

பின்னணி பாடகி சின்மயியும், நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது.
’சிவாஜி’ படத்தில் ‘சஹானா’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ‘அன்பில் அவன்’, ‘வாகை சூட வா’ படத்தில் ‘சர சர’ உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களை பாடியவர் சின்மயி. அதுமட்டுமன்றி பல்வேறு படங்களில் நாயகிக்கு பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.
சின்மயிக்கும், ‘மாஸ்கோவின் காவேரி’ படத்தில் நாயகனாக அறிமுகமான ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சின்மயின் அம்மா பத்மஹாசினி அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் “ ராகுல் ரவீந்திரன் எனக்கு மருமகனாக வரவிருக்கிறார் என்பதனை மிகவும் சந்தோஷமாக அறிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இவரது இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் சின்மயிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ராகுல் ரவீந்தரும் ட்விட்டர் தளத்தில் இருப்பதால் அவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இத்திருமண அறிவிப்பு குறித்து ராகுல் ரவீந்தர் “ பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணமாகும். அனைவருமே உடனே திருமணம் செய்ய இருக்கிறோம் என்று பேசி வருகிறார்கள். ஆனால் திருமணம் அடுத்த ஆண்டு தான் நடைபெறும். சின்மயிக்கும் எனக்கும் சில மாதங்கள் தான் பழக்கம். ஆனால் எங்களது பெற்றோர் சந்தித்து பேசி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.
செப்டம்பர் 11ம் தேதி வெளியாக இருக்கும் ‘வணக்கம் சென்னை’ படத்தில் ராகுல் ரவீந்தர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.