகிய ஜென் கதை போன்ற எளிமையுடன் சொல்லிவிடுகிறார்.

கிம் கி டுக் எடுத்த படங்களிலேயே எளிமையானதும், வன்முறைக் காட்சிகள் குறைவானதுமான படம் இது. மிக அமைதியான பௌத்தச் சடங்குகளை ஒத்த தன்மையுடன் இப்படத்தின் காட்சிகள் அமைதியும், கவித்துவத்துவமும் கூடியவை. கிம் கி டுக்கின் உலகிற்குள் நுழைய இந்தப் படம் நல்ல அறிமுகமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x