Last Updated : 21 Feb, 2014 12:00 AM

 

Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

சர்வதேச சினிமா: சிறகு முளைத்த மிதிவண்டி

கால்களுக்குக் கீழே பூமி வழுக்கிச் செல்லும் அற்புதத்தை நமக்கு அறிமுகப்படுத்தி வைப்பவை மிதிவண்டிகள். பால்யத்தின் முதல் சிறகைத் தரும் மிதிவண்டி அனுபவம் சவூதி அரேபிய தேசத்தின் பெண்களுக்கு கிடைப்பதே இல்லை. அங்கே ஆண்களுக்கு இணையாக மிதிவண்டியோட்டப் பெண்களுக்கு அனுமதி கிடையாது. சவூதியின் கட்டுப்பாடுகள் பெண்களின் சிறகுகளை முற்றாக வெட்டிப்போடுபவை. திரையரங்குகளே இல்லாத அந்ததேசத்தின் முதல் திரைப்படத்தை இயக்கி, துணிச்சலாக சுதந்திரச் சிறகு விரித்திருக்கிறார் திருமதி ஹய்பா அல்-மன்சூர்(Haifaa Al-Mansour). ஓரு சிறுமியின் மிதிவண்டிக் கனவை, அரேபியே பெண்ணியத்தின் குறியீடாகச் சித்தரித்து, இவர் இயக்கியிருக்கும் வாஜ்தா(2012) திரைப்படம், உலக அளவில் அள்ளிவந்திருக்கும் விருதுகளின் பட்டியல் நீளமானது. கடந்த ஆண்டு சிறந்தவெளிநாட்டுப் படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது இந்தப் படம்.

சவூதி அரரேபியாவின் தலைநகரான ரியாத்தின் ஒருபகுதியில் தனது தாய் தந்தையுடன் வசிக்கிறாள் 11 வயதே நிரம்பிய வாஜ்தா. அவள் வயதையொத்த அப்துல்லா அவளது பக்கத்து வீட்டுத் தோழன். பள்ளிக்கூடத்துக்கு அவன் மிதிவண்டியில் தினசரி சிட்டாகப் பறந்து வரும் அழகை ஏக்கத்துடன் பார்க்கிறாள். அவள் பள்ளி சென்று திரும்பும் வழியில் ஒரு அங்காடி. அங்கே விற்பனைக்காக சைக்கிள்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பச்சை நிற சைக்கிள் அவளது உள்ளத்தைக் கொள்ளையடிக்கிறது. தினசரி அதை ஏக்கமாகப் பார்த்துச்செல்லும் அவள், அம்மாவிடம் தனக்கு சைக்கிள் வேண்டும் என்று கேட்கிறாள். “பெண்கள் சைக்கிள் பழக அனுமதியில்லை. உன்னை ஆண் பிள்ளை என்று நினைக்காதே! அப்பாவுக்குத் தெரிந்தால் நீ தொலைந்தாய்” என்று அம்மா எச்சரிக்கிறாள். என்றாலும் மகளின் சுதந்திரத்தை அந்த இளம்தாய் மதிக்கிறாள். தனக்குக் கிடைக்காத சுதந்திரம் அவளுக்காவது கிடைக்கட்டும் என்று நினைக்கிறாள்.

தனக்கு பிடித்தமான பச்சை நிற சைக்கிளை தானே வாங்கினால் என்ன என்று சின்னச்சின்ன பொருட்களை விற்றுப் பணம் சேர்க்கத் தொடங்குகிறாள். ஆனால் சைக்கிளின் விலை 800 சவூதி ரியால்கள். இந்த நேரத்தில் வாஜ்தாவின் பள்ளியில் குர்ஆன் ஒப்புவிக்கும் போட்டி அறிவிக்கிறார்கள். அதில் பங்கேற்கும் மாணவிகளைப் பெயர் கொடுக்க அழைக்கிறார் வகுப்பாசிரியர். முதலில் பெயர் கொடுக்காத வாஜ்தா, போட்டியில் வெல்லும் மாணவிக்கு 1000 ரியால்கள் முதல் பரிசு என்றதும் ஓடி வந்து பெயர் கொடுக்கிறாள். போட்டியிலும் வெல்லும் அவள், தனது கனவான பச்சை நிற சைக்கிளை வாங்கிப் பழகினாளா? அப்துல்லாவை சைக்கிள் பந்தயத்தில் வென்று காட்டினாளா என்பதுதான் திரைக்கதை. இதில் சவுதி அரேபிய வாழ்வியலில் பெண்களின் இன்றைய நிலை, அங்கிருக்கும் அரசியல் சூழல் இரண்டையும் எளிய படிமங்களாகவும் குறியீடுகளாகவும் நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஹய்பா.

“என்னை நீ ஜெயிச்சிட முடியும்னு நினைக்கிறாயா?” என்று அப்துல்லா கேட்கும்போது,

“எனக்கு மட்டும் சைக்கிள் கிடைச்சுட்டா நாம ரெண்டு பேரும் சமம்தான்” என்ற வாஜ்தாவின் பதில் வழியாக பச்சை நிற சைக்கிளை, சவூதி அரேபியப் பெண்களின் சுதந்திரமாக உருவகித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

வாஜ்தாவின் சைக்கிள் கனவுக்கு நடுவே அவளது தந்தை வேறொரு பெண்ணை மணந்துகொள்ளத் தயாராகிறார். இதனால் தனது அம்மாவுக்கு ஏற்படும் மனப் போராட்டாங்களை வாஜ்தா உணராமால் இல்லை. அம்மா, மகள் இரண்டு பேருமே தங்கள் சுதந்திரத்துக்காகப் போராடுவதைப் பிரச்சாரம் இல்லாத காட்சிகளின் வழியே அழுத்தமாக பேசுகிறது வாஜ்தா.

ஒரு கவிஞருக்கு மகளாகப் பிறந்த ஹய்பா முறையாகத் திரைப்படக் கல்வி கற்று, குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் வழியாகப் பயணித்து, சவூதி அரேபியாவின் முதல் திரைப்படத்தை உலகத் தரத்துடன் அளித்திருக்கிறார். விக்டோரியா டிசிகா, பிரான்ஸிஸ் த்ரூபோ போன்ற படைப்பாளிகள் மூலம் பெற்றுக்கொண்ட படைப்பூக்கத்தை மிகச் சரியாகத் தனது திரைமொழியில் பிரதிபலிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். சவூதியில் படைப்புக் காற்று சற்று சுதந்திரமாக வீசுவதற்கான சமகால சாட்சியாகியிருக்கிறது ‘வாஜ்தா’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x