திரை விமர்சனம்: ரம்

திரை விமர்சனம்: ரம்
Updated on
1 min read

உக்கிரமான கோபத்தோடு காத் திருக்கும் ஆன்மாக்களிடம் 5 திருடர்கள் மாட்டிக்கொள்வ தால் நிகழும் சம்பவங்கள்தான் ‘ரம்’.

நாயகன் ரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட கடத்தல் குழுவினர் கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்படும் விலைமதிப்பற்ற அரிய வகை கற்களைக் கொள்ளை அடிக்கின்ற னர். இதை முன்கூட்டியே அறிந்த காவல் துறை அதிகாரி நரேன், அதில் தானும் ஒரு பங்கை எடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு, இந்தக் கடத்தல் குழு வினருடன் தன் ஆள் ஒருவனை அவர்களுக்கே தெரியாமல் சேர்த்து விடுகிறார்.

விலை மதிப்பற்ற அந்தக் கற்களைக் கடத்தியதும், நரேனுக்கு இதில் பங்கு கொடுக்கக் கூடாது என்ற முடிவோடு கொள்ளையர்கள் ஏலகிரி அருகே உள்ள நிலாத் தோட்டம் என்ற இடத்தில் உள்ள பாழடைந்த பங்களா வில் தஞ்சம் அடைகின்றனர். இறந்த ஆன்மாக்கள் அந்த வீட்டில் சுற்றி வருவது அவர்களுக்குத் தெரியவருகிறது. பேய்களிடம் சிக்கிக்கொள்ளும் அந்த 5 கொள்ளையரின் நிலை என்ன? அந்தத் திருடர்களைத் தேடும் காவல் அதிகாரி நரேன் விலை மதிப்பற்ற கற்களை அவர்களிடம் இருந்து பறிக்க முடிந்ததா? இதுதான் கதை.

பேய் படத்துக்கே உரிய களம், கதையின் கரு, ஆன்மா குறித்த காரணங்கள் போன்றவற்றில் மெனக் கெட்டிருக்கும் இயக்குநர் சாய் பரத், திரைக்கதை வேகத்தில் படு சுமாராகவே கவனம் காட்டியிருக்கிறார். திரைக்கதையில் பேய் படத்துக்கான த்ரில்லிங் இல்லாததால் ஆரம்பம் முதலே படம் மெதுவாக நகர்கிறது. நரேன், விவேக், சஞ்சிதா ஷெட்டி போன்ற நடிகர்கள் இருந்தும் கதையின் ஒவ்வொரு காட்சியும் வலுவின்றி ஊர்ந்து செல்கிறது. பேய்களிடம் மாட்டிக்கொள்ளும்போது விவேக் அடிக்கும் காமெடிகள் சற்று சலிப்பைப் போக்கினாலும் அதில் பல, இரட்டை அர்த்தத்துடன் முகம் சுளிக்க வைக்கின்றன.

சில நிமிடங்களே வந்து செல் லும் நாயகி மியா ஜார்ஜ் நடிப்பு கச்சிதம். நாயகன் ரிஷிகேஷ் பல இடங்களில் ஒரே மாதிரி முக பாவனையையே வெளிப்படுத்துகிறார்.

அனிருத் இசை, காட்சிகளில் அவ் வளவாக ஒட்டவில்லை. பாடல்களும் கவனத்தைப் பெறவில்லை. இரவையும், பேய் பங்களாவையும் விக்னேஷ் வாசுவின் கேமரா காட்சிப்படுத்திய விதம் சற்று பரவாயில்லை.

கடத்தல் கும்பலின் வேலை, காவல் அதிகாரியின் திட்டம், ஆன்மாக்களை சாந்தப்படுத்துவதற்கான காரணம் உள்ளிட்டவை தெளிவாக இருந் தும்கூட, எதையும் நேர்த்தியாகப் பிரதிபலிக்காததால் இந்த ‘ரம்’ பெரிதாக ஈர்க்கவில்லை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in